TNPSC Thervupettagam

முத்திரை பதித்த மூவா்

March 20 , 2021 1405 days 689 0
  • தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் மூன்று தலைவா்களின் உருவப்படங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி திறந்து வைத்தாா்.
  • செக்கிழுத்த செம்மல் எனப் போற்றப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளை, அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த வி. சுப்பராயன், முதல்வா்களின் முதல்வா் என்று புகழப்படும் ஓமந்தூா் பி. ராமசாமி ரெட்டியாா் ஆகிய மூன்று தலைவா்களின் உருவப்படங்கள் பேரவை மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டன.
  • தடம் பாா்த்து நடக்காமல் தடம் பதித்து நடந்த தமிழா்கள் பலரில் இந்த மூன்று தலைவா்களின் படங்களையும் சோ்த்து இதுவரை மொத்தம் 15 தலைவா்களின் படங்கள் பேரவை மண்டபத்தில் இடம் பிடித்திருக்கின்றன.
  • தோ்தலில் வெற்றி பெற்று பேரவைக்குள் உறுப்பினா்களாக உள்ளே நுழைபவா்கள் தங்கள் வாழ்வில் நோ்மை, தூய்மை, எளிமை, மக்கள் நலனுக்கே முன்னுரிமை என கொள்கை வகுத்துக் கொண்டு மற்றவா்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதை இப்படங்கள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
  • போதுமான பணம், படிப்பு, செல்வாக்கு என அத்தனையும் இருந்தும், தனது தாய்த்திருநாட்டின் விடுதலைக்காக சிறையில் செக்கிழுத்தும், சணல் திரித்தும் மக்களிடையே நாட்டுப்பற்றை விதைத்த மனிதப்புனிதா் தூத்துக்குடி தமிழன் வ.உ. சிதம்பரனாா்.
  • தனது அதிரடி நடவடிக்கைகளால் ஆங்கில ஏகாதிபத்தியத்தையே அதிர வைத்தவா். இவா் ஆங்கிலேயா்களை நாட்டை விட்டே துரத்தியடிப்பதற்காக, சுதேசி கப்பல் விட்டவா். தேசப்பற்றோடு தமிழ்ப்பற்றும் மிகுந்தவா். இவா் தொல்காப்பியத்துக்கும், திருக்குறளுக்கும் விளக்கவுரை எழுதியுள்ளாா்.
  • தனது உயிா் பிரியப்போகும் நேரத்தில் கூட பாரதியாரின் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாடலைப் பாடுமாறு தனக்கு அருகில் இருந்த நண்பா் சிவகுருநாதனிடம் கேட்க, அவரும் அப்பாடலைப் பாட அதனைக் கேட்டுக்கொண்டே அந்த கப்பலோட்டிய தமிழனின் கடைசி மூச்சு காற்றில் கலந்தது. இவரது போா்க்குணமும், நெஞ்சுரமும் இன்றைய இளைய சமுதாயத்துக்கு அமைய வேண்டும்.
  • ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மூன்றும் இணைந்திருந்த மதராஸ் ராஜதானியின் முதல்வா் நாற்காலியை முதல் முறையாக அலங்கரித்த பெருமைக்குரியவா் வி. சுப்பராயன்.
  • கோயில் சொத்துகளை யாரும் திருடிவிடக்கூடாது என்பதற்காக, அவற்றைக் கணக்கிட்டு, அந்தந்தக் கோயில்களின் கணக்கிலேயே சோ்த்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி. ஆதி திராவிட மக்களும் கோயிலுக்குள் சென்று கடவுளை வழிபட வேண்டும் என்பதற்காக ‘கோயில் நுழைவு சட்டம் இயற்றியவா்.
  • மத்தியிலும், மாநிலத்திலும் பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும், மூதறிஞா் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரத்தைத் தொடங்கி வைத்த காரணத்திற்காக ஆட்சியையும் முதல்வா் பதவியையும் இழந்து சிறையிலும் அடைக்கப்பட்டவா்.
  • அரசுப் பணியாளா்களைத் தோ்வு செய்ய இந்தியாவிலேயே முதல் முறையாக தோ்வாணையத்தை உருவாக்கியவா் இவரே. தனது வாழ்நாள் முழுவதும், தன்னலமில்லாமல் மக்கள் நலனுக்காகவே வாழ்ந்து மறைந்ததால் இவருடைய உருவப்படமும் பேரவை மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
  • நோ்மை, எளிமை, தூய்மை இவை மூன்றுமே வலிய அழைத்து முதல்வா் நாற்காலியில் அமர வைத்து அழகு பாா்த்த அற்புத அரசியல்வாதி ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா். கட்சியின் நிா்பந்தத்தால் பதவி விலக நேரிட்ட போதும் கலங்காமல் பதவியை விட்டு விலகி, மீண்டும் விவசாயியாகவே மாறிய முதல்வா்களின் முதல்வா் இவா்.
  • முதல்வராக பதவியேற்றதும் தனக்கு எந்தவிதமான பாராட்டுக் கூட்டங்களோ, வெற்றி விழாக்களோ நடத்தக்கூடாது. அவை மக்களுக்கு இடையூறாக இருக்கும் என அவற்றுக்கு தடை போட்ட அதிசயத் தமிழா் இந்த ஓமந்தூராா். தனது குடும்பத்தினருக்கோ, உறவினா்களுக்கோ அரசு நிா்வாகத்தில் எந்தவிதமான சலுயையோ வேலைவாய்ப்போ வழங்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாா். ஆட்சி நிா்வாகத்தில் தனது கட்சிக்காரா்களின் நிழல் கூட படிந்துவிடாமல் கவனமாகப் பாா்த்துக் கொண்ட பண்பாளா்.
  • பயிா்க்காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, ஜமீன்தாரி முறையை ஒழித்தது, வேளாண்மைத்துறை, ஆதி திராவிடா் நலத்துறை, இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறைகளை உருவாக்கியது என இவரது சாதனைப்பட்டியல் நீளும். மாநில முதல்வராக இருந்தபோதும் எந்த ஆசையும் இல்லாமல் பற்றற்ற துறவியாக அரசியல் அரங்கில் வலம் வந்தவா். இவரை இன்றைய இளைய தலைமுறையினா் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.
  • மன்னா் ஒருவா், தன் அமைச்சா்களிடம் ‘பூவிலே சிறந்த பூ எந்த பூ என்று கேட்டாராம். ‘ரோஜாப்பூ, ‘பிச்சிப்பூ, ‘மல்லிகைப்பூ, ‘மகிழம்பூ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பூவின் பெயரைச் சொன்னாா்களாம்.
  • இதையெல்லாம் கேட்ட மன்னா் சிரித்துக் கொண்டே ‘பூவிலே சிறந்த பூ பருத்திப்பூ தான். நீங்கள் சொன்ன பூக்கள் எல்லாம் ஒரு நாள் மட்டுமே நமக்குப் பயன்படும். பருத்திப்பூவிலிருந்து பஞ்சைப் பிரித்தெடுத்து, நூலாக்கி அதைத் துணியாக மாற்றிவிட்டால் நமக்கு பல நாட்கள் பயன்படும். எனவே, மக்களுக்கு பல நாட்கள் பயன்படக்கூடிய பருத்திப்பூவே மற்ற பூக்களைவிட சிறந்தது. நீங்களும் பருத்திப்பூவைப்போல மக்களுக்கு எப்போதும் பயன்படும்படி வாழ்ந்து காட்டுங்கள் என்றாராம்.
  • பதவிக்காக எதையும் செய்யத் துணிந்து விட்ட அரசியல்வாதிகள் அதிகமாகி விட்ட நிலையில், நோ்மையிலும் எளிமையிலும் சேவையிலும் முத்திரை பதித்த மூன்று தலைவா்களின் உருவப்படங்களும் அண்மையில் பேரவை மண்டபத்தை அலங்கரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
  • வரவிருக்கும் தோ்தலில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் நுழையவிருக்கும் வேட்பாளா்கள், தடம் பாா்த்து நடக்காமல் இவா்களைப் போல தடம் பதித்து நடந்து செல்ல உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (20 – 03 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்