TNPSC Thervupettagam

முதலீட்டாளர்களின் ஈர்ப்பில் மாற்றம்

June 20 , 2024 205 days 152 0
  • கடந்த 2007-2008-ஆம் ஆண்டில் அமெரிக்க கடன் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, அந்த நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்தது மட்டுமல்லாமல், உலக அளவில் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் கடும் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ள வழிவகுத்தது. இருப்பினும், இந்திய மக்களின் சேமிப்புப் பழக்கம் கைகொடுத்ததால், பொருளாதார நெருக்கடியை அரசு வெகுவாக சமாளிக்க முடிந்தது.
  • இதைத் தொடர்ந்து 2020-இல் ஏற்பட்ட கரோனா பாதிப்பு காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சியில் இதன் தாக்கத்தை நாம் அறிவோம்.
  • தற்போது ரஷியா - உக்ரைன் போர் நிலைமையும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. போர் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும் வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் எச்சரித்து வருவதைக் காணலாம்.
  • இந்த நிலையில், முதலீடு என்று பார்க்கும்போது மக்களில் பலர் பங்குச்சந்தை, பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்), கடன் பத்திரங்கள், அரசின் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள்.
  • கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் என்று கூறப்படும் பரஸ்பர நிதித் திட்டங்களில் மக்களின் முதலீடுகள் தொடர்ந்துஅதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டின் ஒட்டுமொத்த ஆண்டு சொத்து மதிப்பு அதிர்ச்சியூட்டும் வகையில் 6 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. டிசம்பர் 2014 முதல் 2024-ஆம் ஆண்டில் இதுவரையிலும் ஒட்டுமொத்த ஆண்டு சொத்து மதிப்பு (ஏயுஎம்) ரூ.54.54 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மைல்கல் மியூச்சுவல் ஃபண்ட் நிதித் திட்டங்களின் மீது இந்திய முதலீட்டாளர்கள் கொண்டுள்ள மோகத்தைப் பறைசாற்றுகிறது.
  • கடந்த 2023 செப்டம்பர் மாதம் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.16,043 கோடியாக இருந்த முதலீடு, 2024 மே மாதம் ரூ.20,904 கோடியாக உயர்ந்துள்ளது. 2011-இல் ஆறாவது இடத்தில் இருந்த எஸ்பிஐ எம்எஃப், 2022-இல் இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமாக மாறியுள்ளது. இதேபோன்று எச்டிஎஃப்சி எம்எஃப் மற்றும் ஐசிஐசிஐ எம்எஃப் ஆகியவற்றின் சொத்து மதிப்புகளும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன.
  • மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த அதீத மனமாற்றத்துக்குக் காரணம் இல்லாமல் இல்லை. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அனில் அம்பானியின் சில நிறுவனங்கள், எஸ்ஸôர் ஸ்டீல், விடியோகான், டிஹெச்எஃப்எல், அலோக் இண்டஸ்ட்ரீஸ், பூஷண் ஸ்டீல் உள்பட பல நிறுவனங்கள் திவாலாகியுள்ளன. அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டதை அறிவோம்.
  • அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களும் பங்குதாரர்கள் மற்றும் வரி செலுத்துவோரின் செல்வத்தை எவ்வாறு அழித்துள்ளன என்பதையும் நாம் அறிவோம். பொதுத் துறையின் திறமையின்மையைக் குற்றஞ்சாட்டும் அதேவேளையில், தனியார், குறிப்பாக குழும நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மையையும் நாம் கண்டிப்பாக முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
  • இதனால், பொதுமக்களில் பலர் கடந்த சில ஆண்டுகளாக இடர்ப்பாடு மிகக் குறைவாக உள்ள முதலீட்டுத் திட்டங்களைத் தேடத் தொடங்கிவிட்டதை நன்றாக அறியமுடிகிறது.
  • அந்த வகையில், முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் (எம்.எஃப்) திட்டங்களில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர்.
  • இந்த ஆண்டு நிலவரப்படி, இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகத்தின் கீழ் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.9 லட்சம் கோடியாக இருந்த அவற்றின் சொத்து மதிப்பு, தற்போது ரூ.54.54 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு அதாவது 2017-இல் ரூ.18 லட்சம் கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது மும்மடங்கு உயர்ந்துள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளில் சென்செக்ஸ் சராசரியாக 15% லாபம் ஈட்டியுள்ளது. அதாவது சென்செக்ஸ் 26,000 புள்ளிகளில் இருந்து, 77,000-க்கு உயர்ந்தது. ஆனால், எத்தனை முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டி இருப்பார்கள்...! அதேசமயம், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம் இப்போது பெரிய இடர்ப்பாடு ஏதும் இல்லாமல் 3 முதல் 4 மடங்கு உயர்ந்துள்ளது.
  • பங்குச்சந்தையில் பட்டியலாகிய பல நிறுவனப் பங்குகளின் விலை 90 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்துள்ளது. இந்தப் பங்குகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தவர்களின் நிலை கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
  • குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பங்குச் சந்தையில் பட்டியலாகிய பேடிஎம் நிறுவனப் பங்கின் நிலை இப்போது என்ன என்பதை முதலீட்டாளர்கள் நன்கு அறிவார்கள். இதன் காரணமாகத்தான் மக்களிடம் அண்மைக்காலமாக மனம் மாற்றம் ஏற்பட்டு, இடர்ப்பாடு குறைந்த முதலீட்டை அவர்கள் தேடிச் செல்வதைக் காண முடிகிறது.
  • முதலீட்டாளர்களில் பலர் "எஸ்ஐபி' என்று சொல்லப்படும் முறையான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முதலீட்டாளர்கள் ஈக்விட்டி "எஸ்ஐபி'-க்களுக்கு மாறி வருவது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் கண்ட 20 ஆண்டுகால ஏற்ற-தாழ்வுகளின் ஒட்டுமொத்த தாக்கம்தான் இதற்கு காரணமாகும்.
  • நல்ல செய்தி என்னவென்றால், இறுதியாக, இந்திய முதலீட்டாளர்கள் நீண்டகாலச் செல்வத்தை உருவாக்கும் திட்டங்களை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளதே இந்த மனமாற்றத்துக்கு முக்கியக் காரணமாகத் தெரிகிறது.

நன்றி: தினமணி (20 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்