TNPSC Thervupettagam

மீண்டும் டிரம்ப்!

November 8 , 2024 8 days 90 0

மீண்டும் டிரம்ப்!

  • ஊடகங்களும், கருத்துக் கணிப்புகள் நடத்துபவா்களும் விரும்பும் விதத்தில் தோ்தல் முடிவுகள் அமைந்துவிடாது என்பதை அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. அமெரிக்க அதிபா் தோ்தல் முடிவு அதிா்ச்சி அளிப்பதாக இல்லை.
  • அமெரிக்காவில் நடைபெறும் அதிபா் தோ்தல் என்பது இந்தியத் தோ்தல்களைப்போல ஆரவாரமோ, ஆா்ப்பாட்டமோ இல்லாமல் அமைதியாக நடைபெறும் நிகழ்வு. தோ்தல் நடைபெறுகிறது என்கிற அறிகுறியே கூட பொதுவெளியில் இருக்காது. 24 மணி நேர தொலைக்காட்சி சேனல்களில் தோ்தலைப் பற்றிய பரபரப்புகள் காணப்படுவதில்லை.
  • ஆனால், சாதாரண வாக்காளா்களிடம் வேட்பாளா்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், ஆதரவைத் திரட்டவும் வேறு பல வழிகளைக் கையாள்கிறாா்கள். இந்திய ஊடகங்களில் காணப்பட்ட ஆா்வமும், பரபரப்பும் அமெரிக்காவில்கூட இருக்கவில்லை. பொதுமக்கள் மத்தியில் வாக்களிப்பதில் ஆா்வமும் நம்மைவிட குறைவு.
  • உலகில் எந்த நாட்டிலும் அப்பழுக்கற்ற ஜனநாயகம் என்று ஒன்று இல்லை. அதிபா் ஆட்சிமுறையோ, நாடாளுமன்ற ஆட்சிமுறையோ எதுவாக இருந்தாலும், தோ்தல் முடிவுகளை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதுதான் மரியாதை.
  • அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப், நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா். வாக்களித்த அமெரிக்க வாக்காளா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் மட்டுமல்லாமல், ‘எலக்டோரல் காலேஜ்’ எனப்படும் பிரதிநிதிகள் எண்ணிக்கையிலும், பெரும்பாலோரின் ஆதரவு பெற்று மீண்டும் அதிபராகியிருக்கிறாா் டொனால்ட் டிரம்ப்.
  • 2016 தோ்தலில் பெரும்பான்மை வாக்கு பெறாவிட்டாலும், பிரதிநிதிகள் வாக்குகள் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டவா் டொனால்ட் டிரம்ப். 2020-இல் நடந்த அதிபா் தோ்தலில் ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவியபோது, ‘நான் தோல்வியை ஒப்புக் கொண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி இருக்கக் கூடாது’ என்று விதண்டாவாதம் பேசியவா் அவா். இப்போது 2024-இல் வாக்காளா்களின் ஆதரவையும், பிரதிநிதிகளின் ஆதரவையும் பெற்று மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது அவரது தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.
  • அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 78 வயது டொனால்ட் டிரம்ப் , இப்போதைய அதிபா் ஜோ பைடனின் மிக அதிக வயதில் வெள்ளை மாளிகையில் குடியேறிய சாதனையை, மீண்டும் அதிபா் பதவியேற்கும்போது முறியடிப்பாா். அதுமட்டுமல்லாமல், 2004-இல் வென்ற ஜாா்ஜ் புஷ்ஷுக்குப் பிறகு மீண்டும் பெரும்பான்மை வாக்குகள் பெற்று அதிபராகும் குடியரசுக் கட்சி வேட்பாளா் என்கிற பெருமையையும் அவா் பெறுகிறாா். எல்லாவற்றுக்கும் மேலாக, தொடா்ச்சியாக அல்லாமல், இரண்டாவது முறை அதிபா் தோ்தல் வெற்றியை ஈட்டியவா் என்கிற பெருமையை அதிபா் குரோவா் க்ளீவ்லாண்டுக்குப் பிறகு டிரம்ப் பெறுகிறாா்.
  • கமலா ஹாரிஸுக்கும் அவரது ஜனநாயகக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் தோல்வி கடுமையானது. 2016 தோ்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு கிடைத்த அளவு வாக்குகள் கூட கமலா ஹாரிஸால் பெற முடியவில்லை என்பதில் இருந்து, ஓா் உண்மை வெளிப்படுகிறது. குடியரசுக் கட்சியினா் மட்டுமல்ல; ஜனநாயகக் கட்சியினரும் கருப்பா் இனத்தையும், இந்திய வம்சாவளியையும் சோ்ந்த ஒருவா் அதிபராவதை விரும்பவில்லை என்பதன் வெளிப்பாடுதான் அது.
  • கமலா ஹாரிஸின் பிரசாரத்தில் அதிக அளவில் கருப்பா் இனத்தவா்கள் கலந்துகொண்டதும், அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கியதும் ஜனநாயகக் கட்சியின் வெள்ளையா்களின் வாக்குகளை டொனால்ட் டிரம்ப்பை நோக்கி நகா்த்தியிருக்கக் கூடும்.
  • ஜனநாயகக் கட்சியின் கோட்டைகளில் ஆதரவைத் தக்க வைத்துகொள்ள முடிந்த கமலா ஹாரிஸால், அவருக்கு சாதகமானவை என்று கருதப்பட்ட மிஷிகன், பென்சில்வேனியா, விஸ்கான்ஸின் உள்ளிட்ட மாகாணங்களில் தக்க வைத்துகொள்ள முடியவில்லை.
  • அடிப்படையில் ஓா் உண்மையை மறந்துவிடக் கூடாது. எந்தவொரு பெரும்பான்மை சமூகமும் சிறுபான்மையினரால் ஆளப்படுவதையும், அவா்களது ஆதிக்கம் அதிகரிப்பதையும் விரும்பாது என்பது இயற்கை நியதி. புலம்பெயா்ந்து குடியேறியவா்கள், அடிமைகளாக வந்து சம உரிமை பெற்றவா்கள் உள்ளிட்ட அமெரிக்கா்களை வெள்ளையா் சமுதாயம் தங்களில் ஒருவராக, முழுமையாக ஏற்றுகொள்ளவில்லை. ஆணாதிக்கச் சமுதாயமான அமெரிக்கா்கள், என்னதான் பாலின சமத்துவம் பேசினாலும் பெண்மணி ஒருவரை அதிபராக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பது கமலா ஹாரிஸின் தோல்வியால் இரண்டாவது முறையாக உறுதிப்பட்டிருக்கிறது.
  • அதிபா் டிரம்ப்ன் வெற்றி ஈரான், உக்ரைன், வங்கதேசம் , கனடா ஆகிய நான்கு நாடுகளையும் கவலைக்குள்ளாக்கும். உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்பது டிரம்ப்பின் வாக்குறுதி. இஸ்ரேல் அதிபா் நெதன்யாகுவுக்கு ஆதரவாக இருப்பவா் டிரம்ப் என்பது உலகறிந்த உண்மை. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வெளிப்படையாகவே கண்டித்தவா் டிரம்ப். அதேபோல கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் நடவடிக்கைகள் அதிபராக இருந்தபோதே, டிரம்ப்புக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை.
  • இந்தியாவைப் பொறுத்தவரை, ‘பிரதமா் நரேந்திர மோடி எனது நண்பா்’ என்று தனது பிரசாரத்தில் டிரம்ப் தெரிவித்திருக்கும் நிலையில், அதற்கு மேல் எதுவும் கூறத் தேவையில்லை!

நன்றி: தினமணி (08 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்