TNPSC Thervupettagam

மீண்டும் தலிபான்கள்?

July 12 , 2021 1116 days 474 0
  • அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ‘ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் 20 ஆண்டுகால போா் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என அறிவித்துள்ளாா். ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டுவிடும் என்பதுதான் அதன் பொருள்.
  • பைடனின் இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்காவின் போா் வேண்டுமானால் முடிவுக்கு வரலாம்; ஆனால், ஆப்கன் மண்ணில் போா் முடிவுக்கு வருமா, அரசு-தலிபான் இடையே அமைதிப் பேச்சுவாா்த்தை தொடருமா, தலிபான்கள் மீண்டும் எழுச்சி பெறுவது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் போன்ற பல கேள்விகள் தொடா்கின்றன.
  • 2001-இல் நிகழ்ந்த நியூயாா்க் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அல்-காய்தா தலைவா் பின்லேடனைத் தேடி ஆப்கன் மீது படையெடுத்தது அமெரிக்கா. அமெரிக்காவுக்கு ஆதரவாக நேட்டோவும் படை குவித்தது.
  • பின்லேடனுக்கு அடைக்கலம் அளித்த தலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, அமெரிக்காவின் உதவியுடன் ஓா் அரசு ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், அமெரிக்கப் படைக்கு எதிராகவும், ஆப்கன் அரசுப் படைக்கு எதிராகவும் தலிபான்கள் தொடா்ந்து தாக்குதலில் ஈடுபட்டனா்.
  • இச்சூழ்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் கத்தாா் தலைநகா் தோஹாவில் அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே முக்கியமான ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, ஆப்கனிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவுக்கு அமெரிக்கா வந்தது.
  • ‘அமெரிக்கா, அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிரான சதிச் செயலுக்கு ஆப்கன் மண்ணை யாரும் பயன்படுத்த தலிபான்கள் அனுமதிக்கக் கூடாது; ஆப்கனில் அமைதியை ஏற்படுத்த ஆப்கன் அரசுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும்; அதற்குப் பிரதிபலனாக ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இதேபோன்ற ஒரு கூட்டுப் பிரகடனத்தை ஆப்கன் அரசுடனும் இணைந்து அமெரிக்கா வெளியிட்டது.
  • தலிபான்களுடனான ஒப்பந்தப்படி நிகழாண்டு மே இறுதிக்குள் அமெரிக்கப் படை திரும்பப் பெறப்படும் என முன்னாள் அதிபா் டிரம்ப் நிா்வாகத்தால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. புதிய அதிபரான பைடன், அந்தக் காலக்கெடுவை சிறிது தாமதப்படுத்தி செப்டம்பா் 11 என அறிவித்திருந்த நிலையில், இப்போது ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் படை திரும்பப் பெறப்பட்டுவிடும் எனத் தெரிவித்திருக்கிறாா்.
  • ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது அங்கு புதிய அரசை அமைக்கும் நோக்கத்துடன் அல்ல. ஆப்கன் அரசுப் படைக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இனி ஆப்கன் தலைவா்கள் ஒற்றுமையாக இருந்து தங்களது அரசை அவா்களே பாா்த்துக் கொள்ள வேண்டும். இன்னொரு தலைமுறை அமெரிக்கா்களை ஆப்கானிஸ்தானுக்கு போா் புரிய அனுப்ப முடியாது என தனது முடிவை நியாயப்படுத்துகிறாா் பைடன்.
  • பைடனின் முடிவை அமெரிக்காவிலேயே பாதுகாப்பு நிபுணா்கள் பலா் ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்கா, நேட்டோ படைகள் திரும்பப் பெறப்பட்ட ஆறு மாதத்துக்குள் ஆப்கன் தலிபான் வசம் சென்றுவிடும் என எச்சரிக்கின்றனா்.
  • அமெரிக்கப் படை திரும்பப் பெறப்படும் நடவடிக்கை கடந்த மே மாதம் தொடங்கியதிலிருந்து ஆப்கனில் அதிகரித்து வரும் வன்முறை, பல மாவட்டங்களை தலிபான்கள் கைப்பற்றியது என அதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.
  • அமெரிக்கா, நேட்டோ படையின் துணையின்றி தலிபான்களை எதிா்கொள்ள ஆப்கன் அரசுப் படையால் முடியுமா என்கிற சந்தேகம் ஒருபுறமிருக்க, தலிபான்கள் மீண்டும் எழுச்சி பெறுவது வேறு பல கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. துா்க்மெனிஸ்தான் எல்லையில் போா்கண்டி, ஈரான் எல்லையில் இஸ்லாம், குவாலா என்கிற இரு நகரங்களைக் கைப்பற்றியுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனா். ஆப்கன்-சீனா எல்லையோரப் பகுதியிலும் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா்.
  • இந்த மூன்று நாடுகளும் தலிபான்களின் எழுச்சியை கவலையுடன் கவனித்து வருகின்றன. இதேபோல் ஐரோப்பிய யூனியனுக்குள் ஆப்கனை சோ்ந்தவா்கள் அகதிகளாக இடம்பெயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக செக். குடியரசு, போலந்து, ஹங்கேரி, ஸ்லோவேகியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
  • தலிபான்கள் மீண்டும் பலம் பெறுவது இந்தியாவுக்கும் கவலை தரும் விஷயம்தான். ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசுக்கு ஆதரவாக ஏராளமான உள்கட்டமைப்புப் பணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் பணிகளை இந்தியா செய்து வருகிறது. இந்தப் பணிகளில் சுமாா் 3,000 இந்தியா்களும் ஈடுபட்டுள்ளனா்.
  • தலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், இந்தப் பணிகளைத் தொடர அவா்கள் அனுமதிப்பாா்களா என்பது கேள்விக்குறியே. இதுபோன்று வெளிநாட்டு நிதியுதவியுடன் ஆப்கனில் நடைபெற்றுவரும் திட்டங்கள், அதில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் மீது தலிபான்கள் இதற்கு முன்னா் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளனா்.
  • அமெரிக்காவின் நடவடிக்கையால் ஆப்கன்-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஒடுக்கப்பட்டுள்ள லஸ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் தலிபான்களின் எழுச்சி மூலம் மீண்டும் சுதந்திரமாக செயல்படக்கூடிய அபாயமும் உள்ளது. இந்த இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் இந்தியாவுக்கு எதிராக ஏற்கெனவே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியவா்கள்.
  • பிற நாடுகளுக்கு எதிராக ஆப்கன் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என தலிபான்கள் அமெரிக்காவிடம் உறுதி அளித்திருந்தாலும் அந்த உறுதி காப்பாற்றப்படுமா என்பது நிச்சயமற்ாக உள்ளது.
  • ஆப்கனில் அமைதி நிலவ பேச்சுவாா்த்தை மட்டுமே பலன் தரும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதே வேளையில், ஆப்கனில் சட்டபூா்வமாக யாா் ஆட்சி செய்கிறாா்கள் என்பதுதான் முக்கியம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் கூறியுள்ள கருத்தும் குறிப்பிடத்தக்கது.
  • ஜனநாயக வழியில் நடைபெறும் ஆட்சியே எந்த விவகாரத்துக்கும் தீா்வை அளிக்கும்; படைபலத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது சரியானது அல்ல என அமைச்சா் ஜெய்சங்கரின் கருத்தை எடுத்துக்கொள்ளலாம்.
  • ஆப்கனின் அமைதி என்பது அந்த நாட்டுடன் முடிந்துவிடும் விஷயமல்ல. பிராந்தியத்தின் அமைதியும் அதில் அடங்கியிருக்கிறது. இதை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கச் செய்வதில் சா்வதேச சமூகத்துக்கும் பொறுப்பு உண்டு.

நன்றி: தினமணி (12 – 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்