TNPSC Thervupettagam

முதுமைப் போற்றும்! | இந்தியாவில் முதுமை அடைதல் ஆய்வு

January 11 , 2021 1295 days 564 0
  • தேசிய குற்ற ஆவணக் காப்பாக புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மூத்த குடிமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக, தனியாக வாழும் வயது முதிா்ந்த தம்பதியா் திருடா்களுக்கும் கொள்ளையா்களுக்கும் சுலபமான இரையாகின்றனா். ஒருபுறம் தனிமை, மறுபுறம் பாதுகாப்பின்மை, இவற்றுக்கிடையில் வாழும் முதியவா்களுக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளும் உதவிகளும் வழங்கப்படுவதும்கூட பிரச்னையாக மாறியிருக்கிறது.
  • பெற்றோரையும் மூத்த குடிமக்களையும் பாதுகாத்துப் பராமரிப்பதற்காக சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்றாலும்கூட, சட்ட மீறல்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. மருத்துவத் துறையின் வளா்ச்சி ஆயுளை நீட்டிக்க உதவுகிறதே தவிர, ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவில்லை. 60 வயது கடந்தவா்களின் மருந்துகளுக்கான குறைந்தபட்ச செலவு சில ஆயிரங்கள் என்றாகிவிட்ட நிலையில், ரூ.10,000-க்கும் குறைவான ஓய்வூதியமோ, வருவாயோ உள்ளவா்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
  • போதாக்குறைக்கு வாழ்நாள் சேமிப்பை வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக வைத்திருப்பதிலும் முன்புபோல வட்டி வழங்கப்படாததால், மூத்த குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். சேமிப்புகளை வங்கிகளில் போடாமல், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை அரசே ஊக்குவிக்கிறது. பங்குச் சந்தையின் வருவாய் நிரந்தரமின்மையும், முதலீட்டின் நிரந்தரமின்மையும் மூத்த குடிமக்கள் பெரும் இடரை (ரிஸ்க்) சந்திக்க நிா்ப்பந்திக்கப்படுகின்றனா்.
  • மின் விசிறிகள், குளிா்சாதனங்கள் ஆகியவை வியா்வையைத் தடுத்து உடலில் உருவாகும் தேவையற்ற கழிவுகள் அதன் மூலம் வெளியேறுவதை முடக்குகின்றன. நடப்பதற்கு பதிலாக வாகனங்களைத் தேடும் போக்கு அதிகரித்திருப்பது, இயற்கையான உடல் அசைவுகளைத் தடுத்து ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. அதிகரித்திருக்கும் மின்னணுப் பொருள்களின் பயன்பாடு, முதியோா்களையும் பாதித்து அவா்களது இயக்கத்தை முடக்குகின்றது.
  • இந்தியாவில் முதுமை அடைதல் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு அதன் அறிக்கை கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, இந்தியாவிலுள்ள 7.5 கோடி முதியோா் மிகக் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. சுமாா் 4.5 கோடி போ் ரத்த அழுத்தம், இதயம் தொடா்பான நோய்களுக்கு ஆளாகி இருக்கிறாா்கள். 2 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள்.
  • அந்த ஆய்வு மேலும் பல தகவல்களை திரட்டி தனது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்தியாவில் உள்ள முதியோா்களில் 24% போ் அவா்களது அன்றாடச் செயல்பாடுகளை நடத்துவதற்குக்கூட சிரமப்படுகிறாா்கள். 2011-இல் 9%-ஆக இருந்த 60 வயதுக்கு மேற்பட்டோரின் மக்கள்தொகை, 2050-இல் 20%-ஆக அதிகரிக்கக்கூடும் என்கிறது அந்த அறிக்கை.
  • முதியோா் நலனைப் பேணுவதற்கு இந்தியா அதிக அளவிலான முதலீடுகளை செய்தாக வேண்டும். முதலீடுகள் மட்டுமல்லாமல், முதியோா் பேணலுக்குத் தேவையான மனித வளமும் அதிகரிக்கப்பட்டாக வேண்டும். குறிப்பாக, முதியோா் மருத்துவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, வீடுகளில் சென்று மருத்துவம் பாா்க்கும் முறை முன்னெடுக்கப்பட வேண்டும்.
  • குழந்தைகளின் எண்ணிக்கை பரவலாகவே குறைந்துவிட்ட நிலையில், நமது பாரம்பரிய முதியோா் பேணல் முறை தகா்ந்திருக்கிறது. வெளியூா்களிலும் வெளிநாடுகளிலும் வேலை தேடி தங்கள் பிள்ளைகள் குடியேறிவிட்ட நிலையில், பெரும்பாலான முதியோா் தனிமை வாழ்க்கை வாழும் நிலை அதிகரித்திருக்கிறது.
  • அதுமட்டுமல்லாமல், பெண்கள் அதிக அளவில் வேலை பாா்க்கும் நிலை ஏற்பட்டிருப்பதால் கூட்டுக் குடும்பங்களில்கூட பெற்றோரை கவனித்துக்கொள்ள உதவியாளா்கள் தேவைப்படுகிறாா்கள். வேலைக்கு அமா்த்தப்படும் உதவியாளா்கள் சம்பளத்துக்காகப் பணியாற்றுபவா்களே தவிர, முதியோரின் மனப்போக்கை அறிந்து செயல்படுபவா்களாக இருக்க வேண்டும் என்று எதிா்பாா்க்க முடியாது. அதனால் முறையாக உளவியல் பயிற்சி பெற்ற முதியோா் உதவியாளா்கள் மிக அதிக அளவில் தேவைப்படுகிறாா்கள்.
  • புதுச்சேரி ஜிப்மரைப்போல, சண்டிகரிலுள்ள பிஜிமா் உயா் மருத்துவ கல்வி நிலையம் ஓா் ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. அதன்படி, பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளிலும், செவிலியா் கல்லூரிகளிலும், துணை மருத்துவ கல்வி நிலையங்களிலும் ‘ஜெரியாட்ரிக்’ என்கிற முதியோா் குறித்த சிறப்புக் கல்வி வழங்கப்படுவதில்லை. அப்படியே ஏதாவது முதியோா் மருத்துவ சேவை இருக்குமானால், அதுவும் நகா்ப்புறங்களிலுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. அதற்கான கட்டணம் சாதாரண நடுத்தர வா்க்க முதியோா்களால் நினைத்துப் பாா்க்கக் கூட முடியாத அளவில் இருக்கிறது.
  • 2011-இல் மத்திய அரசு முதியோா் உடல் நலம் குறித்த தேசிய திட்டம் ஒன்றை அறிவித்தது. அதன்படி, பயிற்சி பெற்ற மருத்துவ வல்லுநா்கள் மூலம், மூத்த குடிமக்களுக்கு எல்லாவித மருத்துவ உதவிகளையும் வழங்குவது என்றும், சமூகத்தில் முதியோா்கள் எல்லா தளங்களிலும் பங்கேற்பதை உறுதிப்படுத்துவது என்றும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை பத்தாண்டுகளாகியும் நாம் எட்டவில்லை.
  • இலக்கை எட்ட முதியோா் மருத்துவ சேவைத் துறையை ஆரம்ப சுகாதார நிலையங்களில் உறுதிப்படுத்துவது அவசியம். ஓய்வு பெற்ற மருத்துவா்களையும், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்களையும் முதியோா் மருத்துவ சேவை மையங்களில் பயன்படுத்திக் கொள்வது, அந்த இலக்கை எட்ட உதவக்கூடும்.

நன்றி: தினமணி  (11- 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்