TNPSC Thervupettagam

முதியோருக்கு எதிரான கொடுமைகள்

September 12 , 2022 697 days 504 0
  • தேசிய குற்ற ஆவண காப்பகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு முதியவர்கள் கொல்லப்பட்டதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது கவலை கொள்ளத்தக்கதாகும்.
  • தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஒட்டுமொத்த கொலைகள் குறைந்தாலும், முதியோர் கொலை செய்யப்படுவது அதிகரித்தே வந்துள்ளது. தமிழகத்தில் 2021-இல் 1,741 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 202 பேர் (11.3 %). முதியவர்கள் கொல்லப்படுவதில் மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2021-இல் அங்கு 2,142 கொலை வழக்குகளில் 181 முதியவர்கள் (7.8 %) கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலமான உத்தர பிரதேசத்தில் 2021-இல் 3,717 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 2.7 % முதியவர்கள்.
  • அதிகபட்ச கொலைச் சம்பவங்களில் முதல் 7 இடங்களில் உள்ள மாநிலங்களில், தமிழகத்தில் 11.3%, மகாராஷ்டிரத்தில் 7.8%, மத்திய பிரதேசத்தில் 5.9%, உத்தர பிரதேசத்தில் 2.7%, பிகாரில் 0.9%, ராஜஸ்தானில் 0.6%, மேற்கு வங்கத்தில் 0.2% முதியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
  • சென்னை மயிலாப்பூரில் வசித்துவந்த பட்டய கணக்காளரான (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) ஆர்.ஸ்ரீகாந்த் (58), அவரது மனைவி அனுராதா (53) ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தங்கள் மகள், மகனைப் பார்ப்பதற்காக சென்றுவிட்டு கடந்த மே மாதம் சென்னை திரும்பினர். அவர்கள் சென்னை திரும்பிய தினத்தன்றே அவர்களது வீட்டில்வைத்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
  • அவர்களது வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்துவந்த, நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் தனது மகனைப் படிக்க வைப்பதற்காக தனது கூட்டாளியுடன் சேர்ந்து இருவரையும் கொலை செய்து 1,000 பவுன் தங்கம், 60 கிலோ வெள்ளியைக் கொள்ளையடித்தார்.
  • விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தொழிலதிபர் ராஜகோபால் (75), அவரது மனைவி குருபாக்கியம் (68) ஆகியோர் கடந்த ஜூலையில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த நாளே, அதே மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற ஆசிரிய தம்பதியான சங்கரபாண்டியன் (69), ஜோதிமணி (60) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • இதேபோன்று, கோவை மாவட்டம் சூலூர் அருகே சரோஜினி (72) என்பவர் கணவர் இறந்த நிலையில் தனியே வசித்து வந்தார். கடந்த ஆகஸ்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வந்த மூன்று இளைஞர்கள் அவரைத் தாக்கி கை, கால்கள், வாய் ஆகியவற்றில் பேக்கிங் டேப் ஒட்டியதில் மயக்கமடைந்து உயிரிழந்தார்.
  • இந்த அனைத்துச் சம்பவங்களிலுமே மகன்கள் அல்லது மகள்கள் வெளியூர்களில் வாழ்பவர்கள். பெற்றோர் தனியே வசித்துவருகின்றனர். அவர்களிடம் கொள்ளையடிப்பதற்காகவே கொலைகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மட்டுமே நடக்கின்றன என்று நினைத்துவிட வேண்டாம். இந்தியாவிலேயே  மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றான  ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும் இதேபோன்று கொல்லப்பட்டுள்ளார்.
  • தென்மேற்கு தில்லியில் வசந்த் விஹார் என்ற பகுதியில் வசித்தவர் கிட்டி குமாரமங்கலம் (67). வழக்குரைஞர். முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், வாஜ்பாய் அமைச்சரவைகளில் இடம்பெற்றிருந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி. ரங்கராஜன் இறந்த பிறகு தனியே வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் பல ஆண்டுகளாக சலவைத் தொழிலாளியாக இருந்த ராஜு (24) என்பவர் 2021 ஜூலை 6-ஆம் தேதி வீட்டுக்குள் நுழைந்து பணிப்பெண்ணைத் தாக்கிவிட்டு, கிட்டியைத் தாக்கி தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார்.
  • இங்கே குறிப்பிடப்பட்டவை சில எடுத்துக்காட்டுகள்தான். இதேபோன்று முதியோருக்குப் பாதுகாப்பற்ற நிலைதான் பல மாநிலங்களிலும் நிலவுகிறது. முன்பெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் நிறையக் குழந்தைகள் இருந்தனர். அது "நாம் இருவர், நமக்கு இருவர்' என ஆகி, இப்போது "நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்றாகிவிட்டது. அது "நமக்கு எதற்கு இன்னொருவர்' என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
  • நடுத்தர மற்றும் அதற்கு மேல் சமூக அந்தஸ்து உள்ள குடும்பங்களில் அந்த ஓரிரு குழந்தைகளும் மேலைநாடுகளில் படிக்க வேண்டும், பணிபுரிய வேண்டும் என்ற ஆசையை பெற்றோர்கள் ஊட்டி வளர்க்கின்றனர். குழந்தைகள் வெளிநாடு சென்றாலும், பெரும்பாலான பெற்றோர்களுக்கு அந்த நாடுகள் ஒத்துவராததால் இங்கேயே தனியாக வசிக்கின்றனர்.
  • தனது மகள் திருமணமானதும் தனிக்குடித்தனம் நடத்த வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். மாமனார், மாமியார் தொந்தரவு இல்லாத வரன் அமைய வேண்டும் என்று பெண்ணைப் பெற்றவர்களும் விரும்புகிறார்கள். அதனால், தனித்துவிடப்படும் முதியோர்தான், தங்களுக்கு அறிந்தவர்களாலேயே கொல்லப்படுகின்றனர்.
  • மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றி கூட்டுக் குடும்ப முறையைக் கைவிட்டதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம். முதியோர் இல்லங்கள் இனி தவிர்க்க முடியாதவை. அவை பாதுகாப்பானதாக இருப்பதையாவது நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (12– 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்