- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா முன்னெடுத்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தோல்வியில் முடிந்திருக்கிறது.
- ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அமெரிக்கத் தூதரக அதிகாரிகளும் தங்களது தூதரகத்தை விட்டு வெளியேறிவிட்டனர். ராணுவம் தாலிபான்களை எதிர்த்துப் போராடவில்லை.
- காவல் துறையினரும்கூட காவல் நிலையங்களை விட்டு வெளியேறிவிட்டனர். தாலிபான்கள் தங்களது கடுமையான மதக் கோட்பாடுகளை நடைமுறைப் படுத்துவதாகவும் மறுப்பவர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்துவதாகவும் ஏற்கெனவே செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
- தாலிபான்களின் முந்தைய ஆட்சியில் பெண்கள் பணிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சிறுமிகள் பள்ளிகளுக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. தொலைக்காட்சி, இசை, ஓவியம் என ஊடகங்கள், நுண்கலைகள் யாவும் தடை செய்யப்பட்டிருந்தன. தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய உடனே விமானங்களை நோக்கி மக்கள் பதறியபடி ஓடிய காட்சிகளே அவர்கள் மீதான மக்களின் நீங்காத அச்சத்தை எடுத்துரைக்கப் போதுமானது.
- கடந்த முறை 1996-ல் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையும் இப்போதைய நிகழ்வுகளையும் ஒப்பிட முடியாது.
- மத்திய காலத்து மத அடிப்படைவாத மனோபாவத்தோடு நவீன ஆயுதங்களையும் கையாளுபவர்களாக அவர்கள் உருவெடுத்திருக்கிறார்கள். அல்கொய்தா பயங்கரவாதிகளை அழித்தொழித்ததாகப் பெருமை பேசிவரும் வல்லமை பொருந்திய நாடான அமெரிக்கா, தற்போது ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது, அதன் ஆதரவு சக்திகளையும் பலவீனமடையச் செய்திருக்கிறது. அனைத்துக்கும் மேலாக, 1996-ல் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தபோது, அதை எதிர்த்துப் போராடுவதற்கு வடக்குக் கூட்டணி இருந்தது. தற்போது அப்படி எந்த வலுவான கூட்டணியும் அங்கு இல்லை. அரசாங்கமும் இல்லை. ஆப்கானிஸ்தானின் ஒருசில பகுதிகள் நீங்கலாக நாடு முழுவதுமே தற்போது தாலிபான்களின் வசமாகிவிட்டது.
- முந்தைய காலத்தைவிடவும் தற்போது கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கும் தாலிபான்களின் ஆட்சி எப்படி அமையும் என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானை இருள் சூழ்ந்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
- ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் வசமாகியிருப்பது ஆசியாவின் புவியரசியலில் புதிய சவால்களையும் தோற்றுவித்துள்ளது. சீனாவும் ரஷ்யாவும் அவர்களை ஆதரித்துள்ளன.
- பாகிஸ்தான் அவர்களது வெற்றியை வெளிப்படையாகவே கொண்டாடியிருக்கிறது. இந்த நாடுகளின் ராஜதந்திர ஆடுகளமாகவே ஆப்கானிஸ்தான் நெடுங்காலமாக இருந்து வருகிறது.
- எனவே, இந்திய அரசுக்கும் புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அணைக்கட்டுகள், பள்ளிக்கூடங்கள், சாலை வசதிகள் என்று ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்புக்கு நல்லெண்ண நோக்கில் இந்தியா செய்த முதலீடுகள் விரயமாகிவிட்டன.
- இருந்தாலும், தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்கவும் அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்குமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதே முக்கியமானது.
- தேவையெனில், பாகிஸ்தானுக்கு ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுத்து, தாலிபான்களுடன் பேச வைக்க வேண்டும் என்றும்கூடச் சில கருத்துகள் முன்வைக்கப் படுகின்றன. இந்தியர்களின் உயிருக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதே முதல் கவலை.
நன்றி: இந்து தமிழ் திசை (19 - 08 – 2021)