- இன்றைய சிறுவர்கள் நாட்டின் நாளைய தூண்கள். எனவே, நாடு சீரான வளர்ச்சியில் செல்ல வேண்டுமானால் சிறுவர்களின் வாழ்வு செழிப்பானதாக அமைய வேண்டும். சிறந்த தலைமுறை உருவாவதற்கு, சிறப்பாகப் படைக்கப்படும் சிறுவர் இலக்கியங்கள் நமக்கு பேருதவி புரிகின்றன. சிறுவர் இலக்கியத்தில் கதைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்தக் கதைகள் சிறுவர்களின் அறிவு வளர்ச்சி, சிந்திக்கும் திறன், கற்பனை, பேச்சுத்திறன் போன்றவற்றை வளர்க்கப் பெரிதும் உதவுகின்றன.
- சிறுவர் இலக்கியத்தின் பொற்காலமாகக் குறிப்பிடப்படுவது 1946 முதல் 1955 வரையிலான காலகட்டம் தான். அந்த பத்து வருடங்களில் ஏராளமான சிறுவர் இதழ்கள் வெளிவந்தன. உச்சத்தை அடைந்த இந்தத் துறை, இடையில் பெரிய தளர்வுக்கு உள்ளாகி, இப்போது மெல்ல நடை போட ஆரம்பித்திருக்கிறது.
- இடைப்பட்ட காலங்களில் பிள்ளைகளுக்குக் கல்வி பற்றி மட்டுமே சிந்திக்க வைக்க பெற்றோர் அரும்பாடுபட்டதன் விளைவு இது. கல்வி நிறுவனங்களும், பாட புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பை ஊக்குவிக்க மறந்தன. சிறுவர் இதழ்கள் பலவும் வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்டுவிட்டன. அது மட்டுமல்ல, நாளிதழ் வாசிப்பதையே வளரிளம் பருவத்தினர் மறந்து போயினர்.
- ஆனால், நம்பிக்கை அளிக்கும் விதத்தில், சமீபத்திய இரண்டு வருடங்களில் சிறுவர் இலக்கியத்தின் பக்கம் வாசகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது எனச் சொல்லலாம். புத்தகக் கண்காட்சிகளில் கூட சிறுவர்களுக்கான நூல்கள் பெருமளவில் விற்பனையாகின்றன என்று பதிப்பாளர்கள் கூறுகிறார்கள். இதனால் தற்கால சிறுவர் இலக்கியம் வளர்ச்சியை நோக்கி உள்ளது என்பது நம்பிக்கை தருகிறது. ஆயினும், படைப்பாக்கத்தில் இன்னும் புதுமைகளுடன் பாய வேண்டிய தேவை நீடிக்கிறது.
- இன்று சிறுவர்களுக்காக எண்ணற்ற கதைகள் வருகின்றன. அவற்றில் பல கதைகள் பழைய கதைகளாகவே இருக்கின்றன. இன்றைய சிறுவர்கள் முந்தைய தலைமுறையைக் காட்டிலும் மனமுதிர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். இன்றைய குழந்தைகள் நான்கு நாட்களுக்கு மேல் ஒரே பொம்மையை வைத்து விளையாடுவது கூட இல்லை. புதிய பொம்மையைத் தேடியே அவர்களின் கண்கள் அலைபாய்கின்றன.
- இப்படி இருக்கும் சூழ்நிலையில் முல்லா, பீர்பால், தெனாலி ராமன், மரியாதை ராமன் போன்ற கதைகளைத் தாண்டி வேறு வேறு வடிவங்களை அவர்கள் விரும்புகிறார்கள். வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்தான். ஆனால், அதே வேளையில் உலகில் வழக்கொழிந்து விட்ட மன்னர் பரம்பரை, மதியூகி மந்திரி, முனிவர்கள், இளவரசன், இளவரசி கதைகள் இன்றைய பிள்ளைகளை பெரிதாகக் கவர்வதில்லை.
- இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி. நவீன இணைய காலத்தை பிரதிபலிக்கக்கூடிய வகையில் படைப்புகள் இருப்பது அவர்களை வாசிக்கத் தூண்டும் காரணியாக அமையலாம். இது குறித்த உரையாடல், விவாதங்கள், விமர்சனங்கள் ஆரோக்கியமாக நடைபெற வேண்டும். அதுவே சிறுவர் இலக்கியத்தை இன்றைய விளிம்பு நிலையிலிருந்து மைய நிலைக்கு கொண்டு வரும் வழியாகும்.
- ஆனால், இதில் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளுக்குப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதில் தொடங்குகிறது முதல் சவால். தங்கள் பிள்ளைகளுக்கு ஐஸ்க்ரீம், சாக்லேட், ஆடைகள், பொம்மைகள், அலைபேசி என பலவற்றை வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கூட நூல்களை வாங்கிக் கொடுக்க முன்வருவதில்லை. புத்தகங்கள் வாங்கித் தருவது வீண் செலவு என்ற எண்ணம் முதலில் பெற்றோர் மனத்திலிருந்து விலக வேண்டும்.
- எந்தத் துறையில் இருந்தாலும், இலக்கியம் அறிந்தவர்கள், வாசிப்பை நேசிப்பவர்கள் தனித்துத் தெரிவார்கள். வாழ்க்கையை அவர்கள் அணுகும் முறையே, வாழ்வை பார்க்கும் கண்ணோட்டமே வித்தியாசமாக இருக்கும். வெற்றி - தோல்வியை லாவகமாக எதிர்கொள்ளும் திறன் பெற்றிருப்பர். மேலும், உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்த கலையும் இலக்கியமுமே அவர்களுக்கு கை கொடுக்கும்.
- இதைத்தாண்டி இன்றைய சிறுவர் இலக்கியம் நிறைய சவால்களை எதிர்நோக்கி இருக்கிறது. அலைபேசி, விதவிதமான செயலிகள், தொழில்நுட்ப விளையாட்டுகள் சூழ்ந்த இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளை வாசிக்க வைப்பது என்பது மிகப்பெரிய சவால். கல்வி செயல்பாடுகளுக்கு அடுத்தபடியாகவே தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி வந்த மாணவச் செல்வங்கள், கரோனாவிற்குப் பிறகு தங்களுக்கான அனைத்துத் தேவைகளுக்கும் அவற்றையே நம்பி இருக்க வேண்டிய நிலை.
- பள்ளி வகுப்பு நேரம் போக பயிற்சி வகுப்புகளும் இணையத்துடனே தொடர்கிறது. காட்சிவழி கேளிக்கைகள் போல பாடங்கள் கற்பதும் அவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தந்து கொண்டிருக்கிறது.
- அண்டை மாநிலமான கேரளத்தில் அரசு ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சிறுவர் நூல்களைப் பதிப்பித்து பள்ளி நூலகங்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.
- இதன் மூலம், சிறுவர்கள் படிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. அத்துடன் சிறுவர் நூல்களுக்கான விரிந்த சந்தை உருவாகும் வாய்ப்பும் ஏற்படுகிறது. தமிழகத்தில் சிறுவர் எழுத்தாளர்களுக்கென்று பல இதழ்கள் விருது வழங்குவது சமீபத்திய ஆறுதல்.
- தமிழ்நாட்டு பாடநூல் குழு நவீன இலக்கியம் குறித்து கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை விரிவாக்க அரசுப் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- "பெரியவர்களுக்காக எழுதிப் பழகிய பிறகு சிறுவர்களுக்கு எழுத வாருங்கள்' என்றார் மூதறிஞர் ராஜாஜி. ஏனெனில், சிறுவர் இலக்கியம் படைப்பது பெரியவர்களுக்காகப் படைப்பதைக் காட்டிலும் சிரமம்.
- எளிய வார்த்தைப் பயன்பாடு, அதிக கற்பனை திறன், பொருளில் தெளிவு, குழந்தைகளுடனான தொடர்பு, அவர்கள் உலகின் தனிப்பட்ட சொற்கள், குழந்தைகளின் விருப்பமான விளையாட்டுகள், படைப்புகளுக்கு ஏற்ப பொருத்தமான ஓவியங்கள் அமைதல், இறுதியாக நல்ல பதிப்பாளர் கிடைப்பது என்று பல சவால்களை சிறுவர் எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
- சிறுவர்களுக்கான படைப்புகள், சிறுவர்களைப் பற்றிய படைப்புகள், சிறுவர்களே எழுதுகிற படைப்புகள் என இருக்கும் வகைப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. சிறுவர்களை எழுத ஊக்குவிக்கும் அமைப்புகளும் பெருக வேண்டும். சிறுவர் இலக்கியவாதிகளின் கட்டற்ற கற்பனை வளம் சிறந்த படைப்புகளை மலரச் செய்யும்.
- தேர்வில் மாணவன் தனக்கு தெரிந்த பதிலை குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பக்க அளவிற்கு எழுதுகிறான் எனில் அதே மாணவன் தனக்கு தெரியாத கேள்விக்கு அதே குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றரை பக்க அளவிற்கு எழுதுகிறான். இதில் சுவாரஸ்யம் ஏற்படுத்தும் காரணம் என்பது அவனுடைய கற்பனை வளம். அந்தக் கற்பனை வளத்தை அபரிமிதமாக அவனுக்கு அள்ளி வழங்குவது வாசிப்பனுபவம் தான்.
- புத்தகக் கண்காட்சியொன்றில் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கை நீட்டி ஒரு புத்தகத்தை வாங்கித் தரச் சொல்லி தன் பெற்றோரிடம் கெஞ்சுகிறான். அதற்கு அவன் அப்பா, "நம் பக்கத்து தெருவில்தான் நூலகம் உள்ளது. அங்கு சென்று முதலில் படி' என்கிறார். அவன் அம்மாவோ ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆவது எப்படி? என்ற நூலை எடுத்துக் காண்பித்து "இதை வேண்டுமானால் வாங்கித் தருகிறேன் படி' என்கிறார்.
- உடனிருந்த மற்றொருவரோ "சித்தப்பா வீட்டிலிருந்து புத்தகங்களை உனக்கு இரவல் வாங்கித் தருகிறேன்' என்கிறார். இப்படி நூல்களை வாங்குவதில் கூட பிள்ளைகள் மீது பெற்றோர் தங்களின் விருப்பத்தைத் திணிக்கின்றனர். இது போன்ற செயல்கள் பிள்ளைகளை மனதளவில் பலவீனப்படுத்தும்.
- அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களில் 1000 பேரில் 25 அல்லது 30 மாணவர்களுக்கு மட்டுமே வாசிப்புப் பழக்கம் உள்ளது. தனியார் பள்ளிகளில் மதிப்பெண் நெருக்கடி இன்னும் அதிகம் என்பதால் இது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் குறையும்.
- முதலில் நம் வீட்டு பிள்ளைகளை செய்தித்தாள் வாசிப்பதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். செய்தித்தாள்களோடு சேர்ந்து வரும் சிறுவர் இதழ்களை வாசிக்கப் பழக்கிவிட்டால் நாளடைவில் அவர்கள் விரும்பி வாசிப்புத் தளத்துக்கு சென்று விடுவார்கள். புத்தக வாசிப்பை மாணவச் செல்வங்களின் அடிப்படையான செயல்பாடுகளில் ஒன்றாக நடைமுறைப்படுத்த, பல பள்ளிகள், ஆசிரியர்கள் தற்போது முன்வந்துள்ளனர். அதற்கு பெற்றோர் உறுதுணையாக இருப்பது அவசியம்.
- குழந்தைகளுக்கான கதை சொல்லி எண்ணற்றோர் இன்று உருவாகியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வழி அவர்கள் அன்றாடம் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி குழந்தைகளின் சிந்தனைத் திறனை மேம்படுத்தச் செய்கிறார்கள்.
- நம் வருங்காலத் தலைமுறையினரான சிறுவர் - சிறுமியர் தாய்மொழிப் பற்றோடும் இலக்கிய நாட்டமுடனும் பண்பாட்டுச் செழுமையோடு, விழுமியங்களைப் போற்றி வளர வேண்டுமெனில் முதலில் அவர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி வாசிக்கப் பழக வேண்டும்.
நன்றி :தினமணி (04-12-2020)