TNPSC Thervupettagam

மீட்டெடுக்கப்படுமா பொருளாதார வளர்ச்சி விகிதம்?

December 5 , 2024 37 days 67 0

மீட்டெடுக்கப்படுமா பொருளாதார வளர்ச்சி விகிதம்?

  • இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (Gross Domestic Growth) 5.4% ஆகக் குறைந்திருப்பது கவலையளிக்கிறது. 2024-2025ஆம் நிதியாண்டின் முதல் கால் பகுதியில் இது 6.7% ஆக இருந்தது. இரண்டாம் கால் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, கடந்த 7 கால் ஆண்டுகளிலேயே மிகவும் குறைவு.
  • கூடவே, மொத்த மதிப்புச் சேர்ப்பும் (Gross Values Added) முன்பைவிடக் குறைந்திருப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு நாட்டில் குறிப்பிட்ட கால அளவில் உற்பத்தியாகும் பொருள்கள், சேவைகள் ஆகியவற்றின் பணமதிப்பு ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’ எனப்படுகிறது.
  • அந்நாட்டில் நிகழும் கல்வித் துறை சார்ந்த சேவைகள், பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் சேவை போன்றவற்றின் மதிப்பும் இதில் சேர்க்கப்படும். நாட்டினுடைய பொருளாதார நிலையின் குறியீடாக மொத்த உள்நாட்டு உற்பத்தி கொள்ளப்படுகிறது. இது அதிகரித்தால் பொருளாதார வளர்ச்சியும் நல்ல நிலையில் உள்ளது எனக் கூறலாம்.
  • மொத்த உற்பத்திக்குத் தேவையான உள்ளீடு பொருள்களின் மதிப்பைக் கழித்து ‘மொத்த மதிப்புச் சேர்ப்பு’ கணக்கிடப்படுகிறது. பொருளாதார நிலையைத் தெரிவிக்கும் இந்த இரண்டு கூறுகளின் வளர்ச்சி விகிதத்தைக் கணக்கெடுப்பது தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் பணியாகும். ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான கணக்கெடுப்பில் வெளியிடப்பட்ட தரவுகள்தான் தற்போது பேசுபொருள் ஆகியுள்ளன.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியை நிர்ணயிக்கும் பல்வேறு துறைச் செயல்பாடுகளின் வளர்ச்சி விகிதங்களும் இக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாங்கிப்பிடிக்கும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி விகிதம் கடந்த நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 14.3% ஆக இருந்தது. தற்போது 2.2% ஆக உள்ளது. கட்டுமானத் துறை, சுரங்கம், குவாரிச் செயல்பாடுகளிலும் வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது.
  • ஆறுதல் அளிக்கும் வகையில், வேளாண்மைத் துறையின் வளர்ச்சி விகிதம் 1.7%லிருந்து 3.5%ஆக அதிகரித்துள்ளது. சேவைத் துறையிலும் தகவல்தொடர்புத் துறையிலும் இதுபோல வளர்ச்சி காணப்படுவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒட்டுமொத்தமாகக் குறைந்ததற்கு நகர்ப்புற நுகர்வு மந்தநிலையை அடைந்தது முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
  • உண்மையான வருவாயில் (பணவீக்கத்துக்கு ஈடுகொடுக்கும் விதத்திலான தனிநபர் மற்றும் நாட்டின் வருவாய்) ஏற்பட்ட தேக்கமும் அதிக வட்டி விகிதங்களும் நுகர்வைக் குறைத்தன. விலைகள் உயர்ந்ததாலும் தேவை குறைந்ததாலும் உற்பத்தித் துறையும் பாதிக்கப்பட்டது. 6.21%ஆக இருக்கும் தற்போதைய பணவீக்கம் இன்னொரு முக்கியக் காரணி. இந்திய ரிசர்வ் வங்கி, நிகழும் 2024-2025 நிதியாண்டுக்கான வளர்ச்சி விகித இலக்காக 7.2%ஐ நிர்ணயித்திருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ள சூழலில், அந்த இலக்கை அடைவது கடினமான பயணமாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.
  • அளவுக்கு அதிகமான தனியார்மயமாக்கம், போக்குவரத்துத் துறையிலும் தொழில் துறையிலும் விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு, மனிதவள இழப்பு, அண்டை நாடுகளுடனான உறவில் ஏற்படும் உரசல்கள், சில மாநிலங்களில் நிலவும் அரசியல் நிலைத்தன்மை அற்ற சூழல், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு போன்றவையும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளும் உள்நாட்டு உற்பத்தியோடு நெருங்கிய தொடர்புடையவை.
  • அதிக முதலீடுகளை ஈர்ப்பது, தொழிலாளர் எண்ணிக்கையையும் அவர்களின் உற்பத்தித்திறனையும் அதிகரித்தல், பல்வேறு துறைகளில் ஏற்றுமதியை அதிகரித்தல், அரசுக் கொள்கைகளில் நெகிழ்வான மாற்றங்களைச் செய்தல் போன்ற தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. மாநில அரசுகளையும் பங்களிப்பாளர்களாகக் கொண்டு மத்திய அரசு ஏறுமுகமான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்