TNPSC Thervupettagam

மீட்டெடுக்கப்படும் நட்புறவு

March 9 , 2023 513 days 258 0
  • தனது ஜி20 தலைமைப் பொறுப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறது இந்திய அரசு. ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகத் தொடரும் இந்தியா-கனடா இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
  • ஒரு மாத இடைவெளியில் இரண்டு முறை இந்தியாவுக்கு இன்னொரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது மிகவும் அரிது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி கடந்த மாதம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்புக்கு வந்தார் என்றால், இப்போது ஜி20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள மீண்டும் வந்தார். அவரது இரண்டு விஜயங்களும் இரு நாடுகளுக்கு இடையே இருந்த பல பிரச்னைகளின் கடுமையைக் குறைத்து புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றன.
  • சீனாவுடனான கனடாவின் உறவில் பல பிரச்னைகள் எழுந்திருக்கும் நிலையில், இந்தியா-கனடா இரு நாட்டு உறவில் நெருக்கம் ஏற்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலியின் வருகையைத் தொடர்ந்து ஜி20 உச்சி மாநாட்டுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் வருகையும் அமையும் என்பதால் சர்வதேச அளவில் இந்த நெருக்கம் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
  • கடந்த நவம்பர் மாதம் கனடா தனது புதிய இந்தோ-பசிபிக் திட்டத்தை வெளியிட்டது. அதில் ஜனநாயகம், பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றில் ஓரணியில் காணப்படும் முக்கியமான கூட்டாளி என்று இந்தியாவைக் குறிப்பிடுகிறது கனடா. அதே நேரத்தில், சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி என்று சீனாவை வர்ணிக்கிறது. சீனாவுடனான தனது பொருளாதாரத் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டு புதிய சந்தைகளைத் தேடும் கனடாவின் திட்டம் இந்தியாவுடனான நெருக்கத்துக்கு இன்னொரு காரணம்.
  • பல்வேறு நாடுகளுடன் தடையில்லா வர்த்தக உறவுகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், கனடாவுடனும் அதுபோன்ற வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விழைகிறது. இந்த ஆண்டிலேயே வர்த்தக உறவுக்கான தொடக்க முனைப்புகளை அறிவிப்பதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். விரைவிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் ஒருங்கிணைந்த பொருளாதார நட்புணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது மெலனி ஜோலி - ஜெய்சங்கர் ஆகிய இருவரின் பேச்சுவார்த்தைகள்.
  • மூன்று ஆண்டுகள் முனைப்புக்குப் பிறகு, இந்தோ-பசிபிக் திட்டத்தை அறிவித்தது கனடா. ஜி7 நாடுகளில் கடைசியாக இந்தோ-பசிபிக் திட்டத்தை வெளியிட்ட நாடும் கனடாதான். அதற்கு சில காரணங்கள் இருந்தன. 2018 டிசம்பரில் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹவாயின் முக்கியமான அதிகாரி ஒருவரை கனடா கைது செய்தது. அதைத் தொடர்ந்து சீனாவுடனான ராஜாங்க உறவில் விரிசல் ஏற்பட்டது. கொள்ளை நோய்த்தொற்றும், உக்ரைன்-ரஷிய போரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு வல்லரசுகளுடன் தனது கொள்கைகளை இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் கனடாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
  • "க்வாட்' கூட்டமைப்பில் இந்தியா அங்கம் வகிப்பதால் அதைத் தனது இந்தோ-பசிபிக் திட்டத்தில் மிக முக்கியமான நாடாக கனடா கருதுகிறது. அதனால்தான் இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை அகற்றி நட்புறவை மேம்படுத்தும் முயற்சியில் கனடா இறங்கியிருக்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை.
  • ஆரம்ப காலத்தில் இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களுடன் இணைந்து செயல்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. 1974 அணுசக்தி சோதனைக்குப் பிறகு அந்த உறவில் தளர்வு ஏற்பட்டது. 1980-இல் மீண்டும் நட்புறவு துளிர்த்தபோது, காலிஸ்தானிய குழுவினருக்கு கனடா அடைக்கலம் கொடுத்ததும், 1985-இல் ஏர் இந்தியா விமானம் பயங்கரவாதிகளால் கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதும் மீண்டும் நல்லுறவை பாதித்தன.
  • 2010-இல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் கனடா விஜயத்தில் அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 2015-இல் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறைப் பயணம் நட்புறவை பழைய நிலைமைக்கு மீட்டெடுத்தது.
  • 2018-இல் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. காலிஸ்தானிய ஆதரவாளரான ஒருவரைத் தன்னுடன் அழைத்து வந்தார் என்பதால் இந்தியா அவருக்கு உரிய மரியாதை செய்யவில்லை.
  • 2020-21-இல் மோடி அரசு விவசாயிகள் போராட்டத்தை சரியாகக் கையாளவில்லை என்று கனடா பிரதமர் கருத்து தெரிவித்தது இரு நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க உறவை ஸ்தம்பிக்க செய்தது. கனடாவில் வாழும் சீக்கியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஜஸ்டின் ட்ரூடோ அந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
  • கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், கனடா பிரதமர் ட்ரூடோவும் சந்தித்ததன் விளைவாக நட்புறவு மீண்டும் மலர்ந்திருக்கிறது. காலிஸ்தான் ஆதரவாளர்களான சீக்கியர்கள் கனடாவில் வாழ்வதால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படுவதை இரண்டு தலைவர்களுமே உணர்கிறார்கள்.
  • மிக அதிக அளவில் இந்தியர்கள் கனடாவில் குடியேறுவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மேற்படிப்புக்காக அங்கே செல்வதும் அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான் இப்போதைய நட்புறவு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இனிமேலாவது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஏற்றத்தாழ்வு இல்லாமல் தொடர வேண்டும் என்கிற முனைப்பு வரவேற்புக்குரியது.

நன்றி: தினமணி (09 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்