TNPSC Thervupettagam

மீட்பர்களைப் போற்றுவோம்

May 15 , 2023 607 days 351 0
  • ஒரு நாட்டின் ராணுவம் என்பது பகை நாட்டுடனான போர் நடைபெறும் சமயத்தில் மட்டும் செயல்படுவதில்லை. உள்நாட்டில் கலவரமோ, இயற்கைப் பேரழிவோ ஏற்படும்போது பொதுமக்களைப் பாதுகாப்பதிலும் மீட்பதிலும் அது பெரும்பங்கு வகிக்கின்றது.
  • அதே போன்று, வெளிநாடுகளில் தங்கியுள்ள தமது நாட்டுக் குடிமக்களுக்கு அந்நாடுகளில் திடீரென்று பாதுகாப்பற்ற சூழல் உருவாகுமானால் அவர்களை மீட்டுத் தாய்நாட்டுக்கு அழைத்து வருவதிலும் ராணுவம் முக்கியப் பங்கு வகிக்கின்றது.
  • அவ்வகையில், ஆப்பிரிக்க நாடாகிய சூடானின் ராணுவத்தினருக்கும் துணைராணுவத்தினருக்கும் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் சண்டை காரணமாக அந்நாட்டில் தவித்து வந்த மூவாயிரத்து எண்ணூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை நமது இந்திய ராணுவத்தின் கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த வீரர்கள் மீட்டு பாதுகாப்பாக இந்தியாவுக்கு  அழைத்துவந்ததைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
  • பொதுவாக இரு நாடுகளுக்கிடையே போர் நடைபெறும்போது மீட்பு நடவடிக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில் தற்காலிக போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
  • ஆனால், கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகள் ஆகியோர் தாக்குதல் நடத்தும்போது இத்தகைய போர் நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. அப்படியே போரை நிறுத்தினாலும் இருதரப்பும் போர்நிறுத்த மீறலில் ஈடுபடுவதும் வழக்கம்தான்.
  • சூடானில் சண்டையிடும் ராணுவம், துணை ராணுவம் இரண்டும் இடையில் ஒருவார கால போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டபோதும், ஆங்காங்கே சண்டைகள் நடைபெற்றதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
  • இத்தகைய சூழ்நிலையில், உணவு, குடிநீர், மின்சாரம் எதுவுமின்றிக் குடும்பத்தினருடன் தவித்துக்கொண்டிருந்த இந்தியர்களை மீட்டுவருவதென்பது மிகவும் சவாலான விஷயமாகவே இருந்திருக்கிறது.
  • போரிடும் இரண்டு தரப்புப் படையினரும் தங்களுடைய கைப்பேசிகளைத் துப்பாக்கி முனையில் பறித்துச் சென்றதாகவும், அதனால் தங்களால் பிறருடன் எளிதில் தொடர்பு கொள்ள இயலாத நிலை இருந்ததாகவும் மீண்டு வந்த இந்தியர்கள் தெரிவித்ததைக் கேட்கும்போது அவர்கள் எத்தகைய அபாயகரமான சூழலில் சிக்கியிருந்தார்கள்  என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
  • சூடானிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் இவ்விஷயத்தில் மிகவும் திறமையாகச் செயல்பட்டு, சண்டையிடும் இருதரப்பினரையும் தொடர்பு கொண்டு அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் பெரும்பங்கு வகித்திருக்கின்றனர்.
  • சூடான் நாட்டின் பல்வேறு பகுதியிலும் வசித்துவந்த இந்தியர்களை அறுபத்தியேழு பேருந்துகள் மூலம் கிழக்கு சூடானிலுள்ள துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கிருந்து ஐந்து கப்பல்கள், பதினாறு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வந்ததை  பெரும் சாதனை என்றே கூற வேண்டும்.
  • அவ்வாறு மீட்கப்பட்டு இந்தியாவில் வந்திறங்கியவர்களை உள்நாட்டுப் போக்குவரத்து ஏற்பாடுகள் மூலம் அவரவர் ஊருக்குக் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்யப்படிருக்கிறது. இவ்வகையில் சூடானிலிருந்து மீட்கப்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உணவளித்து, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசும் ஒத்துழைத்துள்ளது.
  • "ஆபரேஷன் காவேரி' என்று பெயரிடப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை நமது இந்திய ராணுவத்தின் மதிப்பையும், முக்கியத்துவத்தையும்  சர்வதேச அளவில் உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பும் இத்தகைய மீட்பு நடவடிக்கைகளை நமது ராணுவம் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியுள்ளது.
  • 1990- ஆம் ஆண்டில் குவைத் நாட்டின் மீது இராக் ராணுவம் திடீரென்று படையெடுத்தபோது அந்நாட்டில் வசித்து வந்த 1,70,000 இந்தியர்கள் நமது இந்திய விமானப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப் பட்டனர்.
  • 2006 -ஆம் ஆண்டு, இஸ்ரேல், லெபனான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டபோது இரண்டாயிரத்து எண்ணூறு இந்தியர்கள் மட்டுமின்றி, நேபாளம், இலங்கை ஆகிய இரு நாடுகளின் பிரஜைகளும் இந்திய ராணுவத்தினரால் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
  • இதே போன்று 2011-ஆம் ஆண்டு, கர்னல் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியால் நிலைகுலைந்த லிபியாவில் செய்வதறியாமல் சிக்கியிருந்த 1,54,000 இந்தியர்களையும் நமது நாட்டின் ராணுவத்தினர் மீட்டு வந்தனர். 2015-ஆம் ஆண்டு யேமன் நாட்டில் கிளர்ச்சி நடந்த சமயத்தில் சுமார் ஐயாயிரத்து அறுநூறு இந்தியர்கள் மீட்கப்பட்டனர். 2016-ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நிகழ்த்தியபோது இருநூற்று நாற்பத்தியிரண்டு இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
  • ஆகஸ்ட் 2021- இல் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானபோதும் இந்திய விமானப் படை களத்தில் இறங்கியது.
  • பிப்ரரி 2022 - இல்  உக்ரைன் மீது ரஷியா பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கிய பிறகு சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நமது இந்திய விமானப் படையினரால் வெற்றிகரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர்.
  • அண்மையில், சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்டதிலும் நமது இந்திய ராணுவத்தின் திட்டமிடல், துணிச்சல் ஆகியவை மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதமாகியிருக்கின்றன. போர்க் காலங்கள் தான் என்றில்லை, நேபாளத்தில் பெரும் பூகம்பம் நிகழ்ந்த சமயத்திலும், மியான்மர் அகதிகள் பெருமளவு குவிந்ததால் நமது அண்டைநாடான வங்கதேசம் பிரச்னைகளை எதிர்கொண்ட போதும் இந்திய ராணுவம் அந்நாடுகளுக்குக் கைகொடுத்து உதவியிருக்கிறது.
  • 1987-ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கிளர்ந்தெழுந்த நேரத்தில் இந்திய அரசினால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை சுமார் மூன்று ஆண்டுகள் அந்நாட்டில் தங்கிப் பணியாற்றியது.
  • இப்படியெல்லாம் நம் இந்திய தேசத்துக் குடிமக்களை வெவ்வேறு அபாயச் சூழல்களிலிருந்து மீட்டதுடன், நமது நட்பு நாடுகளுக்கும் கைகொடுத்து உதவும் தோழனாக விளங்கி, உலக அரங்கிலும் முக்கியத்துவம் பெற்று வரும் நம் இந்திய ராணுவதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நன்றி: தினமணி (15 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்