TNPSC Thervupettagam

மிஸோரம் தேசம் பேச வேண்டிய விவகாரம்

November 30 , 2023 395 days 232 0
  • பல வகைகளிலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது 2024 மக்களவைத் தேர்தல். அதற்கு முந்தைய கடைசித் தேர்தலான மிஸோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா - ஐந்து மாநிலத் தேர்தலை அரசியல் ஆர்வமுடைய எவரும் கவனிப்பது அவசியம்.
  • பத்தாண்டுகளில் பிரதமர் மோடியும், பாஜகவும் எத்தகைய மாற்றங்களைத் தேர்தல் களத்திலும் சமூகத்திலும் உருவாக்கியுள்ளனர் என்பதை மிக நெருக்கமாகக் காட்டும் தேர்தல் இது. அரிதாக, பாஜகவுக்கு இணையாகவோ, பாஜகவைக் காட்டிலும் பலமாகவோ காங்கிரஸ் உள்ள மாநிலங்கள் இவை.
  • 2014 மக்களவைத் தேர்தல் சமயத்தில் நாடு தழுவிப் பயணித்து, ‘இந்தியாவின் வண்ணங்கள்தொடரை எழுதிய சமஸ், 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டிய பயணத்துக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தலை ஒட்டிப் பயணித்தார். தேர்தல் மாநிலங்களின் வரலாற்று - சமூக - அரசியல் பின்னணியுடன் அந்தந்த மாநிலத்தவர்களுடனான உரையாடலின் அடிப்படையில் 5 மாநிலங்களின் சூழலையும் இங்கே தருகிறார்.
  • முன்னதாக தினமலர்இதழில் வெளியான கட்டுரைகளின் முழு வடிவம் இப்போது அருஞ்சொல்இதழில் வெளியாகிறது.
  • ஐந்து மாநிலத் தேர்தல் களத்தில், மிகச் சிறிய மாநிலம் என்றாலும் மிஸோரம் தேசிய அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட காரணங்கள் உண்டு. பொதுவாகவே சிறியவை அதீத நுட்பங்கள் கொண்டவை.
  • இந்தியாவின் 8% நிலப்பரப்பையும், 3% மக்கள்தொகையையும் மட்டுமே கொண்டிருக்கும் வட கிழக்கு பிராந்தியம் ஏன் 8 மாநிலங்களாக நிர்வகிக்கப்படுகிறது? அப்படியும் ஏன் ஏராளமான உள்மோதல்களை ஒவ்வொரு மாநிலமும் எதிர்கொள்கின்றன?
  • இந்தக் கேள்விகளை எழுப்பிக்கொண்டால், ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் ததும்பிக்கொண்டிருக்கும் கலாச்சாரங்களின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும். வடகிழக்கில் மட்டும் 200க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இந்திய அடையாளத்தையோ மாநில அடையாளத்தையோ முழுமையாக ஏற்கவில்லை.
  • தனி நாடு கேட்டு போராடியதுடன் அரை நூற்றாண்டுக்கு முன்னர் சுதந்திரப் பிரகடனத்தையும் வெளியிட்ட பிராந்தியம் இது. 1966இல் தன்னுடைய சொந்த நாட்டிலேயே இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்திய இடம் இது என்று மிஸோ மூத்தோர் அந்த நாட்களை நினைவுகூர்கின்றனர். மெல்ல பேச்சுவார்த்தைகள் நகர்ந்தன. அமைதி உடன்படிக்கையின் விளைவாக 1986இல் மிஸோரமும் ஒரு மாநிலம் ஆனது.
  • இன்று உலகிலேயே அமைதியான பிராந்தியங்களில் ஒன்றாகத் திகழ்கிறது மிஸோரம்; இது சமாதானத்தில் மிஸோக்கள் வெளிப்படுத்தும் உறுதிக்கான சான்று என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார் முதல்வர் சோரம்தங்கா. பெருமைக்குரியவர்கள்தான் மிஸோக்கள். இன்றைக்கு நாட்டிலேயே முதுமையான முதல்வராகிவிட்டிருக்கும் 80 வயது சோரம்தங்கா தன்னுடைய இளமைக் காலத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய போராளிகளில் ஒருவர்.
  • மலைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள் நிறைந்த பசும்பூமி இது. பிராந்தியத்தின் பெரும் பகுதி வனம். இந்திய மாநிலங்களில் அதிக சதவீதப் பரப்பளவு (90.68%) காடுகளைக் கொண்டது. பல்வேறு இனக் குழுக்களும் குடியேறிய நிலமான இது முன்பு லுஷாய்என்று அழைக்கப்பட்டது.
  • இந்தியத் துணைக் கண்டத்தின் பேராட்சியாளர்கள் எவரும் இந்தப் பிராந்தியத்தை வளைக்க முடியவில்லை. 1891இல் பிரிட்டிஷார் தங்களுடைய நிர்வாகத்துக்குள் கொண்டுவரும் வரை லுஷாயை இங்குள்ள பழங்குடிக் குழுக்களே ஆங்காங்கே நிர்வகித்தனர். பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் அஸாம் நிர்வாகம் இங்கே கால் பதித்தது.
  • சுதந்திரத்துக்குப் பிறகும் இதே கலாச்சாரமே நீடித்தது. அஸாமியர்கள் இந்தப் பிராந்தியத்தின் நலன்களைப் பொருட்படுத்தவில்லை. இதனால் மெல்லத் திரளலான அதிருப்தி 1959-60 பஞ்ச காலகட்டத்தில் உச்சத்தை அடைந்தது. அரசின் அலட்சியம் தங்களுக்குத் தாங்களே உதவிக்கொள்ளும் சூழலை மிஸோக்களிடம் உண்டாக்கியது. அப்படி உதவுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்றுதான் 1961இல் மிஸோ தேசிய முன்னணிஅரசியல் அமைப்பாக உருவெடுத்தது.
  • லால்தெங்காவால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு விரைவில் ஆயுதம் ஏந்தியது. அடுத்த ஐந்தாண்டுகளில் பெரும் எழுச்சியை மிஸோ சமூகத்திடம் உருவாக்கியது. 1966இல் கிளர்ச்சியை இந்திய அரசு ஒடுக்கினாலும், இவர்களுடைய தலைமறைவுச் செயல்பாடுகள் தொடர்ந்தன. 1972இல் மிஸோக்களின் நிலம் என்ற பொருள் தரும் மிஸோரம்எனும் பெயருடன் இந்தப் பிராந்தியம் தனி ஒன்றிய பிரதேசமாக்கப்பட்டாலும், அது முழு அமைதியைக் கொண்டுவரவில்லை.
  • ராஜீவ் ஆட்சிக் காலத்தில் 1986இல் முன்னெடுக்கப்பட்ட அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் லால்தெங்காவை ஆயுதங்களைக் கீழே போட வைத்தன. மிஸோரம் மாநிலம் ஆனது; லால்தெங்கா அதன் முதல்வர் ஆனார்.
  • மிஸோ தேசிய கூட்டணியில் லால்தெங்காவுக்குப் பக்க பலமாக இருந்த முக்கியமான தலைவர்களில் ஒருவர் இன்றைய முதல்வர் சோரம்தங்கா. மிஸோ தேசிய கூட்டணியில் தொடக்கக் காலத்தில் இருந்து, காங்கிரஸில் இணைந்த தலைவர் லால்தன்வாலா. ஒன்றிய பிரதேசமாக இருந்த காலத்திலேயே மிஸோரம் முதல்வராக இருந்தவர் இவர்.
  • மாநிலமாக மிஸோரம் அறிவிக்கப்பட்டபோது லால்தெங்கா முதல்வர் பொறுப்பை ஏற்க வசதியாக தன்னுடைய பதவியிலிருந்து விலகினார் லால்தன்வாலா இதுவும் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இருந்தது. 1990இல் லால்தெங்கா இறந்துவிட்டார்.
  • இதற்குப் பிந்தைய கால் நூற்றாண்டு அரசியல் சோரம்தங்கா அல்லது லால்தன்வாலா என்றே செல்கிறது. மிஸோரமின் நீண்ட கால முதல்வர் எனும் பெருமைக்குரிய லால்தன்வாலாவுக்கு இப்போது வயது 85 ஆகிறது. இருவருமே இந்தத் தேர்தலுக்கு அடுத்து, இளைய தலைமுறையிடம் கட்சியை ஒப்படைத்துவிடுவார்கள் என்ற பேச்சை மக்களிடம் கேட்க முடிகிறது.
  • பழங்குடி சமூகங்களில் மூத்தோருக்கு மதிப்பு அதிகம் என்பதால், மிஸோரம் உருவாக்கத்துக்குப் பங்களித்த முன்னோடிகள் எனும் மதிப்பு இருவர் மீதுமே இருக்கிறது. இதனூடாக ஸோரம் மக்கள் இயக்கத்தின் லால்துஹுமா புதிய அரசியல் தலைவராக உருவெடுத்திருக்கிறார். இளைய தலைமுறை பொறுப்பேற்க வேண்டும் எனும் குரலுக்கு ஒரு செல்வாக்கு இருக்கிறது. 2018 தேர்தலில் இவருடைய கட்சி ஆறு இடங்களைக் கைப்பற்றியது. மாநிலத்தில் பாஜகவுக்கு என்று தனி செல்வாக்கு இல்லாத நிலையில், ஸோரம் மக்கள் இயக்கத்தைத் தேர்தலுக்குப் பின் பயன்படுத்தும் எனும் பேச்சு இருக்கிறது. எதுவாயினும் மூத்த தலைமுறையின் அரசியல் இந்தத் தேர்தலோடு முடிவுக்கு வருவது உறுதியாகிறது.
  • மிஸோரம் இன்று பல வகை சவால்களை எதிர்கொள்கிறது; இந்தச் சவால்களில் பெரும்பாலானவை இந்திய அரசின் பார்வை, கொள்கைகளோடும் பிணைந்தவை.
  • பல குழுக்கள் என்றாலும், ‘மிஸோஎனும் அடையாளத்துக்குள் உருத்திரண்ட இந்த மக்களுடைய முன்னேற்றம் நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்கள் மீது தாக்கத்தை உண்டாக்கக் கூடியது. ஏனெனில், மாநில மக்கள்தொகையில் 95% பேர் பழங்குடி வரையறைக்குள் வரக் கூடியவர்கள். நாட்டில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை கொண்ட சில மாநிலங்களில் ஒன்றும் அது 86% பேர் கிறிஸ்தவர்கள். ஆயினும், பழங்குடி சமூகங்களுக்கு இடையிலான பகைமை, பாரதூர வளர்ச்சி வேறுபாடுகள் குறைந்த சமூகம் இது.
  • நாட்டிலேயே கேரளத்துக்கு அடுத்து, அதிக அளவில் கல்வியறிவு பெற்ற சமூகம். ஆனால், மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் இன்னமும் விவசாயத்தையும் கட்டுமானப் பணிகளையுமே நம்பியுள்ளனர். வறுமையும் அதிகம். மாநிலத்தின் 13 லட்சம் மக்கள்தொகையில், ஐந்தில் ஒருவர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறார்.
  • மிஸோரத்துக்கு என்று தனிப்பட்ட பொருளாதார பலம் இல்லை; மாநிலத்தைக் கடன் சுமை அழுத்துகிறது. வட கிழக்கு பிராந்தியத்தின் பல மாநிலங்களைப் போன்று அதுவும் மத்திய அரசின் நிதியையே நம்பியிருக்கிறது. தெற்காசிய நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் வகையில், ‘கிழக்கில் செயல்படுவோம் கொள்கை’ (Act East Policy) முடிவை மோடி அரசு அறிவித்தது, வட கிழக்கில் புதிய நம்பிக்கைகளை விதைத்தது.
  • மியான்மருடனும் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மிஸோரமில் இரு திட்டங்களை ராஜதந்திரரீதியில் மத்திய அரசு அறிவித்தது. கொலோடைன் நதியை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம் மியான்மருடனான புதிய வர்த்தகங்களுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டாலும், மிஸோரமின் பசிக்கு முன் இதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல என்கிறார்கள். இதனூடாக அகதிகள் பிரச்சினையும் இங்கு பேசப்படும் ஒன்றாகி இருக்கிறது.
  • மணிப்பூர் கலவரத்தின்போது இரு வகைகளில் மிஸோரம் பாதிப்புக்குள்ளானது. அங்கே கலவரத்தில் பாதிக்கப்பட்ட குக்கிகளுடன் உறவுப் பின்னணி கொண்டவர்கள் மிஸோக்கள். உணர்வுரீதியாக இது மிஸோக்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியதுடன், கலவரத்தின் விளைவாக மாநிலத்தின் 11 மாவட்டங்களும் அங்கிருந்த வந்த அகதிகளால் சூழப்பட்டது பெரும் பொருளாதார இடரையும் மிஸோரம் அரசுக்குத் தந்தது. மத்திய அரசிடமிருந்து அப்போது நிதியுதவி கோரியது மிஸோரம். பலனில்லை. இதெல்லாம் இந்தத் தேர்தலில் பேசப்படுகின்றன. உள்நாட்டில் இடம்பெயரும் அகதிகளுக்குத் தஞ்சம் தருவது தொடர்பாகக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்கிறது.
  • சுவாரஸ்யம் என்னவென்றால், இப்போதைய சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஏனைய இடங்களில் எல்லாம் மாநில விவகாரங்களுக்கு இணையாக தேசிய விவகாரங்களும் இப்போது முக்கியத்துவம் அளித்துப் பேசப்படுகின்றன. மிஸோரம் களத்தில் முழுக்க மாநில விவகாரத்தைப் பேசுகிறார்கள். ஆனால், அவற்றில் பல தேசிய விவகாரங்களாக இருக்கின்றன.

நன்றி: அருஞ்சொல் (30 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்