- ‘எதுவும் தாமதமாகிவிட வில்லை. இந்த இடத்தில் ஆரம்பித்தால்கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்’ என்கிற கல்யாண்ஜியின் (வண்ணதாசன்) வரிகளுக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போகிறார் ஸ்ருதி. சென்னையைச் சேர்ந்த இவர் தன் மகளால் ஓவிய மாணவியானார். ஆர்வமும் பயிற்சியும் இவரை வெகுவிரைவில் ஓவியக்கலையில் தேர்ச்சிபெறச் செய்தன. 2023இல் ‘பிச்சர் ஆர்ட்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கும் அளவுக்கு இத்துறையில் திறமையை வளர்த்துக்கொண்டார் ஸ்ருதி.
- சிக்கல் இல்லாத குடும்ப வாழ்க்கை, செழிப்பான பொருளாதாரப் பின்புலம் என வாழ்க்கையே ஸ்ருதிக்கு மிகச் சிறந்த ஓவியமாகத் தான் அமைந்திருக்கிறது. ஆனால், அவர் இவற்றில் மட்டுமே திருப்தி யடையவில்லை. தனக்கென்று தனித்ததோர் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார். தன்னுடைய மகளுக்கு ஓவியம் வரையச் சொல்லிக்கொடுத்த ஸ்ருதியை வண்ணங்களும் அவற்றி லிருந்து பிறந்த ஓவியங்களும் ஈர்த்துக் கொண்டன. ஸ்ருதி செல்ல வேண்டிய பாதையை அவை வெளிச்சமிட்டுக் காட்டின. அன்றைக்குப் பிடித்த தூரிகை பிறகு அவரது கையில் ஆறாம் விரலாக இணைந்துகொண்டது.
- அக்ரிலிக், எண்ணெய் ஓவியம் ஆகிய இரண்டும்தான் ஸ்ருதியின் விருப்பத் தேர்வு. ஐரோப்பிய ஓவியப் பாணி இவரை மிகவும் கவர்ந்ததால் அது பற்றிய தேடலிலும் இறங்கினார். ஓவியம் என்பது எவ்வித சமரசமும் இல்லாமல் உண்மையைச் சொல்லும் கருவி என்பதை ஸ்ருதி உணர்ந்துகொண்டபோது ஓவியம் அவருக்கு வசப்பட்டிருந்தது. வார்த்தைகளால் விவரிக்க முடியாததை ஓவியம் சாதித்துவிடும் என்பதற்கு உதாரணங்களாக இவரது ஓவியங்கள் திகழ்கின்றன.
- மும்பையிலும் டெல்லியிலும் ஓவியக் கண்காட்சிகளை அண்மையில் நடத்தியிருக்கிறார் ஸ்ருதி. முதல் கண் காட்சியை மும்பையில் நடத்திய போது புதுமுகமான தனது ஓவியங்களுக்குப் பார்வையாளர் மத்தியில் வரவேற்பு இருக்குமா என்கிற பதற்றம் ஸ்ருதியை வாட்டியது. ஆனால் பார்வைக்கு வைத்த ஓவியங்களில் பெரும்பாலானவை விற்றுப்போனதைத் தனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறார் ஸ்ருதி.
- “முதல் கண்காட்சியிலேயே இவ்வளவு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. என்னுடைய வளர்ச்சிக்கும் முயற்சிக்கும் என் ஓவிய குரு ராம்மோகன்தான் காரணம். நம்மை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்ல எப்போதும் ஒருவர் இருப்பார். என் குருவும் அப்படியானவர்தான். எது நடந்தாலும் மனம் தளராமல் பயணம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பார். நம்மால் முடியும் என்று நம்பிச் செய்தால் நிச்சயம் அது முடியும் என்கிற நம்பிக்கையை அவர் விதைத்தார்” என்கிறார் ஸ்ருதி.
- சோர்ந்துபோகிற மனங்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் வல்லமை ஓவியத்துக்கு இருக்கிறது என்பதால் வீட்டுச் சுவர்களின் நிறத்துக்கும் அமைப்புக்கும் ஏற்ப ஓவியம் வரையும் இன்டீரியர் ஓவியப் பணியையும் ஓராண்டாக ஸ்ருதி செய்துவருகிறார். இவரது கைவண்ணத்தில் கிளைகளும் பூக்களும் பறவைகளுமாகச் சுவர்கள் உயிர்பெறுகின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 07 – 2024)