TNPSC Thervupettagam

மீனவர் உரிமைகளைப் பறிக்கக் கூடாது!

December 31 , 2024 10 days 42 0

மீனவர் உரிமைகளைப் பறிக்கக் கூடாது!

  • சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் நடத்தியுள்ள போராட்டம், வாழ்வாதாரம் குறித்த அவர்களது அச்சத்தின் வெளிப்பாடு. கடற்கரையில் தங்கள் உரிமைகள் பறிபோகும் என்கிற அவர்களின் கவலை நியாயமானது.
  • மத்தியச் சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின்கீழ் வரும் ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை அமைப்பு, இந்தியாவில் உள்ள கடற்கரைகளைக் குறிப்பிட்ட தரநிலைகளை அளவுகோலாகக் கொண்டு ‘நீலக்கொடி கடற்கரை’யாக அங்கீகரித்துச் சான்றிதழ் அளித்து வருகிறது. டென்மார்க் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையின் வழிகாட்டலில் நடைபெறும் இப்பணியின்படி, கடற்கரையில் சுற்றுச்சூழல் கல்வி, தண்ணீரின் தரம், நிர்வாகம், பாதுகாப்பு ஆகியவை சார்ந்து 33 தரநிலைகளைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • முக்கியமாக, கடற்கரையில் நீடித்த வளர்ச்சியோடு கூடிய சுற்றுலா நடைபெறுவதும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதும் இதன் மூலம் உறுதிசெய்யப்படுகிறது. கடற்கரையில் பாதைகள் அமைத்தல், விளையாட்டுக்கான வெளியை ஏற்படுத்துதல், மிதிவண்டித் தடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் உள்ளிட்ட 10 கடற்கரைப் பகுதிகள் இந்திய அளவில் நீலக்கொடித் தரநிலைச் சான்று பெறத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அஸ்வினி குமார் 2022இல் தெரிவித்தார்.
  • தற்போது சென்னை மெரினா கடற்கரைக்கும் நீலக்கொடிச் சான்றிதழ் பெற முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான கட்டுமானங்களை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கிற அச்சம் சென்னை பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் கடற்கரையைச் சார்ந்துள்ள மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 24இல் கடற்கரை அருகே அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இத்திட்டத்துக்காக அரசு முன்னெடுக்க இருக்கும் கட்டுமானங்கள், கடற்கரையிலிருந்து தங்களை வெளியேற்றும் சாத்தியக்கூறு உள்ளதாக மீனவர் நல அமைப்புகள் தெரிவித்தன.
  • குறிப்பிட்ட சாலைகள் வழியாக மட்டுமே கடற்கரைக்குள் செல்ல அனுமதிப்பதும் இத்திட்டத்தின் ஓர் அங்கம்; இது பொது மக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாக இருக்கும் எனப்படுகிறது. 1987இல் இருந்து உலகின் பல்வேறு கடற்கரைகளில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், சுற்றுலாக் கட்டமைப்பை மேம்படுத்துவதாக மட்டுமே இருப்பதாகவும் கடற்கரையில் நிகழும் மாசுபாட்டைக் குறைக்க உதவவில்லை எனவும் விமர்சிக்கப்படுகிறது.
  • ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்துக்காகவும் மெட்ரோ ரயில் திட்டத்துக்காகவும் சென்னை நகரத்தில் பாண்டி பஜார் உள்ளிட்ட சில சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட எளிய பின்புலம் கொண்ட வணிகர்கள் வியாபார நோக்கில் இழப்புக்குள்ளாவதும் இதனூடாக நிகழ்கிறது. புலிக் காப்பகங்களுக்காக காட்டுப் பகுதிகளில் தொடங்கப்படும் திட்டங்கள், காலங்காலமாக அங்கு வாழும் பழங்குடிகளின் வாழ்விடத்தைப் பறிப்பதாக நடைமுறையில் உள்ளது.
  • இதே நெருக்கடியை நீலக்கொடித் திட்டம் மெரினா கடற்கரை சார்ந்த மீனவர்களுக்கு ஏற்படுத்தும் சாத்தியத்தை மறுப்பதற்கு இல்லை. 1980களில் அப்போதைய அதிமுக அரசால் இதே கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட திட்டம், மீனவர்களின் தீவிர எதிர்ப்புக்கு வழிவகுத்ததைத் தற்போதைய திமுக அரசு மறந்துவிடக் கூடாது. மொத்தத்தில், கடற்கரையின் முதன்மை உரிமை கொண்ட சமூகத்தினர் மீனவர்கள் என்கிற புரிதலோடு எந்த ஒரு திட்டத்தையும் அரசு செயல்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்