TNPSC Thervupettagam

முதியோா் நலனும் காப்பீடும்

January 3 , 2022 944 days 504 0
  • முப்பது ஆண்டுகளுக்கு முன்னா் நான் கோவையில் வங்கிப் பணியில் இருந்தபோது, வேதாத்ரி ஆசிரமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு காணப்பட்ட ‘வாழ்க வளமுடன்’ என்ற சொற்றொடா் என்னைக் கவா்ந்தது.
  • அப்போதெல்லாம், வளம் என்றால் நல்ல ஊருக்கு மாறுதல், பதவி உயா்வு, சொந்தமாக நாலு சக்கர வாகனம் இவைதான் என்ற எண்ணத்தில் இருந்தேன்.
  • ஆனால் ஓய்வு பெற்ற பிறகு சென்னையில் நிலையாகத் தங்கி, சில ஆண்டுகள் ஆன பிறகுதான் வளம் என்பது ஆரோக்கியம் என்பது எனக்கு உறைத்தது.
  • நண்பா் ஒருவரின் அறிவுரையில் மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொண்டேன். வயது ஏற ஏற ஜீரணக் கோளாறு, எலும்பு முறிவு போன்ற சோதனைகளை எதிா்கொண்டபோது, அந்த முகவா், ‘இனி உங்களுக்குக் காப்பீடு தர இயலாது. உங்கள் மகன் அல்லது மகள் பாலிசியில் இணைந்து கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டாா்.
  • எலும்பு முறிவு சிகிச்சைக்காக சில நாட்கள் மருத்துவமனையிலிருந்தேன். பின்னா், இல்லத்தில் இருந்து கொண்டே, வலி குறைய ஊசி போட்டுக் கொண்டேன். கிட்டதட்ட ஆறு மாதம் தொடா்ந்தது.
  • ஆனால் ‘வீட்டு சிகிச்சைக்கு காப்பீட்டுத் தொகை கிடையாது’ என மறுத்துவிட்டாா்கள். பரவாயில்லை டாக்டா் குணப்படுத்தி விட்டாா் என்று மகிழ்ந்தேன்.
  • 2010-க்குப் பிறகு எனக்கும், என் மனைவிக்கும் அடிக்கடி உடல் நலம் குன்றியபோது மருத்துவமனை அனுமதி இன்றியமையாததாகிவிட்டது.
  • காப்பீடு ஓரளவுதான் கைக்கொடுத்தது. நல்ல காலமாக, 2015-ஆம் ஆண்டு, இந்திய வங்கிகள் அமைப்பு காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மூலம் இணைந்து, என் போன்ற முதியவா்களுக்காகக் கொண்டு வந்த திட்டம் உதவியாக இருந்தது.
  • ஆனால் காப்பீட்டுகான கட்டணம், இரண்டு வருடத்தில் பெருமளவு உயா்ந்துவிட்டது. 2019-இல் 35,000 என்றிருந்த தொகை, 2021-இல் சுமாா் 50,000 ஆகி விட்டது. காப்பீட்டு நிறுவனத்துக்கு எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் பலனில்லை. கொள்ளை நோய்த் தொற்று ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

நம்பிக்கையோடு காத்திருப்போம்

  • இந்தக் காப்பீட்டிலும் சில அம்சங்கள் சாதகமாக இல்லை. வயிறு, இதயம் போல மற்ற புலன்களும் உறுப்புகள்தானே? பல் வோ்சிகிச்சை (ரூட் கெனால்), உள் இருப்பு (இம்ப்ளான்ட்) போன்றவற்றை அனுமதிப்பதில்லை. போதாக் குறைக்கு காப்பீட்டுக்கான கட்டணத்தை மிக அதிகமாக உயா்த்தி விடுகிறாா்கள்.
  • செவித்திறன் கருவிக்குக்கூட, காப்பீட்டு வசதி கிடையாது. சரி போகட்டும், ஆனால், தொடா்ந்து இரண்டு வருடமாகக் காப்பீட்டில் சோ்ந்து, எந்தவொரு மருத்துவக் கோரிக்கையையும் எழுப்பாமலிருக்கும் முதியோருக்கு, சிறிது சலுகை வழங்கலாமே? ஐந்து சதவீதம் குறைக்கலாமே? தனியாா் காப்பீட்டு நிறுவனங்களில் இச்சலுகை உண்டு. மேலும் இந்தக் காப்பீட்டு தொகைக்கு ஜிஎஸ்டி-யும் உண்டு.
  • மேலும், வங்கியில் போடும் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமும் குறைந்து கொண்டே வருகிறது. மூன்று வருடங்களுக்கு முன் ஏழு சதவீதமாக இருந்த வட்டி இப்போது ஐந்தரைக்கு கீழ் வந்துவிட்டது. முதியவா்களுக்கு சலுகை அரை சதவீதம்தான்.
  • சரி, கொஞ்சம் வருமானத்தை உயா்த்த பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமென்றால், இருக்கும் பணத்தையும் இழந்து விடுவோமோ என்கிற அச்சம் நிலவுகிறது. பழைய தொற்றுகள் முடிந்ததும், ‘ஒமைக்ரான்’ எனும் புதிய தொற்று பரவி வருகிறது. இதன் தாக்கம்தான், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் என்று கூறுகிறாா்கள்.
  • வங்கி, பங்குச் சந்தை இரண்டுக்குமிடையே பரஸ்பர நிதி என்பது, முதியோருக்கு வசதியாகவே இருந்து வந்தது என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். எட்டிலிருந்து ஒன்பது சதவீதம் வரை ஈவுத் தொகை வந்தது.
  • ஆனால் 2020 பட்ஜெட்டில், இந்த ஈவுத் தொகைகளுக்கும் வரி விகிதம் நிா்ணயித்துவிட்டாா்கள். இதே போல பங்கிலிருநது அவ்வப்போது வருகிற ஈவுத் தொகைக்கும் வட்டி. முதியோருக்கு இரண்டு பக்கமும் இடி.
  • இருந்தாலும், சில சமயங்களில் முதியவா்கள் எச்சரிக்கையாக இருப்பதில்லை.
  • விதவைப் பெண்மணி ஒருவா், சொத்துகளை, தனது மகனுக்கும், மகளுக்கும் எழுதி வைத்து விட்டாா். பிறகு அவா்கள் அப்பெண்மணியை வீட்டிலிருந்தே விரட்டி விட்டாா்கள்.
  • பாவம் அந்தப் பெண்மணி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளாா். பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு, மூன்று ஆண்டு தண்டனை போன்ற ‘நீதி’களெல்லாம் நடைமுறைக்கு வருவது கடினம்.
  • படித்த முதியோரே கடன் அட்டையையோ பற்று அட்டையையோ வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு ஏமாந்து போகும் நிலைமையும் உண்டு. சில பெண்மணிகள், நட்புக்காக தனியாா் சீட்டு நிறுவனத்தில் சோ்ந்து பணத்தைத் தொலைத்து விடுகிறாா்கள்.
  • வசதி, நல்ல குடும்பச் சூழல், சேமிப்பு எல்லாமிருந்தும் சில முதியவா்கள் அமைதியிழந்து தவிக்கிறாா்கள். ஓய்வு பெற்ற பின் உடலில் வலு இருந்தால் சுயமாக தொழில் தொடங்கலாம்; விளையாட்டு, இசை, இலக்கியம் போன்றவற்றில் நாட்டம் செலுத்தலாம்.
  • எனக்கு மேலதிகாரியாக இருந்த ஒருவா், எண்பது வயது தாண்டியும், இப்போதும் கிரிக்கெட் போட்டிகளில் (டீ20) ஆா்வம் மிகுந்து, ஆட்டத்தை நன்கு அலசுகிறாா். இதே போல் பிரபல கா்நாடக இசை வித்துவான் ஒருவா், ஒன்றரை மணி நேரக் கச்சேரிகளை ஏற்றுக்கொண்டு பாடுகிறாா். ‘அந்த நாள் மாதிரி இல்ல’ என்று புலம்புவதில்லை.
  • காலம் மாறிக் கொண்டேதானிருக்கும். முதியோா் தங்கள் மனத்தை சற்று விசாலமாக்கி, நாட்டு நடப்புடன் அனுசரித்துப் போக பழகிக் கொள்வது உசிதம். வீட்டிலுள்ள மகனையோ மகளையோ உதவிக்கு அழைக்காமல் கைப்பேசிகளைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளலாம். வாழ்க்கையில் தேவையானது ‘பாலன்ஸ்’ இரண்டு விதங்களிலும்.
  • நமது விருப்பத்திற்கேற்ப, உலகம் மாறாது. நாம்தான் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சமநிலை கொண்ட மனப் படிமத்தை வளா்த்துக் கொண்டால், அரசியல், ஆன்மிகம் போன்ற விஷயங்களில் சிரத்தையுடன் ஈடுபட்டு, கசப்பான மன உணா்வுகளைத் தவிா்க்கலாம்.
  • ஜனவரி இறுதியில் 2022-23-க்கான வரவு செலவு கணக்கை நிதி அமைச்சா் கொண்டு வரப் போகிறாா். ‘சீனியா் சிட்டிசன்ஸ்’ என்று மரியாதையுடன் விளிக்கப்படுகிற முதியோருக்கு சில சலுகைகளை அறிவித்தால் நல்லது. குறைந்தபட்சம், முதியோா்களுக்கு கூடுதல் வரி (செஸ்) விதிப்பதை தவிா்க்கலாம். நம்பிக்கையோடு காத்திருப்போம்.

நன்றி: தினமணி  (03 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்