TNPSC Thervupettagam

மீட்கப்பட வேண்டிய குறவர் சமூகம்

November 8 , 2023 431 days 1133 0
  • சமீபத்தில் பழங்குடிச் சான்று கேட்டு, எவ்வளவோ போராடியும் கிடைக்காத விரக்தியில் மயிலாடுதுறை வேல்முருகன் (45) என்பவர், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், நீதிபதிகளின் ஓய்வறை முன்பாகவே தீக்குளித்து இறந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முன்பும் பின்புமாகப் பல சமூகங்கள் தங்களது விடுதலையைத் தாங்கள் விரும்பிய பெயரிலேயே அடைந்திருக்கின்றன.
  • ஆனால், சமகாலம்வரையிலும் விடுதலை அடையாத சமூகங்களில் ஒன்று குறவர் சமூகம். ‘ஆதிகுடி’, ‘மூத்த குடி’, ‘தொல்குடி’, ‘குறிஞ்சி நில மக்கள்’ என்று பெருமிதத்துக்குரிய பெயர்களுடன் அழைக்கப்பட்டாலும் சமூகத் தளத்தில் இச்சமூகம் மிகவும் பின்தங்கியுள்ளது. சரியான வழிகாட்டுதலும் அரசியல் தலைமையும் இல்லாமல் கையறு நிலையில் தவிக்கிறது இச்சமூகம்.
  • காலனிய ஆட்சிக் காலத்தில் முத்திரை குத்தப்பட்ட ‘குற்றச் சமூகம்’ என்னும் அவப்பெயரை இன்றுவரையிலும் துடைக்க முடியாமல் குறவர் சமூகம் அல்லல்படுகிறது. அதனாலேயே திருட்டுக் குற்றத்துக்காகத் தினமும் விசாரணை என்கிற பெயரில் குறவர் இன ஆண்களும் பெண்களும் அழைத்துச் செல்லப்பட்டுச் சொல்லொண்ணாத் துயரை அனுபவித்து வருகிறார்கள்.

வெவ்வேறு சாதிகளாக

  • ஒரு சமூகம் ஏதேனும் ஒரு சமூகப் பிரிவில்தானே இடம்பெற முடியும்? ஆனால் கொடும் சாபமாக, எல்லாப் பட்டியலுக்குள்ளும் குறவர் சமூகம் இடம்பெறுவதை என்னவென்று புரிந்து கொள்வது? ஆனால், அப்படித்தான் அரசு ஆவணத்தில் உள்ளது. அரசு தரும் பதிவைப் பாருங்கள் (வரிசை எண்ணோடு)...
  • ஆதிதிராவிடர் பிரிவில், 36. குறவன் சித்தனார்; பழங்குடியினர் பிரிவில், 23. மலைக் குறவன் / மலக் குறவன்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில், 124. வேடுவர் மற்றும் வேடர்; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில், 15. கொரச்சா; சீர்மரபினர் பிரிவில், 1. ஆத்தூர் கீழ்நாடு குறவர்கள் 2. ஆத்தூர் மேல்நாடு குறவர்கள் 8. சி.கே.குறவர்கள் 10. சங்கயம்புடி குறவர்கள் 13. தொப்பக் குறவர்கள் 16. தொங்க ஊர் கொறச்சாக்கள்18. தொப்பைக் கொறச்சாக்கள் 19. தாபி குறவர்கள் 23. கந்தர்வக்கோட்டைக் குறவர்கள் 25. இஞ்சிக்குறவர்கள் 30. குறவர்கள் 31.
  • களிஞ்சிதாபி குறவர்கள் 34. கலக்குறவர்கள் 36. கேப்மாரிகள் 38. மொந்த குறவர்கள் 44. பொன்னை குறவர்கள் 50. சேலம் மேல்நாடு குறவர்கள் 51. சேலம் உப்புக் குறவர்கள் 52. சர்க்கரைத்தாமடைக் குறவர்கள் 53. சாரங்கபள்ளி குறவர்கள்56. தல்லி குறவர்கள் 59. தோகைமலைக் குறவர்கள் அல்லது கேப்மாரிகள் 60. உப்புக்குறவர் அல்லது செட்டிப்பள்ளி குறவர்கள் 62. வயல்நாடு அல்லது நவல்பேட் கொரசாக்கள் 63. வடுவார்பட்டி குறவர்கள் 66. வேட்டா குறவர்கள் 67. வரகநேரிக் குறவர்கள்.

சான்றிதழ்ச் சிக்கல்கள்

  • இந்தப் பெயர்க் குழப்பமே இச்சமூகத்துக்குக் கேடாகவும் முடிகிறது. இதனால், இச்சமூகத்தினர் சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பட்டியல் சாதிப் பிரிவுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தால், நீங்கள் ‘சீர் மரபினராயிற்றே’ என்று நிராகரிப்பதும்; பழங்குடியினர் சான்று கேட்டால், நீங்கள் ‘பட்டியல் சாதியாயிற்றே’ என்று மறுப்பதும் அரசு அலுவலகங்களில் தொடரும் நடவடிக்கை. சீர் மரபினர் பட்டியலில் இடம்பெறும் மொத்த சாதிகள் 68.
  • இவற்றில் 27 சாதிகளாகக் குறவர் சமூகம் சிதறடிக்கப்பட்டுள்ளது. ஒரே சமூகம் இத்தனைப் பெயர்களில் எப்படி அடையாளப்படுத்த முடியும்? இதனால் பல இளம் தலைமுறையினர் கல்விக் கூடத்துக்குள் நுழைய முடியாமல் தவித்துவருகின்றனர். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் மிகுந்த கவனத்தைச் செலுத்திப் பட்டியலை ஒழுங்கு செய்ய வேண்டும். குறவர் சமூகத்தினை மீட்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல; ஒட்டுமொத்த பொதுச் சமூகத்தின் கடமையும் ஆகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்