- தமிழ்நாட்டின் அரசியல் களத்திலும், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட பொதுத் தளத்திலும் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. அவரது பிறந்தநாள் நூற்றாண்டு தொடங்கும் தருணத்தில், அவரது சாதனைகளை நினைவு கூர்வது அவசியம்.
- பொருளாதாரத்திலும் சமூகரீதியிலும் மிகவும் பிற்பட்ட நிலையில் இருந்த குடும்பத்தில் பிறந்தவரான கருணாநிதி, சாதிக் கொடுமைகளுக்கும் சமூக ஏற்றதாழ்வுகளுக்கும் எதிரான போராட்டத்தைப் பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டார். பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு, திராவிட இயக்கத்தில் இணைந்து இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் துடிப்புடன் பங்கேற்றார்.
- திரைப்படத் துறையில் திரைக்கதை ஆசிரியர்-வசனகர்த்தாவாக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். சமூகப் படம் என்றாலும் வரலாற்றுப் படம் என்றாலும் ‘கலைஞர்’ கருணாநிதியின் பேனா, புரட்சிக் கனல் தெறிக்கும் வசனங்களையே எழுதியது. அவரது பிற எழுத்துப் பங்களிப்பும் சமூக, அரசியல் களத்தில் தாக்கம் செலுத்தியது. 1942இல் அவர் தொடங்கிய ‘முரசொலி’ பத்திரிகையைத் தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் பத்திரிகையாகத் திறம்பட நடத்திவந்தார்.
- பெரியாரிடமிருந்து விலகி அண்ணா தலைமையில் உருவான திமுகவின் முக்கிய அங்கமாக மாறினார். அண்ணாவின் வழியில் மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுப்பதிலும் மாநில உரிமைகளைப் போராடிப் பெறுவதிலும் இந்திய அரசியல் களத்தில் முன்னத்தி ஏராகத் திகழ்ந்தார்.
- குளித்தலை தொகுதியில் வென்று முதல் முறையாகச் சட்டமன்றத்தில் நுழைந்தவர். அதற்குப் பிந்தைய 60 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து சாதனை படைத்தார். அண்ணாவின் அகால மரணத்துக்குப் பின் முதல்வரானார். மாநிலத்தின் முதல்வராக ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- பிற்படுத்தப்பட்டோரையும் பட்டியல் சாதியினரையும் சமூகரீதியாக உயர்த்திய இடஒதுக்கீடு அதிகரிப்பு உள்ளிட்ட சமூகநீதித் திட்டங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளில் தமிழ்நாட்டுக்கு முன்னணி இடம்பெற்றுத் தந்த பல சமூகநலத் திட்டங்களையும் அவருடைய அரசு செயல்படுத்தியது.
- எதிர்க்கட்சி வரிசையில் நீண்ட காலம் அமர வேண்டிய நிலை இருந்தபோதும் கடும் நெருக்கடியான தருணங்களில் திமுக தடுமாறியபோதும் கட்சியை வழிநடத்துவதில் அவரது போர்க்குணம் பெரும் பங்கு வகித்தது.
- 90 வயதைக் கடந்த பிறகும் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் இளம் தலைமுறைக்கு வழி காட்டக் கூடிய வாழ்க்கை முறை அவருடையது. முதுமையின் பாதிப்புகளால் சுயநினைவுடன் செயல்பட முடியாத நிலை ஏற்படும்வரை தீவிர அரசியல், வாசிப்பு, எழுத்துப் பணி ஆகியவற்றைத் தொடர்ந்துகொண்டே இருந்தார்.
- மாநிலத்தின் முதலமைச்சராகவும் தேசிய அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் ஆளுமையாகவும் உயர்ந்துவிட்டபோதும் சாதிப் பாகுபாடுகள் தன்னைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்ததாகக் கருணாநிதி பதிவுசெய்திருக்கிறார். எனினும், அவற்றால் சோர்வடைந்து விடாமல் சாதிக் கொடுமைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடினார்.
- சுறுசுறுப்பு, கடின உழைப்பு, மாறாத தமிழ்ப் பற்று, விடாமுயற்சி, தோல்வியைக் கண்டு அஞ்சாத மனநிலை, போராட்டக் குணம் ஆகியவற்றால் அரசியல், கருத்தியல் எதிரிகளையும் வியந்து பாராட்ட வைத்தவர் கருணாநிதி. இலங்கை இறுதிக்கட்டப் போரில் தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும், 2ஜி ஊழல் புகார்களும் திமுகவின் தலைவராகக் கருணாநிதிக்குப் பெரும் பின்னடைவைத் தந்தன.
- எனினும், அவற்றையெல்லாம் கடந்து சமூகநீதியில் அவர் செய்த சாதனைகளே நிலை பெற்று விட்டன. தமிழ் மொழியையும் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் பல உயரங்களை எட்ட வைத்த கருணாநிதியைத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப் பட்டுள்ளது.
நன்றி: தி இந்து (02 – 06 – 2023)