TNPSC Thervupettagam

முதியோர்களைப் பாதிக்கும் ஒளிக்குவிய சிதைவு நோய்

July 27 , 2024 4 hrs 0 min 6 0
  • எழுபது வயதுப் பெண் ஒருவர் கிராமத்தில் நடக்கும் இலவசக் கண் பரிசோதனை முகாமிற்குச் சென்றிருந்தார். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவரது இரண்டு கண்ணிலும் பார்வைக் குறைவு காணப் படுவதாகவும், அதற்குக் காரணம் வயது சார் ஒளிக்குவியச் சிதைவு (Age related macular degeneration – ARMD) என்பதையும் கண்டறிந்தார்.
  • இது குறித்து அப்பெண்ணிடம் மருத்துவர் கூறியபோது, “எனக்கு வயசாகிடுச்சு சிகிச்சை எல்லாம் வேண்டாம்” என மறுத்துவிட்டார். இப்பெண்ணின் மனநிலையில்தான் நம் நாட்டில் ஏராளமான முதியவர்கள் உள்ளனர். வயது முதிர்வினால் ஏற்படும் பார்வை இழப்பை அவர்கள் அலட்சியம் செய்கிறார்கள். இதனால் வாழ்வின் கடைசிக் காலங்களை இருளில் கழிக்கும் சூழலுக்கு உள்ளாகிறார்கள்.

வயதுசார் ஒளிக்குவியச் சிதைவு நோய்:

  • நம் கண்ணில் உள்பகுதியில் விழித்திரை என்கிற நரம்புக் கற்றைகள் படர்ந்திருக்கும். அந்த விழித்திரையில் ஒளிக்குவியம் என்கிற பகுதி நம் பார்வைக்கு முக்கியமான பகுதி. இந்த ஒளிக்குவியத்தில் (macula)வயது முதிர்வினால் அதிலுள்ள செல் களில் சிதைவு ஏற்படத் தொடங்குகிறது.
  • பல ஆண்டுகளாக மெல்ல மெல்ல நடக்கும் இந்நிகழ்வில் வெளியேறாத புரதக் கழிவுகள் விழித்திரையில் ஒளிக்குவியத்தில் சேமிக்கப்படுகிறது; இதையே ட்ருசென் (DRUSEN) என்று அழைக்கிறோம். இதன் அளவு அதிகமாகும்போது நமது பார்வை பாதிக்கப்படுகிறது.

வகைகள்:

  • வயதுசார் ஒளிக்குவிய சிதைவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது வயதுசார் உலர் ஒளிக் குவியச் சிதைவு நோய் (DRY AMD).இரண்டாவது வகை, வயதுசார் ஈர ஒளிக்குவியச் சிதைவு நோய் (WET AMD). இவ்விரு வகைகளில் 90 சதவீதம் முதியவர்கள் முதல் வகையினாலே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.

அறிகுறிகள்:

  • புத்தகத்தில் உள்ள வரிகள் அழிந்து அல்லது நெளிந்து காணப்படுவது போல் தோன்றும். குறைவான வெளிச்சத்தில் வழக்கத் தைவிட மங்கலான பார்வை தெரியும்; வண்ணங்களும் மங்கலாகத் தெரியும்.
  • மையப் பார்வைப் புலம் (CENTRAL VISION) மங்கலாகவும், சில சமயம் கறுப்பாகவும் தெரியும். உதாரணத்திற்கு, ஒருவரைப் பார்க்கும் போது அவர் முகம் கறுப்பாகவும், முகம் தவிர்த்து மற்ற இடங்கள் தெளிவாகவும் தெரியும்.
  • வயதுசார் ஈர ஒளிக்குவியச் சிதைவு நோயில், எந்தவித வலியும் இல்லாமல் திடீரென பார்வையிழப்பு ஏற்படும்.
  • சிலருக்கு வயதுசார் ஒளிக்குவியச் சிதைவு நோய் ஒரு கண்ணில் வரும்போது இன்னொரு கண்ணில் பார்வை நன்றாகத் தெரியும். இதனால் அப்போது அஜாக்கிரைதையாக விட்டு விடுவார்கள்.
  • ஆனால் 5 வருடங்களில் இன்னொரு கண்ணிலும் அவர்களுக்கு இதே பாதிப்பு ஏற்படும். சிலருக்கு இதனால் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

யாருக்கு வரும்?

  • 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமன் அதிகமானவர்கள், அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவை எடுத்துக்கொள்பவர்களுக்கு இப்பாதிப்பு ஏற்படலாம்.
  • கண் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள், மிகை ரத்த அழுத்தம் இதய நோய் பாதிப்புள்ளவர்களுக்கு வயதுசார் ஒளிக்குவியச் சிதைவு நோய் வரலாம்.
  • புகைப் பிடிக்கும் நபர்களுக்கு இந்நோய் வர சாத்தியம் இரண்டு மடங்கு அதிகம்

எப்படிக் கண்டுபிடிப்பது?

  • பெரும்பாலானவர்களுக்கு வயதுசார் ஒளிக்குவிய சிதைவு நோயின் அறிகுறிகள் காணப்பட்டாலும் அவை கண்புரை எனத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். வயதாகும்போது பொதுவாகவே கண் புரையினால் பார்வைக் குறைபாடு ஏற்படும். சில சமயம் கண்புரை நோய் ஏற்படாமலும் வயதுசார் ஒளிக்குவியச் சிதைவு நோய் பார்வை இழப்பை ஏற்படுத்தலாம்.
  • உதாரணமாக, கண்புரை என்பது மின் விளக்கில் அதாவது டியூப் லைட்டில் ஏற்படும் பிரச்சினை போன்றது. ஆனால் வயதுசார் ஒளிக் குவியச் சிதைவு நோய் என்பது மின் விளக்கிற்கு வரும் மின்சாரக் கம்பியில் ஏற்படும் பிரச்சினை போன்றது. அதாவது கண்ணில் கண் புரை இல்லை என்றாலும் கண் விழித்திரையில் மையப்பகுதியான ஒளிக்குவியத்தில் சிதைவு ஏற்பட்டாலும் பார்வை இழப்பு ஏற்படும்.

ஆம்ஸ்லர் கட்டம்:

  • நீங்கள் வீட்டிலிருந்தபடியே ஒளிக் குவியல் சிதைவு நோய் பாதிப்புள்ளதா எனக் கண்டறியலாம். இதற்கு சுவிஸ் நாட்டுக் கண் மருத்துவர் ஆம்ஸ்லர் (Amsler) உருவாக்கிய கட்டப் பரிசோதனை (Amsler Grid) உதவும்.
  • ஆம்ஸ்லர் கட்டப் பரிசோதனை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நல்ல வெளிச்சத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு ஆம்ஸ்லர் கட்டப் பரிசோதனை அட்டையை ஓர் அடி (30 – 40 செ.மீ) தூரத்தில் முகத்திற்கு நேராகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு கண் மூலம் கட்டப் பரிசோதனையில் உள்ள மையப்புள்ளியை மட்டும் பாருங்கள். அப்போது கட்டங்கள் வளைவாகவோ, அழிந்தோ காணப்பட்டால் உங்களுக்கு ஒளிக்குவியச் சிதைவு நோய் இருப்பதாக அர்த்தம். இதேபோல் மற்றொரு கண்ணிலும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

சிகிச்சை முறைகள்:

  • உலர் வயதுசார் ஒளிக்குவியச் சிதைவு நோய்க்குக் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கண் மருத்துவப் பரிசோதனை மூலம் ஈர வயதுசார் ஒளிக்குவிய நோயை முன்கூட்டியே கண்டறிந்து, புதிய ரத்தக் குழாய்களை உருவாக்கும் காரணிகளை எதிர்க்கும் ‘Anti VEGF' மருந்தைக் கண்ணுக்குள் ஊசி மூலம் (Intravitreal Injection) செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • மேலும் வளர்ந்த புதிய ரத்தக் குழாய் மீது லேசர் சிகிச்சை அளித்து, அது ரத்தக் கசிவை ஏற்படுத்தாமலும் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகாமலும் தடுக்கலாம். வயதுசார் ஒளிக்குவியச் சிதைவு நோயைத் தவிர்க்கப் புகைபிடிப்பது தவிர்த்தல் மிக முக்கியமான ஒன்று.
  • பச்சைக் கீரைகள், காய்கறிகள், பழங்கள், மீன், பால், முட்டை, கேரட், பப்பாளி, இனிப்புப் பூசணிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் வயதுசார் ஒளிக்குவிய சிதைவு நோய் வராமல் தடுக்கலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்