- மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் (யுஎன்எஃப்பிஏ) உலக மக்கள்தொகை அறிக்கை -2023 அண்மையில் வெளியானது. அதில் இந்தியா 142.86 கோடி மக்கள்தொகையுடன் முதலிடத்திலும், சீனா 142.57 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது தெரியவந்துள்ளது.
- கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள்தொகையில் சீனா முதலிடத்தில் இருந்துவந்தது. இந்திய மக்கள்தொகையில் 14 வயது வரை 25 சதவீதம் பேரும், 15 முதல் 64 வயது வரை 68 சதவீதம் பேரும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 சதவீதம் பேரும் இருப்பதும் தெரியவந்துள்ளது.
- மக்கள்தொகை பெருக்கம் நாட்டுக்கு நன்மை பயக்குமா அல்லது கெடுதலாகுமா என்ற பெரும் விவாதத்தை இந்தப் புள்ளிவிவரம் கிளப்பி உள்ளது.
- நமது நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகையையே கொண்ட பாகிஸ்தானும் (சுமார் 23.14 கோடி), தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கையே கொண்ட இலங்கையும் (2.2 கோடி) பொருளாதார ரீதியாக மிகப் பெரும் பிரச்னையை எதிர்கொண்டுள்ளன. கரோனா பெருந்தொற்றின் பாதிப்பு, உக்ரைன் -ரஷியா இடையேயான போர் போன்றவற்றின் காரணமாக, தமிழ்நாட்டின் அளவுக்கு கூட மக்கள்தொகை இல்லாத பல நாடுகள் பொருளாதார ரீதியாக கடும் சவாலை எதிர்கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கின்றன.
- இந்த சூழலில், கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு கொடுத்ததுடன் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு 25 மாதங்களுக்கும் மேலாக 5 கிலோ உணவு தானியத்தை மத்திய அரசு இலவசமாகக் கொடுத்துள்ளது.
- பருவம் தவறிய மழை, கடும் வெப்பம் போன்ற பல்வேறு பாதகமான சூழ்நிலைகளுக்கு இடையிலும், நமது நாட்டில் 2020}21ஆம் பயிர் ஆண்டில் (ஜூலை -ஜூன்) சாதனை அளவாக 109.59 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
- 2021-22இல் வெப்ப அலை போன்றவற்றால் 106.84 மில்லியன் டன்னாக குறைந்தாலும் இந்த ஆண்டு 112 மில்லியன் டன்னுக்கு அதிகமாக கோதுமை உற்பத்தி செய்யப்படும் என எதிர் பார்க்கப் படுகிறது.
- பால் உற்பத்தியிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 183.96 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவைவிட 50 சதவீதமும், சீனாவைவிட 3 மடங்கும் அதிகமாகும். ரூ.2,928 கோடி மதிப்பிலான 1.08 லட்சம் டன் பால் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
- இதுபோன்று பல துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வரும் நிலையில், இந்த மக்கள்தொகை பெருக்கத்தை 142 கோடி வயிறுகளாகப் பார்க்காமல் 284 கோடி கைகளாகப் பார்த்தால் பாதகம் என்று கருதப்படும் அம்சம்கூட சாதகமானதாக மாற்றப்படலாம்.
- இந்தப் பாதையில் மத்திய அரசு ஏற்கெனவே பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாலைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மூலதனச் செலவுகளுக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 20 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- அண்மையில் மேம்படுத்தப்பட்ட சென்னை சர்வதேச விமான நிலையம் போன்று நாடு முழுவதும் விமான நிலையங்களும், துறைமுகங்களும் நவீனமயமாக்கப்படுகின்றன. சர்வதேசத் தரத்தில் நெடுந்தொலைவு சாலைகள் அமைக்கப்படுகின்றன. இணையம் மூலம் பெரும்பாலான சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள்கூட இணையப் பரிவர்த்தனை மேற்கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு ஊக்கம் அளித்ததன் காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் உருவாகி உள்ளன. இவையெல்லாம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
- இதுபோன்ற பல பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் செல்ல வேண்டிய தொலைவு அதிகம் உள்ளது. எந்த ஒரு வளர்ச்சிப் பணிக்கும் புள்ளிவிவரங்களே அடிப்படையாகும். 2021}இல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் இந்தப் பணி நடைபெறுமா என்பதில் தெளிவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெற்றால்தான் திட்டமிடுதல் சாத்தியம் என்பதால் இது அதிவிரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
- வளர்ந்த தேசமாக இந்தியா மாற வேண்டுமெனில், சமூக -பொருளாதார, சுகாதார, அரசியல் சூழ்நிலைகள் அதற்கு சாதகமானதாக இருக்க வேண்டும்.
- நாடு முழுவதும், கடுமையாக உழைக்கக்கூடிய பருவமான 15 முதல் 24 வயது வரை 25.4 கோடி பேர் உள்ளனர். இவர்கள் திறன் மேம்படுத்தப்பட்டால் உலகின் தொழில்கூடமாக இந்தியா மாற முடியும். தரமான கல்வி, இளைஞர்களின் திறன் மேம்பாடு, எளியோருக்கும் எட்டும் வகையில் சுகாதார கட்டமைப்புகள், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் திட்டமிட்டு செயல்பட வேண்டிய தருணம் இது. இதில் ஏதேனும் ஒரு விஷயத்தில் கோட்டை விட்டாலும் இந்த மக்கள்தொகை பெருக்கம் என்பது பெரும் தலைவலியாக மாறிவிடக்கூடும்.
- எண்ணிக்கை முக்கியம் என்றாலும் திறன் வளம்தான் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகும். சீனாவின் 140 பேரில் 9 கோடி பேர் திறன்மிக்கவர்களாக உள்ளனர். அவர்கள் சராசரியாக 10.5 ஆண்டு கல்வி பெற்றுள்ளனர் என்று மக்கள்தொகையில் முதலிடம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
நன்றி: தினமணி (24 – 04 – 2023)