TNPSC Thervupettagam

முதியோருக்கு அடைக்கலம்

July 27 , 2023 536 days 366 0
  • தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் முதியோர் இல்லங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அரவணைப்பற்ற, ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோருக்கு நம்பிக்கையளிக்கும் தருணம் இது.
  • இந்தியச் சமூகத்தில் மரியாதைக்கு உரியவர்களாகக் கருதப்படும் முதியவர்கள், நடைமுறை வாழ்வில் குடும்ப அமைப்பிலும் பொது இடங்களிலும் புறக்கணிப்புகளுக்கும் அவமதிப்புகளுக்கும் குற்றச்செயல்களுக்கும் இலக்காவது தொடர்கிறது. 2021இல் மட்டும், இந்தியாவின் 19 பெருநகரங்களில் முதியோருக்கு எதிராக 4,264 குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. இந்நிலையில், முதியோருக்குப் பாதுகாப்பான, சுகாதார வசதிகளுடன் கூடிய பராமரிப்பு இல்லங்கள் அவசியம்.
  • அதேவேளையில், தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் பலவற்றில் பல்வேறு வகையிலான அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் நடப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில், முறையான அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுவந்த அன்பு ஜோதி இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த முதியோர் உள்ளிட்டோர் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்ட சம்பவம் ஓர் உதாரணம்.
  • இந்தப் பின்னணியில், பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு பயிலும் சட்ட மாணவர் பாஸ்கல் சசி, சாத்தியமுள்ள இடங்களில் முதியோர் இல்லங்களைத் தமிழ்நாடு அரசு தொடங்க உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லத்தையாவது அரசு அமைக்க வேண்டும் என்றும், ஏழ்மை நிலையில் இருக்கும் 150 முதியோருக்குக் குறைந்தபட்சம் ஓர் இல்லம் எனும் அளவில் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தன் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
  • 2007இல் நிறைவேற்றப்பட்ட மூத்த குடிமக்களின் பராமரிப்பு - நலச் சட்டத்தின் பிரிவு 19(1), மாநில அரசுகள் போதுமான எண்ணிக்கையில் முதியோர் இல்லங்களைத் தொடங்கி நடத்த வேண்டும் என்கிறது. ஆனால், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் அது முறையாகச் செயல் படுத்தப் படவில்லை. கடந்த ஆண்டு உத்தராகண்டிலும் இதே போன்ற ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
  • இப்படியான சூழலில், தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்தை அமல்படுத்தத் தவறியதால், குறைந்தபட்சம் பாதுகாப்பான இடத்தில் தங்குவதற்கான உரிமையை முதியோர் இழந்து நிற்பதாகத் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கும் பாஸ்கல், இது தொடர்பான நிர்வாக சட்டவிதிகளை அரசு மீறியிருப்பது மட்டுமல்லாமல், இது தொடர்பாக உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவுகளையும் நிறைவேற்றத் தவறிவிட்டதாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
  • முன்னதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சமூக நலன் - பெண்கள் அதிகாரமளித்தல் இயக்குநரகம், முதியோர் இல்லங்களை மாநில அரசுகள் நேரடியாக நடத்துவதில்லை என விளக்கம் அளித்திருப்பதும் இந்த வழக்கின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
  • இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. வழக்கு ஜூலை 31 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தேவையற்ற சுமை எனப் பிள்ளைகளாலும் சமூகத்தாலும் கைவிடப்படும் மூத்த குடிமக்களின் கண்ணீர்க் கதைகள் ஏராளம். குடும்பத்தாலும் சமூகத்தாலும் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு தமிழ்நாடு அரசு - சட்டப்படி - அடைக்கலம் கொடுக்க முன்வர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்