TNPSC Thervupettagam

முதல் பகுதி: நோர்டிக் கல்வியும் சமூகமும்

October 16 , 2022 663 days 455 0
  • உலகில் மக்கள்நல அரசுகளுக்கான முன்னுதாரணமாகப் பார்க்கப்படுபவை நோர்டிக் நாடுகள். நார்டிக் என்றால் வடக்கு. ஐரோப்பாவின், அட்லாண்டிக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளை ‘நார்டிக் நாடுகள்’ என்று குறிப்பிடுகிறார்கள். டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளையும் மேலும் சில தன்னாட்சி பிரதேசங்களையும் உள்ளடக்கிய பிராந்தியம் இது.
  • இந்த நாடுகள் சமூகச் சூழலில் ஒரு பொதுவான பண்பாட்டை உருவாக்கியிருக்கின்றன. பொது கல்வி, பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை; உயரிய தனிநபர் சுதந்திரம், மதிப்புக்குரிய சமூக நல்லிணக்கம் என்று மேம்பட்ட ஜனநாயகத்துக்கான முன்னுதாரணமாக உலக நாடுகளால் பார்க்கப்படும் நாடுகள் இவை.
  • இங்குள்ள கல்விச் சூழல் மிகப் பிரமாதமானது. பல நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்களுடைய சமூகத்தில் உண்டாக்க வேண்டிய மாற்றங்களுக்காக இங்குள்ள கல்வி நிலையங்களைப் பார்வையிட்டுச் செல்வார்கள்
  • பின்லாந்து நாடு, உலகின் தலைசிறந்த பள்ளிக்கல்வியை வழங்குகிறது என்பது தமிழ்நாட்டிலேயே நாம் அடிக்கடிக் கேட்டுப் பழகிய செய்திதான். ஆனால்எப்படி பின்லாந்து நாட்டினரால் உலகின் தலைசிறந்த கல்வியை வழங்க முடிகிறது? பின்லாந்து போலவே ஸ்வீடன், டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து நாடுகளின் பள்ளிக்கல்வித் துறைச் செயற்பாடுகள் பல நாடுகளுக்கும் முன்மாதிரியாக திகழக் காரணங்கள் என்ன? இதுபற்றி நாம் ஆழமாக விவாதித்தது இல்லை அல்லவா? இனி விவாதிப்போம்!
  • இந்த நாடுகள் அருகருகே இருப்பதால் மட்டுமல்ல, இவர்களுக்குள் ஒரு வரலாற்றுப் பிணைப்பும் உள்ளது. மொழிகளாலும், சமூக அமைப்புகளின் உருவாக்கத்தினாலும் மேலும் பல வரலாற்றுக் காரணங்களாலும் ஒன்றானவர்கள் இவர்கள்.
  • இன்றைய நார்வேயின் நிலப்பரப்பானது, டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் 400 வருடங்களுக்கு மேலாகவும், ஸ்வீடனின் கட்டுப்பாட்டில் 100 ஆண்டுகளாகவும் இருந்தது. அதேபோல, பின்லாந்து 600 ஆண்டுகளுக்கும் மேலாக  சுவீடனின் கட்டுப்பாட்டிலும், 100 ஆண்டுகள் ரஷ்ய நாட்டின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. ஆயினும்கூட நார்வே, பின்லாந்து இரண்டும் தனித்த ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்பிருந்தே கல்வி, தாய்மொழி, சமூகக் கட்டமைப்பு, அரசியல் அதிகாரக் கட்டமைப்பு என முக்கியமான சில விஷயங்களில் தத்தமது தனித்தன்மையினை நிலைநாட்டுவதில் ‘விடாப்பிடியான’ உறுதியுடன் இருந்தனர். 

நோர்டிக் நாடுகள்

  • ஸ்வீடன், நார்வே, டென்மார்க் மூன்றும் இணைந்தப் பகுதிகளை ஸ்காண்டினேவியன் நிலம் என வகைப்படுத்துகின்றனர். இந்தோ-ஐரோப்பியக் கூட்டில் இருந்துவந்த ஜெர்மானிய மொழிப்பிரிவின் கிளை மொழி ஸ்காண்டினேவியன் மொழிகள் (ஸ்வீடிஷ், டேனீஷ், நோர்வேஜியன்). 1950களுக்குப் பின்னர், ஸ்காண்டினேவியன் கூட்டில், ஐஸ்லாந்தும் பின்லாந்தும் இணைந்தப் பின், நோர்டிக் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றனர். நோர்டிக் நாடுகள் மொழிகளிலும் வரலாற்றிலும் பிணைந்திருப்பது போல, கல்வித் துறை வளர்ச்சியிலும் பல காரணங்களால் ஒருங்கிணைந்தவர்களே!
  • மனித உரிமை கோட்பாடுகளைச் சமூக மேம்பாட்டுப் பின்னணியில் மட்டுமல்லாது, கல்வியுரிமை, தாய்மொழிக் கல்வி, சமத்துவக் கல்வி ஆகியவைகளை மனித உரிமையின் அடிப்படையான கொள்கைகளாக வகுத்துவைத்திருக்கின்றன இந்த நோர்டிக் நாடுகள்.

உலகின் முன்னணிப் பட்டியலில் நோர்டிக் நாடுகள்

  • உலகின் தலைசிறந்த கல்வியைக் கொடுக்கும் நாடுகளின் முதன்மை பட்டியலில் மட்டுமல்ல, உலகின் மகிழ்வான நாடுகளில் இந்த நாடுகள் இருக்கும். உலகின் தலைசிறந்த பெண்ணிய மேம்பாடுகள், ஆண்-பெண் சமத்துவம் ஆகியவற்றில் முதன்மைப் பட்டியலில் இந்த நாடுகளில் இருக்கும். உலகின் அதிக நாத்திகர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்த நாடுகள் இருக்கும். உலகின் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் இந்த நாடுகள் முதன்மையில் இருக்கும். உலகின் சமூக நலத் திட்டங்களுக்கான மேற்கோள்கள் இந்த நோர்டிக் நாடுகளிடம் இருந்தே பெறப்படுகின்றன.
  • 2022ஆம் ஆண்டில் உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதல் இடம். டென்மார்க் இரண்டாம் இடம், ஐஸ்லாந்து மூன்றாம் இடம், ஸ்வீடன் ஏழாம் இடம், நோர்வே எட்டாம் இடம் என முதல் 3 இடங்களுமே நோர்டிக் நாடுகள், முதல் 10 இடங்களில் அனைத்து (5 நாடுகள்) நோர்டிக் நாடுகளும் இடம்பெற்றுள்ளன. 
  • இவ்வருடம் மட்டுமல்ல, கரோனா பேரிடர் காலத்திலும் அதற்கு முன்பும் என இத்தகைய பெருமைமிகு இடங்களைத் தொடர்ந்து இந்த நாடுகள் தக்கவைத்து வருகின்றன.

நோர்டிக் சமூக உருவாக்கமும் கல்வித் துறையும் 

  • இந்த நாடுகள்தான் கல்வித் துறையை மனித உரிமை அடிப்படையில் வரிசைப்படுத்திய முதன்மையான நாடுகள். தாய்மொழிக் கற்றலை தங்கள் நாட்டில் வாழும் எல்லா நாட்டினருக்கும் எல்லா இனத்தினருக்கும் மனித உரிமை அடிப்படையிலான ‘மொழியியல் மனித உரிமை’ (Linguistic Human Rights) என வகைப்படுத்திய நாடுகளில் நோர்டிக் கூட்டும் முதன்மையானது.
  • அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சமத்துவக் கல்வி, அனைவருக்கும் சம வாய்ப்புள்ள கல்வி, கற்றல் திட்டங்களும் கல்வி கற்றல் தொழில்நுட்பங்களும், பள்ளியில் அனைவருக்கும் சமமான உணவு. அதாவது, சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்குதல், நலத் திட்டங்கள், சம உரிமை என்ற கோட்பாட்டினைக் கல்வியில் இணைத்த நாடுகளின் முதன்மைப் பட்டியலில் நோர்டிக் நாடுகளும் இடம்பெற்றிருக்கும். வெற்றிகரமான கல்வித் துறை செயற்பாடுகளுக்கு ஆசிரியர்களே முக்கியப் பங்காற்றுபவர்கள், அவர்களை பன்னாட்டுக் கல்விக் கோட்பாடுகள் ‘ஏஜெண்ட்ஸ் ஆஃப் சேஞ்ச்’ (Agents of Change) என்று குறிப்பிடும். 
  • அனைவரையும் உள்ளடக்குதலும் சமூக நீதியும் (Inclusions and Social Justice) வகுப்பறைகள் குறித்தானப் புரிதல்களை ஆசிரியர் பயிற்சிக் கல்வியில் சேர்க்கும் பொழுதே அத்தகைய முகவர்கள் (Agents) வெற்றிகரமான வகுப்பறைகளை உருவாக்குவர் என்பது நோர்டிக் நாடுகளின் கோட்பாடுகளில் ஒன்று. நோர்டிக் நாடுகளின் கல்வித் துறை வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றும் இரண்டு காரணிகள் 1) தொடக்கக் கல்வியும் 2) ஆசிரியர் பயிற்சிக் கல்வியும்.

அரசியலும் பாலின சமத்துவக் கல்வியும்

  • நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அடுத்த செய்தி, அரசியல். ஆம், கல்வியும் சமூக அரசியல் பாடங்களும் பிரிக்க முடியாதவை. பின்லாந்து பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பாக, மாணவர்களுக்காக அரசியல் வகுப்புகள், விலைவாசி முதல் சுகாதாரக் கட்டமைப்பு வரையிலான விவாதங்கள், அதனைத் தொடர்ந்து மாணவத் தேர்தல், வாக்குப் பிரச்சாரங்கள் என செயல்படுத்தப்படுகிறது. 
  • 1944இல் இரண்டாம் உலகப் போர்கால கூட்டத்தில் அமைந்த பின்லாந்து கூட்டணிக் கட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்தில் விவாதித்து, அரசியல் கல்வி, கல்வித் துறை வடிவமைப்பில் அரசியல் குழுவினரின் வழிகாட்டல் என கல்வி – சமூகம் - அரசியல் என இணைக்கத் தொடங்கினர். அதன் தாக்கம், சமூக மேம்பாட்டிலும் ஜனநாயகம், பாலின சமத்துவம் கலந்த அரசியல் பிரதிபலிப்பிலும் இன்றும் காணலாம்.
  • முறையாக அரசியல், சமூகவியல் கோட்பாடுகள் உள்ளிட்டவைகளைக் கற்கும் குழந்தைகளே ஆரோக்கியமான ஜனநாயகச் சமூகத்தை உருவாக்கும் என பின்லாந்து கல்வித் துறை பிரகடனப்படுத்தி, தனியாகச் செயல்திட்டங்களை வகுத்துள்ளது. இதில், ஆண் - பெண் சம விகிதத் தலைவர்கள் கொண்டக் குழுக்களை நோக்கியே பல செயற்பாடுகளை வடிவமைத்து வருகிறார்கள். அதன் கூர்மை பல ஆண்டுகள் வரலாற்றிலும் தொட்டுத் தொடர்ந்து வந்துள்ளது. யாவற்றிற்கும் அடிப்படை கல்வித் துறையால் பிணைக்கப்பட்டவையே!
  • 2019 டிசம்பர் மாதத்தில் அமைந்த பின்லாந்தின் 76வது அமைச்சரவையில், இளைய வயது (34 வயது) பின்லாந்து பெண் சன்னா மரினா அந்நாட்டின் பிரதமரான செய்தியைப் படித்திருப்போம். இவரின் அரசின் அமைச்சரவை பெரும்பாலும் இளம் பெண்களால் நிரம்பியவை, கூட்டணி அரசாங்கத்தின் 5 கட்சிகளும் பெண்களின் தலைமையில் நிற்பவை.
  • உலகின் முதல் பெண்ணிய அரசாங்கம் அமைத்த நாடு ஸ்வீடன். அதாவது, தேசிய, சர்வதேசக் கொள்கை வகுப்பு, செயல்முறை, அரசாங்க நடைமுறை, அமைச்சரவை என அனைத்திலும் ஆண் - பெண் சமத்துவத்தை நிலைநிறுத்துவதில் உறுதி பூண்டுள்ளது. 2019இல் நடந்த தேர்தலில் 349 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 161 பெண் உறுப்பினர்கள் பெற்று ஐரோப்பியாவில் அதிக எண்ணிக்கைக் கொண்ட நாடு என்ற பெருமையும் சேர்த்துப் பெற்றிருக்கிறது. 
  • 1994இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, நார்வே நாட்டில் நிலைப்பெற்றிருக்கும் ஆண்-பெண் சமத்துவச் சட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதால் கெட்டுவிடுமோ? என நோர்வே நாட்டு ஆண்களும் பெண்களும் விவாதித்ததாக, ‘யூரோப்பியனைசேஸன் ஆஃப் நோர்டிக் பாலிசிஸ்’ (Europeisering av nordisk likestillingspolitikk - Europeanisation of Nordic gender equality policies) என்னும் புத்தகத்தை எழுதிய காதெரின் ஓல்ஸ்ட் குறிப்பிட்டுள்ளார். இவர் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர்.
  • 1906இல் ஐரோப்பியாவில் முதன்முதலாக அனைத்துப் பகுதிகளிலும் ஆண்-பெண் இருபாலருக்குமான ஓட்டுரிமை மற்றும் தேர்தலில் நிற்கும் சம உரிமையினை பின்லாந்து உருவாக்கியது. அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று உலகின் முதலிடத்தை இதிலும் பெற்றுக்கொண்டது. 1926லேயே முதல் பெண் அமைச்சராக மீனா சீலன்ஃபா (Miina Sillanpää) உருவானார். 
  • 2000ஆம் ஆண்டில் டார்ஜா ஹாலேன் முதல் பெண் ஜனாதிபதியாகவும் 2003இல் அன்னெலி யாட்டின்மகி (Anneli Jäätteenmäki) முதல் பெண் பிரதமராகவும் ஆனார். 2007இல் மாட்டி வான்ஹனன் (Matti Vanhanen) அமைக்கப்பட்ட அமைச்சரவையில் 12 பெண்களும் 8 ஆண்களும் அங்கம் வகித்து, ஆண்களைவிட பெண்கள் அதிகம் இடம்பெறும் அமைச்சரவை அமைத்த நாட்டின் பெருமையினையும் பின்லாந்து தட்டிச்சென்றது.

நன்றி: அருஞ்சொல் (16 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்