TNPSC Thervupettagam

முதல்வரின் யோசனைக்கு...

December 16 , 2020 1321 days 573 0
  • மக்கள் சேவையே மகேசன் சேவை என்று நாட்டுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்களின் படங்களை, நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் நிறுவுவது என்பது நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் நல்லதொரு வழக்கம்.
  • நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் 24 தலைவர்களின் படங்களும், மாநிலங்களவையில் 11 படங்களும், மக்களவையில் 8 படங்களும், நாடாளுமன்ற நிலைக்குழு அறைகளில் 11 படங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.
  • அண்ணல் காந்தியடிகளில் தொடங்கி, சுதந்திர இந்தியாவைக் கட்டமைத்த, அதன் வளர்ச்சியில் பங்கு பெற்ற பெரும்பாலான தலைவர்கள் நாடாளுமன்றத்தில் படங்களை வைத்து கெளரவப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
  • அதே வழிமுறைகளைப் பின்பற்றி, தமிழக சட்டப்பேரவையிலும், முக்கியமான தேசிய, மாநிலத் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டு அவர்கள் புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருக்கும் சட்டப்பேரவை வளாகத்தில் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பைத் தொடர்ந்து இப்போது "செக்கிழுத்த செம்மல்' வ.உ. சிதம்பரனார், சுதந்திர இந்தியாவில் சென்னை ராஜதானியின் முதலாவது முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்த பி. சுப்பராயன் ஆகிய மூவரின் உருவப் படங்களையும் ஏற்கெனவே இருக்கும் 12 படங்களுடன் சேர்த்து வைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • 1948 ஜூலை மாதம் 24-ஆம் தேதி "தேசப்பிதா' மகாத்மா காந்தியின் படத்தை அன்று கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி திறந்து வைத்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியின் படத்தை பாரதப் பிரதமராக இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு திறந்து வைத்தார்.
  • 1964-இல் திருவள்ளுவர் படத்தை அன்றைய குடியரசு துணைத் தலைவர் டாக்டர் ஜாகீர் ஹுசைனும், 1969-இல் சி.என். அண்ணாதுரையின் மறைவைத் தொடர்ந்து அவரது படத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்தியும் சட்டப்பேரவை மண்டபத்தில் திறந்து வைத்தனர்.
  • காமராஜர் (1977), பெரியார் ஈ.வெ.ரா, பாபா சாஹேப் அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், "காயிதே மில்லத்' முகம்மது இஸ்மாயில் (1980) ஆகியோரின் படங்கள் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டன.
  • எம்ஜிஆரின் உருவப் படத்தை 1992-இல் ஜெயலலிதாவும், ஜெயலலிதாவின் உருவப் படத்தை 2018-இல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் திறந்து வைத்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சி படத்தைத் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது வ.உ.சி., ஓமந்தூரார், பி. சுப்பராயன் ஆகியோரின் படங்களைத் திறந்து வைக்க இருக்கிறார்.
  • பண பலம், புஜ பலம், ஜாதி செல்வாக்கு, தலைவர்களின் தயவு போன்ற காரணங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு, அவர்களுக்குக் கிடைத்திருக்கும் கெளரவத்தை உணர்த்த அந்தப் படங்கள் உதவக்கூடும்.
  • உறுப்பினர்களான பிறகாவது, அந்தத் தலைவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு தங்களது அரசியல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அந்தப் படங்கள் காரணமாக இருக்கக் கூடும்.
  • சட்டப்பேரவையில் ஏற்கெனவே வைக்கப்பட்டிருக்கும் படங்களும் சரி, இப்போது வைக்கப்பட இருக்கும் தலைவர்களின் படங்களும் சரி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதே நேரத்தில், என்ன அடிப்படையில் படங்கள் நிறுவப்படுகின்றன என்பதில் தெளிவு இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • சுதந்திர இந்தியாவில், அன்றைய சென்னை ராஜதானியின் முதலாவது முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நேர்மைக்கும், எளிமைக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர். இத்தனை காலமும் அவரது படம் சட்டப்பேரவை மண்டபத்தை அலங்கரிக்காமல் இருந்ததே தவறு. அந்தத் தவறு முதல்வர் பழனிசாமி மூலம் திருத்தப்பட்டிருப்பதற்கு அவரை எத்துணைப் பாராட்டினாலும் தகும்.
  • முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போலவே நேர்மைக்கும், எளிமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்தார் அவரைத் தொடர்ந்து முதல்வரான குமாரசாமி ராஜா. அவரது பதவிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் ஏராளம். குமாரசாமி ராஜா மட்டுமல்ல, முதல்வராக இருந்த எம். பக்தவத்சலம் போன்ற திறமையான நிர்வாகியும் இருந்திருக்க முடியாது.
  • முதல்வராகப் பதவி வகித்தவர்களுக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் படங்கள் நிறுவப்பட்டு அவர்கள் கெளரவிக்கப்பட வேண்டும் என்கிற பொதுவிதியை ஏற்படுத்துவதுதான் சரியாக இருக்குமே தவிர, அவ்வப்போது ஆட்சியில் இருக்கும் கட்சிகளின் விருப்பத்துக்கேற்ப தலைவர்கள் கெளரவிக்கப்படுவது சரியான அணுகுமுறை அல்ல.
  • அந்த வகையில் பார்த்தால், அரசியல் மனமாச்சரியங்களைப் புறந்தள்ளி, முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் படமும் சட்டப்பேரவை மண்டபத்தில் இடம் பெறுவதுதான் சரியாக இருக்கும்.
  • கடைசியாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்னும் ஒரு வேண்டுகோள். வ.உ.சி. படத்தை நிறுவுவதில் பெரு மகிழ்ச்சி. ஆனால், மகாகவி பாரதியும், சுப்பிரமணிய சிவாவும் இல்லாமல் வ.உ. சிதம்பரனாரை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவரேகூட, அதை விரும்பமாட்டார்.

முதல்வர் யோசித்து நல்லதொரு முடிவெடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி (16/12 2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்