TNPSC Thervupettagam

முதலமைச்சரின் ஆய்வு உதவித்தொகை முழுமையாகப் பலன் தரட்டும்

November 2 , 2023 437 days 311 0
  • தமிழ்நாட்டிலுள்ள மாணாக்கர்களிடையே ஆராய்ச் சித் திறனை வளர்க்கவும், புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், ‘முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்ட’த்தைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்கான தேர்வையும் உதவித்தொகை வழங்கும் பணியையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. விண்ணப்பிப்பதற்கோ, தேர்வு எழுது வதற்கோ எந்தக் கட்டணமும் இல்லை என்பது இதன் சிறப்பு.
  • இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் போட்டித் தேர்வின் அடிப்படையில் கலை, மானுடவியல், சமூக அறிவியல் பிரிவுகளில் 60, அறிவியல் பிரிவில் 60 என மொத்தம் 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வானவர்கள் தமிழக அரசுக் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆய்வாளராகச் சேர இயலும்.
  • இந்த உதவித்தொகை மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் பெரிதும் உதவியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதேவேளையில், ஓர் ஆய்வு மாணவனாக, அண்டை மாநிலமான கேரளத்தில் இத்தகைய உதவித்தொகை செயல்படுத்தப்படும் விதத்தின் அடிப்படையில் சில யோசனைகளை முன்வைக்கிறேன்.

இணைப்புக் கோளாறு

  • 16.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையின் முதல் பக்கத்தில், இத்திட்டத்துக்கான அரசாணையை (27.02.2023 தேதியிட்டது) வாசிப்பதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இக்கட்டுரை பிரசுரமாகும்வரை இணைப்பு வேலை செய்யவில்லை. மாதம் எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படுகிறது, எத்தனை வருடங்களுக்கு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட மேலதிகத் தகவல்கள் அரசாணையில்தான் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த உதவித்தொகை குறித்த புரிதலை அரசாணை மாணவர்களுக்கு அளிக்கும்; விண்ணப்பிப்பதா வேண்டாமா என முடிவெடுக்கவும் உதவும். எனவே, அதற்கான இணைப்பு உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். எனக்குக் கிடைத்த அரசாணை நகலில் முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் ரூ.25,000 எனவும், கடைசி வருடத்துக்கு மாதம் ரூ.28,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இடைநிற்காமல் கல்வி கற்கும் ஒருவர் 23 வயதில் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, முனைவர் பட்ட ஆய்வுக்குள் நுழைய இயலும். அவர்களைப் பொறுத்தவரை இது கணிசமான தொகைதான். வயது வரம்பு இல்லை என்பதால் திருமணமானவர்கள், குழந்தை உள்ளவர்கள், வயது முதிர்ந்த பெற்றோர்களுடன் வசிப்பவர்கள் என அனைவருக்கும் உயர்கல்வி பயில இது நல்வாய்ப்பு. அதே நேரத்தில், அவர்கள் எதிர்கொள்ளும் செலவுகளுடன் ஒப்பிட்டால், இத்தொகை போதாது. இவர்களுக்குச் சிறப்புக் கவனமோ அல்லது தொகை உயர்த்தியோ வழங்கப்பட வேண்டும். விடுதியில் தங்குவோர் என்றால் வாடகைப்படி வழங்கப்பட வேண்டும்.

கூடுதல் நிதி அவசியம்

  • கேரளம் முதல் இரண்டு வருடங்களுக்கு ரூ.31,000, மூன்றாம் வருடத்துக்கு ரூ.35,000 வழங்குகிறது; இதர செலவுகளுக்காக அனைத்துப்புல மாணவர்களுக்கும் வருடம் ரூ.20,000 மற்றும் மாதம் 10% வாடகைப்படியும் வழங்குகிறது. தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் பரப்பளவில் சிறிய, கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு குறைவான மக்கள்தொகை கொண்ட கேரளம் வழங்கும் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகைகளின் எண்ணிக்கை 100. வரும் வருடங்களில் தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி ஒதுக்கி பயனாளிகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.
  • மூன்று வருடங்களில், அதுவும் அரசுக் கல்லூரிகளில் ஆய்வை முடிப்பது கடினம். குறிப்பாக அறிவியல் புலத்தில். எனவே, ‘அரசுக் கல்லூரிகளில் மட்டும் ஆய்வு செய்வதற்கான உதவித்தொகை’ என்னும் வரம்பு தளர்த்தப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் தவிர்த்து, ஒன்றிய அரசுக் கல்வி நிறுவனங்களுக்குள் (சிஎஸ்ஐஆர், ஐஐடி, என்ஐடி, மத்திய அரசுப் பல்கலைக்கழகங்கள் போன்றவை), தமிழகப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய இந்த உதவித்தொகை ஒரு நல்வாய்ப்பு; ஆய்வு வசதிகளும் மிகுதி. வருடத்துக்கு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் வழங்கப்படும் ஒரு நாட்டில் போட்டி அதிகம்; பட்டம் பெற்றது கல்லூரியிலா/பல்கலைக்கழகத்திலா/மத்திய அரசு நிதி நல்கும் கல்வி நிறுவனத்திலா என்பது வேலைவாய்ப்புச் சந்தையில் தர அளவீட்டுக் கருவி என்பது குறிப்பிடத்தக்கது.
  • அரசுக் கல்லூரிகளில்தான் ஆய்வுசெய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லாமல், ‘அரசுக் கல்லூரிகளில் முதுநிலை பயின்ற மாணவர்களுக்கான உதவித்தொகை’ எனத் திருத்தப்படுமானால் மிக மகிழ்ச்சி. அரசுக் கல்லூரிகளில் ஆய்வுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தத் திட்டங்கள் வகுப்பது முக்கியம்.
  • மிக அடிப்படையாக மொழி, கலை, அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட எந்தப் புல ஆய்வுக்கும் உள்நாட்டு/பன்னாட்டு ஆய்விதழ்களை வாசிப்பதற்கான வசதிகள், சார்ந்துள்ள பல்கலைக்கழகங்களால் செய்து தரப்பட வேண்டும். இத்திட்டத்தின்மூலம் அரசுக் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் மாணவர்கள், அக்கல்லூரி சார்ந்துள்ள பல்கலைக்கழகக் கட்டமைப்பு வசதிகளை, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கு நிகரான உரிமையுடன் பயன்படுத்திக்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.

நடைமுறைச் சிக்கல்கள்

  • பொதுவாகவே, கல்வி உதவித்தொகை சரியான காலத்தில் பயனாளிகள் கைகளில் கிடைப்பதில்லை. சிலரின் குடும்பச் செலவுகளே இந்த உதவித்தொகையை நம்பியிருக்கும் என்பதால், 120 பேருக்கும் மாதாமாதம் குறிப்பிட்ட தேதிக்குள் தொகை போய்ச்சேர்வது விதிமுறையாக்கப்பட வேண்டும்.
  • உதவித்தொகை மூன்று வருடங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அறிவியல் புலங்களில் மூன்று வருடங்களில் முனைவர் பட்டம் பெறுவதென்பது இந்திய அளவில் பெருவசதி பெற்ற, மத்திய அரசு ஆய்வு நிறுவனங்களிலேயே சாத்தியமற்ற ஒன்று. 30 வயதை நெருங்கும் ஒருவர், தன் ஆய்வுப் பணியின் பாதியிலேயே கைவிடப்பட்டதாகவே உணர்வார். எனவே, ஐந்து வருட காலம் உதவித்தொகை என்பது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
  • இந்தச் சிறந்த திட்டத்தைத் தொடங்கும்போதே, மேற்சொன்னவற்றைக் குறித்து வல்லுநர்களோடு அரசு ஆலோசித்து மாற்றங்களைச் செய்யுமானால் ஆய்வு மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்