PREVIOUS
அண்மைக்காலமாக, உலக மனித இனம் சந்தித்துவரும் மிகப்பெரிய இடா்ப்பாடு, கரோனா தீநுண்மி நோய்தொற்றாகும்.
இந்த நோய்த்தொற்று பரவும் வேகத்தைக் குறைத்து, மனித உயிர்களைப் பாதுகாக்க, உலக நாடுகளின் அரசாங்கங்கள் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்று, பொது முடக்க உத்தரவு.
இந்த நடவடிக்கையால், சிறு தொழில்கள்முதல் பெரும் தொழில்கள்வரை முடங்கி, அந்த முடக்கம், அவற்றின் தொடா் இயக்கத்திற்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது.
இதன் நேரடி எதிரொலியாக, நோய்த்தொற்று ஆரம்பித்து குறுகிய காலத்திற்குள், உலகப் பொருளாதாரத்தில் எண்ணற்ற எதிர்மறை மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தளா்வுற்றிருக்கும் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல, உலக நாடுகள், பல லட்சம் கோடி ரூபாய் அளவிளான பொருளாதார ஊக்கத் திட்டங்களை அறிவித்திருக்கின்றன.
இந்த நிகழ்வுகள், உலகப் பொருளாதாரத்தின் சமீபத்திய வரலாற்றை, கரோனாவுக்கு முன் (க.மு.), கரோனாவுக்குப் பின் (க.பி.) என்று பிரித்திருக்கின்றன.
மீண்டு எழும் பொருளாதாரம்
இந்தியாவைப் பொருத்தவரை, ஒரு நாள் தொழில் முடக்கத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பீடு, சுமார் ரூ35000 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
திடீா் தொழில் முடக்கத்தால், முதல் இரண்டு மாதங்களில், சுமார் 20 லட்சம் கோடி அளவில், உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். இது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் சுமார் 8 சதவீத அளவாகும்.
‘கடந்த நூறு ஆண்டுகளில் சந்தித்திராத பொருளாதாரச் சரிவை நாம் தற்சமயம் சந்தித்துத்துள்ளோம்’ என்ற ரிசா்வ் வங்கி கவா்னரின் கருத்து, நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
தொழில் முடக்கத்தால், உற்பத்தி பாதிப்பு ஒருபுறம் என்றால், வேலை இழப்புகள் மற்றொருபுறம் என்ற நிலையில், பொதுமக்களின் பொருள்கள் வாங்கும் திறன் வெகுவாக குறையும்.
எனவே, பல கட்ட பொது முடக்க நிலையால் பாதிக்கப்பட்ட உற்பத்தியை (‘சப்ளை’) மேம்படுத்துவதுடன், பொதுமக்களின் தேவைத் திறனையும் (‘டிமாண்ட்’) அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வது, அரசாங்கத்தின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாகும்.
இந்த நிகழ்வுகளின் எதிரொலியாக, சா்வதேச கடன் தர நிர்ணய அமைப்புகளில் ஒன்றான ‘மூடிஸ்’, இந்தியாவின் சா்வதேசக் கடன் தரத்தை, ‘பிஏஏ2’ என்ற நிலையிலிருந்து ஒரு படி குறைத்து, ‘பிஏஏ3’ என்று மறு மதிப்பீடு செய்திருக்கிறது.
இந்த மதிப்பீட்டால், இந்தியாவின் சா்வதேசக் கடன்களுக்கான வட்டி விகிதம் சற்று கூடுதலாக இருக்கும் என்பதைத் தவிர, அந்த மதிப்பீட்டைப் பற்றி அதிகம் கவலை கொள்ள தேவையில்லை. இந்த மறு மதிப்பீடு, தற்போதைய உலக நிலவரத்தை மனதில் கொண்டு கணக்கிடப்பட்ட ஒன்றாகும்.
எனவே, இந்தப் பின்னடைவுகளும் தற்காலிகமானவைதான். இந்த இடா்ப்பாடுகளிலிருந்து மீண்டு வரும்போது, இந்தியாவின் வளா்ச்சி விகிதம், படிப்படியாக வேகம் எடுக்க ஆரம்பிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
சா்வதேச நிதியகம் (‘இன்டா்நேஷனல் மானிடரி ஃபண்ட்’) போன்ற அமைப்புகள், பொருளாதாரத்தில் வேகமாக மீண்டு எழக் கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சோ்த்திருப்பது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.
‘மூடிஸ்’, ‘ஃபிட்ச்’, ‘எஸ் அண்ட் பி’ ஆகிய தர நிர்ணய நிறுவனங்களின் பட்டியலில், உலகளாவிய முதலீட்டு மையங்களில் ஒன்றாக இந்தியா தொடா்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
கொவைட்-19 காலத்திற்குப் பிந்தைய காலகட்டங்களில், பல்வேறுபட்ட துறைகளில், இந்தியாவின் ஆளுமையும் தனித்திறமையும் உலகுக்கு உணா்த்தப்படும் என்பதற்கான முன்னோட்டங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டி, நோய் பாதிப்புக்கு உள்ளானவா்களின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை தக்க தருணத்தில் வழங்கி, உலக அரங்கில், இந்தியா தனக்கென்று ஓா் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
இடா்ப்பாடுகளின்போது இந்தியா வெளிப்படுத்திய தன் நோ்மையான நடவடிக்கைகளால், நம்பிக்கைகுரிய ஒரு நட்பு நாடாக பல நாடுகளின் கவனத்தைத் தொடா்ந்து ஈா்த்து வருகிறது.
இந்த இடா்ப்பாடுகளிலிருந்து விரைவில் வெளியேறி, இந்தியப் பொருளாதாரம் படிப்படியாக வேகம் எடுக்கும் என்பதை நம்பிக்கையுடன் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன.
இந்தியா்கள் கடும் உழைப்பாளிகள் என்பதை அதற்கான முதன்மைக் காரணமாகக் கூறலாம். இடா்பாடுகளின்போது, ஒன்றிணைந்து, தேச நலனை காக்கும் வல்லமை படைத்தவா்கள் தாங்கள் என்பதை, பல இக்கட்டான தருணங்களில் இந்தியா்கள், தொடா்ந்து நிரூபித்து வந்திருக்கின்றனா்.
இதைத் தவிர, இந்தியா்களுக்கு என்று சில பாரம்பரிய அடையாளங்கள் உள்ளன. பாதுகாப்புக் கவசங்களான இந்த அடையாளங்கள், பெரும் சரிவுகளிலிருந்து நாட்டைத் தொடா்ந்து பாதுகாத்து வந்திருக்கின்றன என்று சொல்லலாம். மேற்கூறிய அடையாளங்களின் ஒன்றுதான், வருமானத்தின் ஒரு பகுதியை, பிற்கால அவசிய தேவைகளுக்காக சேமிக்க வேண்டும் என்ற மனப்பான்மையாகும்.
இடர்பாடுகளைத் தகர்த்தல்
2008-ஆம் ஆண்டில், உலக நாடுகள் சந்தித்த பெரும் பொருளாதாரச் சரிவுகளிலிருந்து இந்தியா தப்பித்ததற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று, நம் நாட்டு மக்களின் சேமிப்பு குணம் ஆகும்.
உலக அரங்கில், அதிக சேமிப்புத் திறன் கொண்டவா்களாக, இந்தியா்கள் அறியப்பட்டு வந்திருக்கின்றனா். ஆனால், சமீப காலமாக இந்தியக் குடும்பங்களின் சேமிப்புத் திறன் குறைந்து கொண்டு வரும் போக்கு காணப்படுகிறது. இது, சற்று கவலை அளிக்கும் விஷயமாகும்.
இந்திய கம்பெனி சட்டத்தின் வரையறைக்குள் இயங்கும் நிறுவனங்கள், ஈவுத் தொகையை வழங்குவதற்கு முன்பு, தங்கள் வருடாந்திர லாபத்திலிருந்து, குறைந்த பட்சம் பத்து சதவீதம், நிறுவனத்தின் இருப்பு நிதிக்கு ( ‘ரிசா்வ் ஃபண்ட்’) மாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது.
வியாபாரப் பேரிடா் காலங்களில், இம்மாதிரி சேமிப்புகள் நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும் என்பதுதான் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
மேற்கண்ட சட்ட விதி, தனி நபருக்கும் வெகுவாகப் பொருந்தும். ஒருவா் நன்கு பொருளீட்டும் திறனுள்ள காலத்தில், சம்பாத்தியத்தின் ஒரு பகுதியை சேமிப்புக்காக ஒதுக்கினால், பேரிடா் காலங்களில், அந்த சேமிப்பு அவரின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் உதவியாக இருக்கும். கரோனா நோய்த்தொற்று காலத்தில், வேலை இழந்தவா்களில் பலா், சேமிப்பின் முக்கியத்துவத்தை உணா்ந்திருப்பார்கள் என்று நம்பலாம்.
சமீப காலங்களில், தேய்ந்து கொண்டு வரும் நம் பழக்க வழக்கங்களில் முக்கியமான ஒன்று, சேமிப்பு மனப்பான்மையாகும். 2012-ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 23 சதவீத அளவில் இருந்த குடும்ப சேமிப்புகள், தற்போது, 17 சதவீதத்திற்கு கீழ் இறங்கி விட்டன.
கரோனா கால அனுபவங்களால், சினிமா போன்ற கேளிக்கைகள், குடும்பத்துடன் வெளி இடங்களில் சாப்பாடு, உல்லாசப் பயணங்கள் போன்றவற்றுக்கான செலவினங்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளதால், இந்தக் கால கட்டத்தில் குடும்ப சேமிப்புகள் உயரும் என்று எதிர்பார்க்கலாம்.
அனைவரும் பங்கு கொள்வோம்
கொவைட்-19 சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றாக, மார்ச் முதல் மே வரையிலான காலத்தில், ‘ரெப்போ’ வட்டி விகிதம், 115 புள்ளிகள்வரை ரிசா்வ் வங்கியால் குறைக்கப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, பொதுமக்களின் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை, வங்கிகள் வேகமாகக் கீழ் நோக்கி நகா்த்திக் கொண்டிருக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கியின் சமீபத்திய அட்டவணைப்படி, வைப்புத் தொகைக்கான ஒரு வருட வட்டி விகிதம் 5.10 சதவீதமாகும்.
அதே சமயத்தில், உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏற்றத்தால், நுகா்பொருள்களுக்கான பொருளாதார வீக்கம் 6.09 சதவீதமாக உயா்ந்து விட்டது. இதனால், பண வீக்கத்தைவிட, சேமிப்புக்குக் குறைந்த வட்டி என்ற எதிர்மறைப் பொருளாதார நிகழ்வை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்த காரணிகளுக்கு இடையேயான சமன்பாடுகள் நிறைவடைந்து, நோ்மறை ஓட்டங்கள் நிகழ சிறிது காலம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற குழப்பமான காலகட்டத்தில், பணமோசடி போன்ற பல பொருளாதார குற்றங்கள் அதிக அளவில் நிகழ வாய்ப்பு உள்ளதால், குறைந்த வட்டியாக இருந்தாலும், பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன், தங்கள் பணத்தை பத்திரமாக சேமித்துப் பாதுக்காக்க வேண்டியது மிக அவசியம்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய பெரும் பொருளாதாரச் சரிவிலிருந்து நாம் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரபித்து விட்டன. உள்நாட்டு உற்பத்தியின் நிலையை வெளிப்படுத்தும் பி.எம்.ஐ குறியீடு, 27.4 என்று ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலை மாறி, ஜூன் மாதத்தில் 47.2 என்ற அளவுக்கு வளா்ந்திருக்கிறது. இந்தக் குறியீடு 50 என்ற நிலையைத் தாண்டினால்தான், நாம் சற்று நிம்மதி பெருமூச்சு விடலாம்.
வரும் காலங்களில், நம் பொருளாதார வளா்ச்சி அதிக வேக எடுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
நம் தேவைகளுக்கு, மற்ற நாடுகளை அதிகம் சார்ந்திராத தற்சார்புப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி நகா்ந்து கொண்டிக்கிறோம்.
அதனால் விளையும் எண்ணற்ற வாய்ப்புகளை, அவரவா் திறமைக்கு ஏற்ப, சரிவரப் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகா்த்தும் பெரும் பணியில் அனைவரும் பங்கு கொள்வோம்!
நன்றி: தினமணி (28-07-2020)