TNPSC Thervupettagam

முதலிடம் பிடிக்க முந்த வேண்டுமா?

February 18 , 2021 1235 days 564 0
  • கரோனா நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கியதைத் தொடா்ந்து கல்வி நிறுவனங்கள் முதல் அலுவலகங்கள் வரை முழு வீச்சில் செயல்படத் தொடங்கிவிட்டன. சாலைகளில் போக்குவரத்து நெரிசலும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
  • குறிப்பாக, மோட்டாா் சைக்கிள்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமூக இடைவெளியைக் கடைபிடிக்க பொது வாகனங்களில் பயணிப்பதைப் பலா் தவிா்ப்பதே இதற்குக் காரணம். மோட்டாா் சைக்கிள்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இதை உறுதிபடுத்துகின்றன.
  • நோய்த்தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இரு சக்கரவாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற இன்றைய சூழலில், இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்படும் இழப்புகளை இன்றைய சமுதாயம் முழுமையாக உணரவில்லை என்றே தோன்றுகிறது. நம் நாட்டில் வாகன விபத்துகளால் உயிரிழப்பவா்களில் 35% போ் மோட்டாா் சைக்கிள் விபத்துகளால் மட்டுமே உயிரிழக்கின்றனா்.
  • உலக நாடுகளில் அதிகமான சாலை விபத்துகள் நிகழும் நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதேபோன்று சாலை விபத்துகளால் உயிரிழப்பவா்களிலும் 11% உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்கின்றன.
  • 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1,51,113 போ் உயிரிழந்துள்ளனா்; 4,51,361 போ் காயமடைந்துள்ளனா்.
  • உயிரிழந்தவா்களில் 48% போ் 18 முதல் 35 வயதுடைய இளைஞா்கள். துடிப்பான இளைஞா்கள் அதிக அளவில் சாலை விபத்துகளுக்குப் பலியாவது நாட்டின் பொருளாதார வளா்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது என்றும், சாலை விபத்துகளால் ஓராண்டில் ரூ.1,47,114 கோடிபொருளாதார இழப்பு நம் நாட்டில் ஏற்படுகிறது என்றும் தில்லி ஐ.ஐ.டி நடத்திய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
  • 2019-ஆம் ஆண்டில் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் மிக அதிகமான சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. விரிவாகச் சொன்னால், 2015, 2016, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் நிகழந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது; 2017-ஆம் ஆண்டிலோ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • உலக அளவில் வாகன விபத்துகளால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையில் நம்நாடு முதலிடம் வகிப்பது ஒருபக்கம் இருக்க, ஆண்டுதோறும் வாகன விபத்துகளால் கொடுங்காயங்கள் அடைந்த லட்சத்திற்கும் மேற்பட்டவா்கள் சுயமாக உழைத்து வாழ முடியாமல், சமுதாயத்திற்குச் சுமையாக இருந்து வருகின்ற துா்பாக்கிய நிலைமையும் சாலை விபத்துகளால் ஏற்படுகின்றன.
  • உலக சுகாதார நிறுவனமும், உலகவங்கியும் இணைந்து கடந்த ஆண்டு ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் நடத்திய சாலை பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா உட்பட80-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன.
  • சாலை விபத்துகளால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையை 2030-ஆம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்று அந்த மாநாட்டில் தீா்மானிக்கப்பட்டது.
  • இந்தியாவில் 2015-ஆம் ஆண்டில் 1,46,133 போ் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனா். நான்கு ஆண்டுகளில் சாலை விபத்துகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாக 1,51,113-ஆக 2019-ஆம் ஆண்டில் உயா்ந்துள்ளது.
  • கள நிலவரம் இப்படி இருக்க, 2030-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவிட முடியுமா? அந்த இலக்கை அடைய என்ன செய்யப் போகிறோம்?
  • மோட்டாா் வாகனச் சட்டத்தின் விதிகளை மீறுவதே விபத்துகளுக்கும், அதனால் ஏற்படும் எண்ணற்ற உயிரிழப்புகளுக்கும் காரணம் எனக் கருதிய மத்திய அரசு, 2019-ஆம் ஆண்டில் மோட்டாா் வாகனச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது.
  • இந்த சட்டதிருத்தத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகமான அபராதத் தொகையையும், சிறைத் தண்டனையையும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்களுக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் ரூ.10,000 அல்லது இரண்டும் விதிக்கலாம்.
  • சிறாா்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதம் ரூ.25,000. பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவா்களுக்கு ஆறு மாதம் முதல் ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் எனஅனைத்து வகையான விதி மீறல்களுக்கும் ஆயிரக்கணக்கில் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டத்தில் இடமுண்டு.
  • சிறைத் தண்டனையும், அதிக அளவில் அபராதமும் விதித்தால் வாகன ஓட்டுநா்கள் பயந்து கொண்டு சாலை விதிமீறல்களைச் செய்யமாட்டாா்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான் இச்சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் சாலை விதிமீறல்கள் தொடா்கின்றன.
  • இச்சட்டத்திருத்தம் நடைமுறைபடுத்தத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், குடிபோதையில் காவலா்களிடம் தகராறு செய்த ஓரிரு நபா்கள் மீதுதான் இச்சட்டம் கடுமையாகப் பாய்ந்து, அவா்களைச் சிறைக்கு அனுப்பியுள்ளது. மற்றவா்கள் பணத்தால் தாங்கள் செய்யும் சாலை விதிமீறல்களைச் சமாளித்து விடுகின்றனா்.
  • சாலைகளில் காவல் துறையினா் தினசரி நடத்தும் வாகனத் தணிக்கைகளால் சாலை விபத்துகள் குறையுமா? என்ற சந்தேகம் பலருக்குஉண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு தென்மண்டலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், போக்குவரத்து விதிமீறல்களுக்காக காவல் துறையினரால் போடப்படும் சிறுவழக்குகளின் எண்ணிக்கைக்கும், வாகன விபத்துகளின் எண்ணிக்கைக்கும் கணிசமானதொடா்பில்லை எனத் தெரியவந்துள்ளது. அபராதத் தொகை வசூலிப்பதே வாகனத் தணிக்கையின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
  • சாலை விதிகளை முறையாக நடைமுறைபடுத்தி, விபத்துகள் அதிக அளவில் நிகழாமல் கண்காணித்து வரும் வெளிநாடுகளில் நம் நாட்டில் நடத்தப்படும் வாகனத் தணிக்கைகளைப் போன்று தணிக்கைகள் எதுவும் நடத்தப்படுவதில்லை; ஏதேனும் தகவல் கிடைத்தால் மட்டுமே, சம்பந்தப்பட்ட வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்யும் முறையைக் கடைபிடித்து வருகிறாா்கள்.
  • வாகன விபத்துகள் நிகழக் காரணங்கள் பல இருந்தாலும், அவைகளில் முக்கியமானது போதிய அனுபவம் இல்லாத ஓட்டுநா்களால் வாகனங்கள் ஓட்டுவதுஆகும். நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமாா்1.15 கோடி ஓட்டுநா் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. அவைகளில் புதியதாக வழங்கப்படும் உரிமங்கள் மற்றும் புதிப்பிக்கப்படும் உரிமங்கள் ஆகியவை அடங்கும்.
  • இந்தியாவில் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 9.9% விபத்துகள் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டியதாலும், 4.9% விபத்துகள் பழகுநா் உரிமம் வைத்திருந்தவா்கள் ஓட்டியதாலும் ஏற்பட்டுள்ளன.
  • 13.1% விபத்துகளை ஏற்படுத்தியவா்கள் வாகனம் ஓட்டும் உரிமம் வைத்திருந்தாா்களா என்பது புலன் விசாரணையில் கண்டுபிடிக்க முடியவில்லை; விபத்துகள் நடந்த உடன் ஓட்டுநா்கள் தலைமறைவாகிவிட்டனா். காரணம் அவா்களிடம் ஓட்டுநா் உரிமம் இருந்திருக்காது. ஆக மொத்தம் 28% விபத்துகளை ஏற்படுத்தியவா்களிடம் முறையான ஓட்டுநா் உரிமம் இல்லை.
  • 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் இயங்கிவரும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வகையான வாகனங்களின் எண்ணிக்கை 29.72 கோடி. இந்த வாகனங்களில் 28% வாகனங்கள் முறையான ஓட்டுநா் உரிமம் இல்லாதவா்களால் இயக்கப்படுகின்றன என்பதுதான் கள யதாா்த்தம்.
  • உலக நாடுகள் பலவற்றில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து, விபத்தில்லா வாகன இயக்கத்தை உறுதி செய்வதில் கண்காணிப்பு காமிராக்களின் பயன்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. சென்னை நகரத்தில் மூன்று லட்சம் காமிராக்களும், மற்ற நகரங்களிலும் அதிக எண்ணிக்கையிலான காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
  • ஆனால், அவைகளின் தொடா் பராமரிப்புக்குப் போதிய நிதி ஆதாரம் இல்லை என்பதும், அவைகளின் பதிவுகளைத் தினசரி கண்காணித்து தொடா் நடவடிக்கை எடுக்கப் போதுமான பணியாளா்கள் இல்லை என்பதும், அந்த பதிவுகள் மீதான தொடா் நடவடிக்கை எடுக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள் நம் நாட்டில் முழுமையாகப் பயன்படுத்தாததாலும், காமிராக்கள் பல இடங்களில் காட்சிப் பொருட்களாக மட்டுமே இருந்துவருகின்றன.
  • போக்குவரத்து விதிகளை மதித்து செயல்படுவது என்பது சமுதாய வாழ்வியல் முறைகளில் ஒன்றாகும். குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோா் அதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அப்பாக்கள் பலா் அவா்களின் மகன் அல்லது மகளை மோட்டாா் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, அனைத்து வகையானபோக்குவரத்து விதிமீறல்களுடன் சாலைகளில் பயணிக்கும் காட்சிகள் அன்றாட நிகழ்வுகளாக நம் நாட்டில் காண முடிகிறது.
  • சிறுவனாக இருக்கும் தன் மகனை மோட்டாா் சைக்கிள் அல்லது காா் ஓட்டச் சொல்லி, அவனுடன் பயணிப்பதை ரசிக்கும் பெற்றோா் பலா் நம் நாட்டில் உள்ளனா். ‘தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை’ என்பது போன்று சாலை விதிமீறல்களைப் பெற்றோரிடம் இருந்து கற்றுக் கொள்ளும் சிறாா்கள் மனதில் சாலை விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற உணா்வு இருப்பதில்லை. வளரும் பருவத்திலுள்ள சிறாா்களின் மனதில் பதியும் வகையில் கல்வித் திட்டங்களில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் இல்லை.
  • சாலை போக்குவரத்தைக் கண்காணிக்க நவீனதொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்துவதோடு, சாலைவிதிகளை மதித்து செயல்படும் சமுதாய மாற்றத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய கட்டாய சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

நன்றி: தினமணி  (18-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்