- வரும் காலத்தில் நாம் எதிர்நோக்கியிருக்கும் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்றாக முதியோர் பராமரிப்பு இருக்கும். நவீன மருத்துவ முறைகளின் காரணமாக மனிதர்களின் வாழ்நாள் கூடியிருக்கிறது. அதன் விளைவாக, முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
- இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளில் 60 வயதைத் தாண்டிய முதியவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. 2021-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகை 13 கோடி. அடுத்த பத்தாண்டுகளில் இது 20 கோடியைத் தொடும் என்று தேசியப் புள்ளியியல் ஆணையம் கணிக்கிறது. 2050-ல் 15 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளைவிட 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
- உலகத்திலேயே மிக அதிகமான முதியோர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கப்போகிறது. கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் முதியவர்களின் சதவீதம் மிக அதிகமாக இருக்கிறது. முதியவர்களைப் பராமரிக்க இயலாமல் கேரளம் இப்போதே தடுமாறிக்கொண்டிருக்கிறது. அதிகரித்துவரும் முதியவர்களை எதிர்காலத்தில் இந்தியா எப்படிப் பராமரிக்கப்போகிறது என்பதுதான் அச்சமூட்டும் கேள்வி.
- பொதுவாகவே, “இந்தியா என்பது முதியவர்களைக் கொண்டாடும் நாடு. இந்தியக் குடும்பங்கள் முதியவர்களின் மீது மரியாதையையும் மதிப்பையும் கொண்டிருப்பவை” என்று நாம் காலம்காலமாக நம்பிக்கொண்டிருப்பவை எல்லாம் தவறானவை என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.
- முதியவர்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு (International Network for Prevention of Elder Abuse [INPEA]) தனது 2016-ம் ஆண்டு அறிக்கையில், முதியவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மிக அதிகமாக நடக்கும் ஆசிய நாடாக இந்தியா இருக்கிறது என்கிறது.
- இன்றைய பொருளாதாரச் சூழலில் குடும்ப அமைப்பு என்பதே சுருங்கியிருக்கிறது. அதுவும் நகர்ப்புறக் குடும்பங்களின் பொருளாதாரச் சூழல் இன்னும் கடினமானது. அது முதியவர்களுக்கு அத்தனை இலகுவானதாகவும் இருப்பதில்லை.
- ஒரு கட்டாயத்தின் பேரில் முதியவர்களைப் பராமரிக்கும் பொறுப்புக்கு ஒரு குடும்பம் தள்ளப்படும்போது, பராமரிக்க நேரும் குடும்ப உறுப்பினர்கள் அந்த முதியவர்களைத் துன்புறுத்துவதன் வழியாகவே தங்களது மனவுளைச்சலைப் போக்கிக்கொள்கிறார்கள். குடும்ப அமைப்பில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்களும் நெருக்கடிகளுமே முதியவர்களின் மீதான வன்முறைகளுக்கு முக்கியக் காரணம்.
- வன்முறை என்றால், அது வெறும் உடல் மீதான வன்முறை மட்டுமே அல்ல. சிறு அவமதிப்பும் கடும் சொல்லும் நிராகரிப்பும் அலட்சியமும், முதியவர்களுக்கு எதிரான சிறு உடல் அசைவுகளுமேகூட உளவியல்ரீதியாக அவர்களைப் பெரிதும் பாதிக்கின்றன. முதியவர்களை எல்லா வயதினரும் பெரும்பாலான நேரம் நுட்பமாகத் துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த உளவியல் நெருக்கடிகள் முதியவர்களை மிக விரைவாகவே நோய்மையிலும் முதுமையிலும் தள்ளுகின்றன. அவர்கள் அங்கே மரணத்தை ஒரு விடுபடுதலாக எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
- முதியவர்கள் பராமரிப்பு தொடர்பாக நமக்கு நீண்ட காலப் பார்வை அவசியமானது. “முதியவர்களைக் கைவிடும் குடும்பத்தினர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்று உணர்ச்சிவசப்பட்டு அணுகாமல், இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன, முதியவர்களைப் பராமரிப்பதில் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் என்ன என்பதையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்து, செயல்திட்டங்களை வகுக்க வேண்டிய பொறுப்பு சிவில் சமூகமாக நமக்கு இருக்கிறது.
- முதியவர்களைப் பராமரிப்பதில் குடும்பம் தன்னளவில் நிறைய மாற்றிக்கொள்ள வேண்டும், இளைய தலைமுறையினருக்கு முதுமை தொடர்பான புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். முதியவர்களுடன் குழந்தைகள் உரையாடுவதையும் அவர்களுக்கான சேவைகளை வழங்குவதையும் குடும்பம் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், முதியவர்களைக் கூட்டாகப் பராமரிக்கும் சமூகத்தை உருவாக்குவதைப் பற்றியும் அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். அதற்காக அரசு சாரா நிறுவனங்களையும் உள்ளடக்கித் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
- வாழ்நாளை நீட்டிப்பதை மட்டுமல்லாமல், நீடித்திருக்கும் வாழ்நாளில் மனநலத்தையும் மேம்படுத்த வேண்டியது நவீன அறிவியலின் பொறுப்பு. அதனால் ஒரு தரமான, நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை முதியவர்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கான முயற்சிகளை நாம் இப்போதிருந்தே எடுக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (22 – 05 – 2022)