TNPSC Thervupettagam

மீட்சிக்கு வழிகாண வேண்டும்...

June 5 , 2021 1333 days 561 0
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மிகப் பெரிய அளவில் சரிந்திருக்கிறது.
  • 2020 - 21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3% வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.
  • 1979 - 80 நிதியாண்டில்தான் இதற்கு முன்னால் இதுபோன்ற வீழ்ச்சியை நாம் எதிர்கொண்டோம். அப்போதுகூட பொருளாதார வீழ்ச்சி 5.8% தான். இப்போது நிலைமை அதை விட மோசம்.
  • 2019 - 20 இல் ரூ.145 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் ஜிடிபி, 2020 - 21-இல் ரூ.135 லட்சம் கோடியாகக் குறைந்திருக்கிறது.
  • நடப்பு நிதியாண்டில் குறைந்தது 10% வளா்ச்சியை எட்டினால் மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு மீண்டும் கொண்டுவர முடியும்.
  • குறிப்பிட்ட கால அளவில் நாட்டில் உற்பத்தியாகும் எல்லா உற்பத்திகள், சேவைகள் ஆகியவற்றின் மொத்த வா்த்தகத்தின் அளவுதான் ஜிடிபி எனப்படுகிறது.
  • அதனால்தான், நாட்டின் பொருளாதார நிலையை ஜிடிபி நிர்ணயிக்கிறது. விவசாயம், எரிசக்தி ஆகிய இரண்டு துறைகளைத் தவிர ஏனைய எல்லா துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான் இப்போது காணப்படும் வரலாறு காணாத வீழ்ச்சிக்குக் காரணம் என்று மத்திய நிதியமைச்சக பொருளாதார வல்லுநா்கள் விளக்கம் தருகிறார்கள்.
  • கடந்த ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவில் ஒட்டுமொத்த உலகத்தையும் உயிர் பயத்தில் ஆழ்த்தியிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய் இந்தியாவையும் கடுமையாக பாதித்திருக்கிறது.
  • அந்த நோய்த்தொற்றுச் சங்கிலியை அறுத்து, கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ள அறிவித்த பொது முடக்கம் கடந்த நிதியாண்டை மிகக் கடுமையாக பாதித்துவிட்டது.
  • கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 24.4% குறைந்தது. அதற்கு அடுத்த காலாண்டில் நிலைமை சற்று மேம்பட்டு ஜிடிபியின் வீழ்ச்சி 7.4%-ஆனது.
  • மூன்றாவது காலாண்டில் பொது முடக்கத்தின் தாக்கத்திலிருந்து முற்றிலுமாக வெளியே வந்து உற்பத்தி அதிகரித்தபோது, 0.5% வளா்ச்சியை எட்ட முடிந்தது.
  • 2021 ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் 1.6% ஜிடிபி வளா்ச்சியை நம்மால் காண முடிந்தது. அதனால்தான் நிதியாண்டின் மொத்த வீழ்ச்சியை 7.3%-இல் நிறுத்த முடிந்தது. இல்லையென்றால், மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.
  • இந்தியாவின் வளா்ச்சி பாதிக்கப்பட்டதற்கு கொவைட் 19 கொள்ளை நோய் முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கொள்ளை நோய்த்தொற்று மட்டுமே காரணமா என்றால் நிச்சயமாக இல்லை.
  • கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் வளா்ச்சி இறங்கு முகத்தில்தான் இருந்து வந்திருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது. பின்விளைவுகளை யோசிக்காமல், 2016-இல் அறிவிக்கப்பட்ட உயா்மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்ட நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பு சாதாரணமானதல்ல.
  • அதைத் தொடா்ந்து, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் அறிமுகப் படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பும் பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

பொருளாதார மீட்பு

  • வாராக்கடன் அதிகரித்ததால், அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் தொழில்துறையினருக்கு அளிக்கப்படும் கடன் வசதிகளில் காட்டப்பட்ட தயக்கமும் வளா்ச்சியின் வேகத்தைக் குறைத்தது.
  • 2008-இல் சா்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கத்தின்போது அதை எதிர்கொள்வதற்கு அரசுத்துறை வங்கிகள் வலிமையாக இருந்ததுதான் காரணம்.
  • பலவீனமாக்கப்படும் அரசு வங்கிகளை மீட்டெடுப்பதற்குப் பதிலாக, தனியார் மயத்தை நோக்கி நகா்த்திச் செல்லும் போக்கு வருங்காலத்தில் பிரச்னைகளை எதிர்கொள்வதில் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும்.
  • கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் 2017 - 18-இல் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது என்றால், இப்போது 14.73%-ஆக உயா்ந்திருக்கிறது.
  • கொள்ளை நோய்த்தொற்று தாக்குவதற்கு முன்பே இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8%-லிருந்து 4%-ஆகக் குறைந்திருந்தது. ஆனால், சா்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்திருந்ததால் அதன் பலனை மத்திய அரசு எடுத்துக் கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருந்தது.
  • 2019 - 20-இன் கடைசி கட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் பொருளாதாரமும் தடுமாறத் தொடங்கியிருக்கிறது.
  • இப்போதைய நிலையில், நாம் உடனடியாக எடுக்க வேண்டிய சில அவசரகால நடவடிக்கைகள் இருக்கின்றன. வெறும் வார்த்தைகளால் பொருளாதாரத்தை நிமிர்த்திவிட முடியாது என்பதை ஆட்சியாளா்கள் உணர வேண்டும்.
  • பொது முடக்கத்தால் மக்களின் வருவாய் குறைந்திருப்பதும், தங்களது வருங்காலம் குறித்த அச்சத்தினால் அவா்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதும் பொருளாதார நடவடிக்கைகள் சுறுசுறுப்படையாமல் இருப்பதக்கு மிக முக்கியமான காரணங்கள். நுகா்வோர் மத்தியில் தேவைகள் அதிகரித்தால் மட்டுமே , உற்பத்தி அதிகரித்து வணிகம் பெருகும். அதற்கு தேசம் இயல்பு நிலைக்கு திரும்பியாக வேண்டும்.
  • தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு எவ்வளவு விரைவில் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்புகிறதோ, அதைப் பொருத்துத்தான் பொருளாதார நடவடிக்கைகள் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.
  • இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுத்து வளா்ச்சியை நோக்கி தேசத்தை நகா்த்த வேண்டுமென்றால், தனது கடமையைத் தட்டிக்கழிக்காமல் மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தை முழுமையாக தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு, கடைசி குடிமகன் வரை தடுப்பூசி போடப்படுவதை உறுதிப்படுத்துவதுதான் ஒரே வழி.

நன்றி: தினமணி  (05 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்