- தமிழகத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கும் 2020-21-க்கான நிதிநிலை அறிக்கையில் முதியவர் நலனுக்கும் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்புக்குரியது.
- தமிழகத்திலுள்ள 37 மாவட்டங்களிலும் தலா 2 வட்டாரங்களில் முதியோர் ஆதரவு மையங்களைத் தொடங்குவதற்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
- ரூ.37 லட்சம் செலவில் இப்போது அமைக்க இருக்கும் முதியோர் ஆதரவு மையங்கள் ஏற்கெனவே மேற்கொண்டுவரும் முயற்சியின் நீட்சிதான் என்றாலும்கூட, மாவட்ட அளவில் முதியோர் நலன் குறித்து அக்கறை செலுத்தப்படுவது தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடு.
- மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, சராசரி இந்தியரின் ஆயுட்காலம் இப்போது 67 வயது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆண்களைவிடப் பெண்கள் சற்று அதிகமாக உயிர் வாழ்கிறார்கள் என்பதையும் அந்தப் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.
- மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையிலும் முதியோர் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்படுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் வேறுபல சலுகைகள் வழங்கவும் வழிகோலப்பட்டுள்ளன.
- துணை முதல்வர் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுபோல முதியோரை அக்கறையுடன் கவனிப்பது தமிழ்ச் சமுதாயத்தின் மரபு.
- கல்வி மற்றும் பணிச் சேவையின் காரணமாக அடுத்த தலைமுறையினர் மாநிலத்துக்குள்ளேயும், வெளியேயும், வெளிநாட்டிலும் இடம்பெயர்வது அதிகரித்து வருவதால் தனிக் குடும்பங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் வயது முதிர்ந்த பெற்றோர் தனித்து விடப்படுவது தவிர்க்க முடியாத நிலைமையாக மாறிவிட்டிருப்பதில் வியப்பில்லை.
சட்டங்கள்
- 2007-இல் பெற்றோர், முதியோர் நலச்சட்டம் (மெயின்டனன்ஸ் அண்ட் வெல்ஃபேர் ஆஃப் பேரன்ட்ஸ் அண்ட் சீனியர் சிட்டிஸன்ஸ் ஆக்ட்) தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், சட்டபூர்வ வாரிசுகள் பெற்றோருக்கும், சட்டபூர்வ காப்பாளருக்கும் அவர்களது பராமரிப்புச் செலவுக்கான பணம் வழங்க வேண்டும்.
- சட்டபூர்வ வாரிசுகளால் பெற்றோர் புறக்கணிக்கப்பட்டால் அல்லது தங்களது சொந்த வருமானத்தில் வாழ முடியாத நிலைமை காணப்பட்டால், பராமரிப்புச் செலவை சட்டபூர்வமாகக் கோரிப் பெற அந்தச் சட்டம் வழிகோலுகிறது.
- பெற்றோர் கைவிடப்படும்போதோ, புறக்கணிக்கப்படும்போதோ அவர்கள் தங்களது வாரிசுகளால் இழைக்கப்பட்ட அநீதி குறித்துப் புகார் தெரிவித்தால், 2007 சட்டப்படி 90 நாள்களுக்குள் அவர்களது புகார் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்.
- பெற்றோரை குழந்தைகள் பராமரிக்காமல் கைவிட்டால், அவர்களின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5,000 அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே வழங்கும் அதிகாரம் நீதித் துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
- 2016-இல் தமிழக அரசு பிறப்பித்த அரசு உத்தரவின் கீழ் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு சத்துணவு வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
- இதுபோல பல சட்டங்களும் அரசு உதவிகளும் இருந்தாலும்கூட, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அதிகார வர்க்கத்துக்கு முனைப்பில்லாத நிலை காணப்படுகிறது.
- முதியோர் தேவையில்லாதவர்கள் என்கிற மனோபாவத்துடன், முதியோர் ஆகப்போகும் தலைமுறையினர் அவர்களை நடத்தும் நகைமுரணை நினைத்தால் சிரிப்பு வருகிறது.
- ஆயுள்காலத்தை நீட்டிப்பதில் மருத்துவ அறிவியல் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. கோரமான விபத்திலிருந்தும், கடுமையான பாதிப்புகளிலிருந்தும், உயிர்க்கொல்லி நோய்த்தொற்றுகளிலிருந்தும் நோயாளிகளைக் காப்பாற்றும் திறமையை மனித இனம் வளர்த்துக் கொண்டிருக்கிறது.
- அதனால், 60 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாகச் செயல்படுபவர்கள், 80 வயதைக் கடந்தும் மருத்துவ உதவியுடன் உயிர் வாழ்பவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
- இது வரமா, சாபமா என்பது அவரவர் அந்த நிலையை எதிர்கொள்ளும் மனோபாவத்தைப் பொருத்து அமையும்.
இன்றைய நிலை
- சமுதாயம் முதியோரை எப்படி மதிக்கிறது, அவர்களின் அனுபவத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பொருத்துத்தான் அந்த இனத்தின் வருங்காலம் உறுதிப்படுத்தப்படும் என்பதை இன்றைய தலைமுறையினரில் ஒருசிலர் மட்டுமே உணர்ந்திருக்கிறார்கள்.
- முதியோரின் உடல் ரீதியிலான இயலாமையை பலவீனமாகக் கருதிவிடும் போக்கு அதிகரித்து வருவது மிகப் பெரிய சோகம்.
- இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை வழங்குகிறது. ஆனால், அந்த மூத்த குடிமக்கள் பெறும் பயணச்சீட்டில் காணப்படும் வாசகம் அதிர்ச்சி அளிக்கிறது.
- "உங்களது கட்டணத்தில் 43%, இந்திய குடிமக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்கிற வாசகம், மூத்த குடிமக்களின் மனதை எந்த அளவுக்கு புண்படுத்தும் என்பதை அரசும் அதிகாரிகளும் நினைத்துப் பார்த்தார்களா?
- நாடாளுமன்ற உணவு விடுதியிலும், அரசு அதிகாரிகளின் இலவசப் பயணத்தின்போதும் இதேபோல அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தால் மூத்த குடிமக்களின் பயணச்சீட்டில் காணப்படும் வாசகங்களை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும்.
- 2050-இல் இந்திய மக்கள்தொகையில் 5-இல் ஒரு பகுதியினர் முதியோராக இருக்கப் போகிறார்கள். முதியோர் ஆதரவு மையங்கள் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகி விடாது.
- சமுதாயத்தில் முதியோர் குறித்த புரிதலையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு.
நன்றி : தினமணி (20-02-2020)