TNPSC Thervupettagam

மீன்வளப் பேரிடரின் காலம்

December 28 , 2024 13 days 44 0

மீன்வளப் பேரிடரின் காலம்

  • காலத்தையும் கடலின் போக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு மரபார்ந்த கடற்குடிகள் மீன் வளத்தைக் கணித்துவந்துள்ளனர். பருவம் தவறாமல் மீன்கள் வந்து கொண்டிருந்தன, கடற்குடிகளின் கணிப்புகளும் சரியாகவே இருந்தன. அன்றைக்கு நிலவிவந்த காலநிலையின் சீர்மையினால் அது சாத்தியமானது.
  • பதினாறு வகைக் காற்று, அவை சார்ந்த கடல் நீரோட்டங்கள், கதிரவன், நிலவு, விண்மீன்களின் நகர்வுகளை வைத்துக் கொண்டு வானிலையையும் மீன்வளத்தையும் கணித்த நிலை மாறிவிட்டது. நவீனத் தொழில் நுட்பங்கள் மரபறிவைக் கிட்டத்தட்டத் தேவை யற்ற ஒன்றாக ஆக்கிவிட்டிருக்கின்றன. கட்டுமரமும் சிறு படகும் கடற்குடியைக் கடலுக்கு நெருக்கமாக வைத்திருந்தன. நவீனத் தொழில்நுட்பங்கள் அவர்களை ஆழ்கடலுக்கு இட்டுச்சென்றன.
  • விசைப்படகுகளும் மீன்பிடிக் கப்பல்களும் அவர்களைச் சொகுசுகளுக்குப் பழக்கின. காத்திருத்தல், பசித்திருத்தல், நீச்சல், உடலுழைப்பு போன்ற கடற்குடிகளின் ஆதிப் பண்புகள் காலப்போக்கில் அற்றுப்போய் விட்டன. அதன் விளைவை ஒக்கி புயல் போன்ற ஆழ்கடல் பேரிடர்களின்போது அவர்கள் அனுபவிக்க நேர்ந்தது. படகுகள் புயலில் மூழ்கிப்போன நிலையில், உயிர் மீந்திருந்தவர்களால் நெடுநேரம் நீந்திக் கடக்க இயலாமல் இறந்துபோயினர்.

கடல் அன்னை:

  • உலக அளவில் 500 கோடி மக்களின் உணவாதாரம் நேரடியாகவோ மறைமுக மாகவோ மீன்வளத்தைச் சார்ந்திருக்கிறது. பன்னாட்டு உணவு வர்த்தகத்தில் 37% மீன் வளம் சார்ந்தது. வங்கதேசம், கம்போடியா, கானா, சியரா லியோன், இலங்கை உள்ளிட்ட பல பின்தங்கிய நாடுகளில் 50% மக்கள் புரதத் தேவைக்கு மீனை மட்டுமே சார்ந்திருக்கின்றனர். மீன்வள வீழ்ச்சியானது, எம்மாதிரியான பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தும் என்பதை விளக்குவதற்கு இந்த அடிப்படைத் தரவுகள் போதுமானவை.
  • 365 நாளும் பாடு கடலில் நவீன மீன்பிடிக்கருவிகள் அறிமுகமாவதற்கு முன்னால், கடற்கரைகளில் மாசுபடுத்தும் தொழிற்சாலை கள் வருவதற்கு முன்னால், கடற்குடிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது? 2011இல் இடிந்தகரை போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்குள்ள ஒரு மீனவர் சொன்னார்: “இந்தக் கடல்ல கால் நனைச்சுட்டா கடலு எங்கள வெறுங்கையாத் திருப்பி உடுறதில்ல. வருஷத்துல 365 நாளும் இந்தக் கடல்ல சீசன்தாம்.”
  • தன் சிறு பருவத்தில் உவரிக் கடலின் மீன்வளத்தை எஸ்.வி.அந்தோணி (1950, உவரி) நினைவுகூர்கிறார்: “மடியைக் கடலில் இறக்கிவிட்டு, தட்டுகளை இணைத்து விடுவார்கள். இரண்டு மரங்களும் சேர்ந்து மடியை இழுக்கும்போது மடி படுக்கப்போட்ட கிணறு மாதிரி விறைத்து நிற்கும்; மீன்கள் மடிக்குள் சேர்ந்துவிடும். அதிகமான மீன் கிடைத்தால் இடையில் கயிறு இரண்டாய், நாலாய் முறித்து (பகுத்து, மடியைக் கட்டுவது) எடுப்பார்கள். கீ(ழ்)ப்புறத்தில் நாலு ஒமல், மே(ல்)ப்புறத்தில் நாலு ஒமல் நிரப்புவார்கள்.
  • தெரவங்கண்ணை, பெருவங்கண்ணை, சாவாளை, சள்ளைமீன், வெள்ளிக்குறி மீன், கண்ணாடிக்காரல், பூவாலி- இப்படி இன்றைக்குப் பார்க்க முடியாத பலவிதமான மீன்களும் அன்றைக்கு ஒமல் ஒமலாய்க் கொண்டு வருவாங்க. மடியை விட்டால் வாளாவலை, கோலாவலை, சாளாவலை மாதிரி பல வலைகள் இருந்தன. எங்கள் பகுதியில் நெத்திலி வலை கிடையாது, ஆனால் மடியில் நெத்திலி, கூனி படும்”.

காலம் தவறா மீன்வளம் எங்கே?

  • ‘‘...எங்க அப்பா, தாத்தா காலத்துலயிருந்தே மீனு மொறப் பிரகாரம் வந்துகிட்டிரிக்கும்– வாடக் காலத்துல, மொதல்ல தாந்த மீனு ஓடிவரும், அதுக்குப் பின்னால இந்த மீன்தாம் வரும்னு ஒரு கணக்கு இருந்திச்சு. கடவுள் அமைச்சுவிட்ட பாத வழியா, மொதல்ல நீ போ, பின்னால நாம் வருவேம்னு வரிசையா வரும். கடைசியா வாற ஒரு மீனுண்டு. அதுக்குப் பொறவு ஒரு மீனும் இரிக்காது, எல்லாம் வெலங்க போயிரும்...’’ என்கிறார் அந்தோணிசாமி.
  • ‘‘இன்ன காலம் எறா கெடைக்கும், இன்ன காலம் மீன் கெடைக்குங்கறதெல்லாமே தலைகீழா மாறிப்போச்சு. வருஷத்துல இந்தப் பக்கத்துல (விழுப்புரம் கடற்கரை) அதிகமா மீன் கெடைக்கறதுண்ணா- புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகைலதாம் (டிசம்பர்- ஜனவரி- பிப்ரவரி). அப்பதாம் இந்தச் செனாகூனி, நெத்திலி மாதிரி பொடிமீன்கள்லாம் நெறிய படும். சில மீனு அத்தே போச்சு! (காணாமலாகிவிட்டது). நொணலு, சுதும்பு சுத்தமா இல்ல’’ என்கிறார் கோதண்டபாணி (1941, கைப்பாணிக்குப்பம்). சுனாமிக்கு முன்பே இந்த மாற்றங்கள் குறித்து மீனவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
  • மூத்த கடற்குடிகளின் இது போன்ற உரையாடல்கள், கடல் பாலையாகிக் கொண்டிருப்பதை முன்னுரைத்தன. ஆனால், தீர்வு என்னவென்று அவர்களால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் கடல் இப்போது அவர்களின் கையில் இல்லை.
  • தண்பெரும் பரப்பின் ஒண்பதத்தை முன்போல் மீனவர்களால் கணிக்க முடியவில்லை. பருவகாலங்கள் சீர்மை தவறிவிட்டன. மீன்வள அறிஞர் டேனியல் பாலி குறிப்பிடுவதுபோல, இது மீன்வளப் பேரிடரின் காலம்.

தரவு அடிப்படைகளின் பெயர்வு:

  • பன்னாட்டுக் காலநிலை மையங்கள் ஆவணப்படுத்திவரும் கடற்பரப்பு வெப்ப நிலைத் தரவு போலவே, மீனவர்களின் மரபறிவும் நம்பகமானது. நவீன மீன்பிடி நுட்பங்கள் அறிமுகமான மூன்று தலைமுறை களுக்குள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல மீன் இனங்கள் காணாமல் ஆகியுள்ளன; போலவே, நெய்தல் நிலம் எத்தனை எத்தனை மரபறிவுக் கூறுகளை இழந்திருக்கிறது என்பதை அளவிட முடியாது.
  • இழப்பைக் கணக்கீடு செய்ய, நம்மிடம் இருந்தவை குறித்த துல்லியமான கணக்கு வேண்டும். அத்தரவுகளை எக்காலம் தொடங்கிச் சேகரிப்பது என்பதுதான் இன்றைக்குச் சவாலான கேள்வியாக உள்ளது. முற்காலத்தில் பருவந்தோறும் கிடைத்துவந்த செழிப்பான அறுவடைகளை ஆவணப்படுத்தியிராத நிலையில், கடல் சூழலியல் சிதைவை வரையறுத்துச் சொல்ல வழியே இல்லை. ‘தரவு அடிப்படைகளின் பெயர்வு’ (Shifting Baselines) காரணமாக, கடல் சூழலியல் சிதைவு குறித்த கணிப்புகள் பிழைத்துப் போகின்றன என்கிறார் டேனியல் பாலி.

‘தரவு அடிப்படைகளின் பெயர்வு’ என்பது என்ன?

  • ஒரு தலைமுறை, அதன் நினைவுப் பரப்பிலுள்ள தரவுகளின் அடிப்படையில் இயற்கையில் நேர்ந்துள்ள மாற்றங்களை மதிப்பீடு செய்ய முயலும்; அன்றைக்கு நூறு மீன்கள் வருகிற கடலில் இன்றைக்குப் பத்து மீன்கள்கூட இல்லை என்பது நிகழ் தலைமுறையின் கணிப்பாக இருக்கிறது. இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் அங்கு லட்சம் மீன்கள் இருந்தது குறித்த பதிவுகள் இல்லை. அதனால் ஒப்பீட்டு அடிப்படையிலான கணக்கீடு பிழைத்துப்போகிறது. சரியான கணக்கீட்டுக்கு முறையான வரலாற்று, சூழலியல் தரவுகளைத் திரட்டியாக வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்