TNPSC Thervupettagam

மீன்பிடி தொழிலை முறைப்படுத்த வேண்டும்

August 5 , 2021 1092 days 478 0
  • ‘நாங்க புடிக்காம வுட்டுட்டம்னா அந்த மீனு திரும்ப வராது’ என்பது பல மீனவர்களின் வாதம்.
  • இது கடலைப் புரிந்துகொண்ட பூர்வகுடிகளின் குரலல்ல; பெருமுதலீட்டுக்கும் பிழைப்புக்கும் இடையில் சிக்கிக்கொண்ட நிகழ்காலத் தலைமுறையின் தவிப்பு.
  • இழுவைமடி, சுருக்குமடி போன்ற தொழில்நுட்பங்களின் கண்காணிப்பற்ற, நீண்ட காலப் பயன்பாடு தமிழ்நாட்டு மீனவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
  • இழுவைமடிப் பயன்பாடு தமிழகக் கடல்களின் மீன்வளத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
  • மன்னார் கடலில் 200-க்கும் மேற்பட்ட இரட்டைமடிகள் இயக்கப்படுகின்றன. இழுவைமடி, சுருக்குமடித் தொழில்நுட்பங்கள் இந்தோ - நார்வீஜியன் திட்டத்தின் கீழ் (1953-72) அறிமுகப் படுத்தப் பட்டன.
  • நடுவண் மீன் தொழில்நுட்ப நிறுவனத்தின் முனைப்பால் (CIFT- ICAR கொச்சி) 1982-ல் கேரளத்தில் பரவத் தொடங்கிய சுருக்குமடித் தொழில்நுட்பம், விரைவில் வடமேற்கு, கிழக்குக் கடற்கரைகளிலும் பரவத் தொடங்கியது.
  • ‘ரேஸ்மடி’ எனப்படும் ‘இரட்டைப் படகு மடி’ (otter trawl), இழுவைமடியின் இன்னொரு வடிவம்.
  • மடியின் வாய்ப் பகுதியின் இரண்டு பக்கங்களையும் இரண்டு படகுகளின் கொம்போடு இணைத்துக் கொண்டு 12 கடல்மைல் வேகத்தில் மடியை இழுக்கிறது.
  • சிறு கண்ணிகள் கொண்ட கடைமடி, கிளறு பலகைகளால் விரிந்தும், அதிவேக இழு விசையினால் உயர்ந்து நிற்கும் வாய்ப் பகுதியுடன் நகரும் இரட்டைமடியானது, குஞ்சுமீன், முட்டைகளோடு பெருவாரியான மீனை வாரிக்கொண்டு வருகிறது.
  • மேற்கடலில் பெருங்கூட்டமாய்ப் பயணித்துப் போகும் அயிலை, சூரை போன்ற மீன்களைக் குறிவைத்து, சுவர்போல அவற்றை வலையால் சூழ்ந்து, மீன்கள் வெளியேறிவிடாமல் இரு முனைகளையும் மேல் (மிதவை), கீழ் (குண்டு) பகுதிகளிலுள்ள கயிற்றால் சுருக்குப்பை போல இணைத்து விடுவார்கள்.
  • மீன்வள அறிஞர் சைலஸ் ‘இந்த நாசகரமான மீன்பிடி முறை கிழக்குக் கடற்கரையின் மீன்வளங்களை ஒட்டுமொத்தமாய் அழித்துவிடும்…’ என்று 1980-லேயே எச்சரித்திருந்தார்.
  •  ‘சுருக்குமடிகளை அரசு கட்டுப்படுத்தத் தாமதித்துவிட்டது’ என்கிறார் கடல் உயிரின வளர்ப்பு கலந்தறிவாளர் சக்திவேல்.
  • தமிழகக் கடல்களில் மீன்பிடி முறைகள் மட்டுமின்றி, விசைப்படகுகளின் எண்ணிக்கையும் இயந்திரங்களின் விசைத்திறனும் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பது அடிப்படையான சிக்கல்.

மீன்வள வீழ்ச்சியின் காரணிகள்

  • கடல் மீன்வள வீழ்ச்சியைத் துரிதப்படுத்தியவை நவீனத் தொழில்நுட்பங்கள் மட்டுமல்ல; கரைக்கடல் மீன்வளத்தில் நன்னீர்ப் பெறுமதிக்கு முக்கியமான பங்குண்டு.
  • டெல்டா தண்ணீர் சதுப்புநிலத்தில் வந்துசேர்ந்த காலத்தில் நல்ல இறால் பாடு கிடைத்துவந்ததை நினைவுகூர்கிறார் தாஜுதீன் (62, கள்ளிவயல்தோட்டம்).
  • ‘பாக் நீரிணைப் பகுதியில் மீன் உற்பத்தி அழிந்துபோனதற்குக் கடற்கரையில் இயங்கும் இறால் பண்ணைகளும் கடலில் இயங்கும் இழுவைமடி, சுருக்குமடிகளும்தான் காரணம்’ என்கிறார் காளிதாஸ் (62, அதிராம்பட்டினம்).
  • ‘கிழக்குக் கடற்கரை முழுவதும் வனங்களை அழித்து இறால் பண்ணைகள் அமைக்க அரசு உடந்தை’ என்கிறார் அர்ஜுனன் (61, மணமேல்குடி).
  • ‘விழுப்புரம் மாவட்டத்துல 19 குப்பங்கள்லயும் இருக்கற இறால் பண்ணைலயிருந்து வர்ற கழிவுகளும் ரசாயனங்களும் எங்க மண்ணையும் நிலத்தடி நீராதாரத்தையும் மட்டுமில்லாம கடலையும் கால்வாயையும் அழிச்சுக்கிட்டிருக்கு’ என்கிறார் பராசரன் (32, கைப்பாணிக்குப்பம்).
  • மத்திய அரசு செயல்படுத்திவரும் ‘சாகர் மாலா’ திட்டத்தின் மதிப்பீடு எட்டு லட்சம் கோடி என்கிறார்கள்.
  • ‘பெருவணிகத்தை முன்னிட்டுக் கடலோரத்தில் அதிவிரைவுச் சாலை அமைப்பது, துறைமுகங்களை மேம்படுத்துவது, மீன்பிடி தொழிலைத் துறைமுகமயமாக்குவது உள்ளிட்ட பெருந்திட்டத்துடன் அரசு காய்களை நகர்த்துகிறது’ என்கிறார் செயல்பாட்டாளர் அருணபாரதி.

மீனவர்களைக் கைவிட்ட மீன்பிடி விதிகள்

  • 1983-ல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மீன்வள ஒழுங்காற்றுச் சட்டம் 2017-ல் திருத்தி அமைக்கப்பட்டது. எல்லா வகையான இழுவைமடி, சுருக்குமடிகளுக்கும் 2000-ல் தடை விதித்து அரசாணை வெளியிட்டது; அத்தடையை சென்னை உயர் நீதிமன்றம் 2018-ல் உறுதிப்படுத்தவும் செய்தது.
  • ஆனால், 12 கடல்மைலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பின் வளங்கள், தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்கிற ஒரே காரணத்தை முன்வைத்து, மத்திய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது புதிய நெருக்கடிகளை ஏற்படுத்திவருகிறது.
  • ‘கடல் மீன்வளத்தை மேம்படுத்தி, மீனவர் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு’ மத்திய அரசு மீன்வள மசோதாவை (2021-வரைவு) முன்வைக்கிறது. ஆனால், ‘கடலுக்குள் போகும் விசைப்படகுகள் உரிமம் பெற வேண்டும், மீன்பிடிக்கும் இடத்துக்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்த வேண்டும்’ என்கிறது இம்மசோதா (பகுதி 7).
  • 2017-ல் முந்தைய தமிழ்நாடு அரசு வெளியிட்ட, சீரமைத்த மீன்பிடி ஒழுங்காற்றுச் சட்டமும் இதே விதிகளை வைத்துள்ளது என்பது அதிர்ச்சியூட்டுகிறது.
  • மீன்வள மசோதாவிலும், மாநில அரசின் மேற்சொன்ன சட்டத்திலும் இடம்பெறும் மற்றொரு பொதுவான கூறு, இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தைக் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்திருப்பது.
  • ‘ஏற்கெனவே தமிழ்நாடு காவல் துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது; அத்தோடு, 2020-ல் 112 காவல் அதிகாரிகளுடன் கடல்சார் நடப்பாக்கப் பிரிவும் நிறுவப்பட்டுள்ள நிலையில், மீன்பிடி தொழிலை ஒழுங்காற்றும் அதிகாரத்தைக் கடலோரப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைப்பதன் நோக்கம் என்ன?’ என்று விஜோ ரொசாரியோ (28, கூட்டப்புளி) எழுப்பும் கேள்வி நியாயமானது.

மாற்று ஏற்பாடுகள் தேவை

  • மீனவர்களின் வாழ்வாதாரமாய் நீடித்துவந்த கரைக்கடலிலும் பெரும் லாபத்தைக் குறிவைத்து செல்வாக்கு மிக்கவர்கள் முதலீடுகளுடன் உள்ளே நுழைந்துவிட்டனர்; இழுவைமடி, சுருக்குமடி முதலீட்டாளர்கள் பலர் நாட்கூலி அடிப்படையில் வேலையாட்களை அமர்த்தி மீன்பிடிக்கின்றனர்.
  • பெரும் லாபத்தைக் குறிவைப்பவர்கள், ஒருபோதும் கடல்வளத்தைப் பேணுவதில் அக்கறைப்பட மாட்டார்கள். கடலூர், ராமேஸ்வரம் போராட்டங்கள் நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்.
  • ‘இழுவைமடி, சுருக்குமடிகளை ஒழுங்குபடுத்தலாம் என்பது கண்துடைப்பு; தடை செய்வது தான் ஒரே தீர்வு’ என்பது அடிமட்ட, சிறுதொழில் மீனவர்களின் குரல்.
  • இந்நிலையில், மாநில அரசு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது. தடைப் பட்டியலிலுள்ள அனைத்து மீன்பிடி முறைகளையும் இதே கரிசனத்துடன் கண்காணிப்பதும் நடைமுறைச் சாத்தியமான மாற்று ஏற்பாடுகளை வகுத்துச் செயல்படுத்துவதுமே நீடித்த தீர்வைத் தரும்.
  • மீன்பிடி ஒழுங்காற்று விதிகள் - 2020லுள்ள மீனவர் விரோத விதிகளை நீக்க வேண்டும்.
  • 12 கடல்மைலுக்கு அப்பாலுள்ள ‘முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பகுதி’யில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு முற்றிலுமாய்த் தடை போடுமாறு மத்தியக் கால்நடை-மீன்வளத் துறையை வலியுறுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்