TNPSC Thervupettagam

முனைப்பு மட்டுமே போதாது!

November 2 , 2021 1005 days 431 0
  • நமது அண்டை நாடுகளின் (பாகிஸ்தான், சீனா) எல்லையோர சவாலை எதிர்கொள்வதற்கு இந்தியா ராணுவ தளவாட உற்பத்தியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
  • ஆயுத ஏற்றுமதியாளராக மாற இந்தியா விழைகிறது. இந்தியாவின் தேவைக்காக மட்டுமல்லாமல் உலகின் ஏனைய நாடுகளுக்காகவும் இந்தியாவில் ஆயுதங்கள் தயாரிப்பது என்கிற கொள்கை முடிவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
  • நமது ஆயுதத் தேவைகள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்படும் சூழ்நிலையில், நமது தேவைக்கான ஆயுதங்களை நாமே தயாரிப்பது என்று 2014-இல் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் முனைப்பு காட்டத் தொடங்கியது.
  • சீனா உள்ளிட்ட உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் ராணுவத் தளவாட தயாரிப்புகள் தனியார் துறையிடம்தான் விடப்பட்டிருக்கின்றன.
  • அரசுத்துறை நிறுவனங்களால் மட்டுமே நம்முடைய தேவைக்கான அனைத்து ஆயுதங்களையும் தயாரித்துவிட முடியாது என்பதால், தனியார் துறையையும் இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கும் ஏற்பட்டது

ராணுவ தளவாட உற்பத்தி

  • இந்தியாவின் தேவைக்கு மட்டுமாக ராணுவத் தளவாடங்களைத் தயாரிப்பது லாபகரமான தொழிலாக இருக்காது என்பதால், ஏற்றுமதி செய்தாக வேண்டிய கட்டாயம் தனியார் உற்பத்தியாளர்களுக்கு உண்டு. அதனால், தனியார் துறையை இணைத்துக்கொள்வது என்று மோடி அரசு முடிவு செய்தது.
  • துப்பாக்கி ரவைகள், பீரங்கி குண்டுகள், துப்பாக்கிகள், ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதில் ஆரம்பத்தில் முனைப்புக்காட்டி ஏற்றுமதியை அதிகரித்தாலும் கூட, சர்வதேச ராணுவ தளவாட சந்தையில் முக்கியமான இடத்தை இந்தியா பிடிப்பதற்கு குறைந்தது பத்து ஆண்டுகளாவது ஆகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • சர்வதேச சந்தையில் லாபகரமான விலையில் போட்டிபோட்டு விற்க முடியுமா என்கிற கேள்வி தனியார் உற்பத்தியாளர்கள் முதலீடு செய்வதற்கு தடையாக இருந்தது.
  • அதை அகற்றுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபடவில்லை என்பது கசப்பான உண்மை.
  • அதுமட்டுமல்ல, ஏற்கெனவே ஆயுத தளவாட உற்பத்தியிலிருக்கும் பெரு நிறுவனங்களுடனான கூட்டுத் தயாரிப்பில்தான் ஏற்றுமதி சாத்தியமாகும்.
  • அதன்மூலம் சர்வதேச சந்தையில் போட்டியிடும் அளவிலான விலையில் உற்பத்தி செய்வதுடன் ஆயுத தளவாட உற்பத்திக்குத் தேவையானத் திறன்சார் தொழிலாளர்களையும் நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும்.
  • அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் சர்வதேச அளவில் மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தியாளர்களாக இருக்கின்றன என்றால் அதன் பின்னணியில் அவர்கள் அடைந்திருக்கும் தொழில்நுட்ப மேம்பாடு மிகப்பெரிய பலம்.
  • அதே நேரத்தில், ராணுவ தளவாட உற்பத்தி கேந்திரமாக மாறி, ஏற்றுமதி செய்வதற்கான அடிப்படைகள் நம்மிடம் இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.
  • போதிய நிதியாதாரம் இல்லாததால் ஆராய்ச்சியிலும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலும் இந்தியாவால் முதலீடு செய்ய முடியவில்லை.
  • இந்திய தொழில்துறையைப் பொறுத்தவரை வெளிநாட்டு தொழில்நுட்பத்தை கையாள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும், அவற்றை மேம்படுத்துவதிலும் தயங்கியதில்லை.
  • ஆனால், இந்தியாவில் புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனவா என்றால் இல்லை.
  • அப்படியே சில இந்தியர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தாலும் அவர்கள் வெளிநாடுகளில் குடியேறியவர்களாக இருக்கிறார்களே தவிர இந்தியாவில் இருப்பவர்கள் அல்ல.
  • அணு ஆயுத ஏற்றுமதியாளராவதால் வல்லரசாகிவிட முடியாது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் வளர்ச்சியடைந்தால் மட்டுமே தளவாட உற்பத்தியும் ஏற்றுமதியும் ஒரு நாட்டை வல்லரசாக்கும்.
  • இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாததால்தான் பனிப்போர் கால சோவியத் யூனியன் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.
  • ராணுவ தளவாட உற்பத்தியிலும், தொழில்நுட்ப ஆய்வுகளிலும் காட்டிய முனைப்பை பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சோவியத் யூனியன் காட்டவில்லை.
  • அதை உணர்ந்த சீனா, தன்னை பொருளாதாரத்தில் மேம்படுத்திக்கொண்டதுடன் ராணுவ தளவாட உற்பத்தியிலும் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாறியது. இந்த அடிப்படை உண்மையை நாமும் உணர வேண்டும்.
  • "வலுவான பொருளாதாரம் அமைந்தால்தான் பலமான ராணுவத்தை கட்டமைத்துப் பாதுகாக்க முடியும். பலமான ராணுவத்தால் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியாது' என்கிற நெப்போலியனின் வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
  • இந்தியாவை ராணுவ தளவாட உற்பத்தி மையமாக மாற்றுவதும் ஆயுத ஏற்றுமதியாளராக சர்வதேச அளவில் நிலைநிறுத்துவதும் மட்டுமே இந்தியாவை ராணுவ ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ வல்லரசாக்கி விடாது.
  • நம்முடைய தேவைக்கான துப்பாக்கிகள், ரவைகள், டேங்குகள், போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் உள்ளிட்ட ராணுவத்துக்கான தளவாடங்களையும் ஆயுதங்களையும் நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியாவிட்டால், தேசியப் பாதுகாப்பு குறித்தும் இந்தியாவின் வலிமை குறித்தும் மார்தட்டிக் கொள்வதில் அர்த்தம் இல்லை.
  • ராணுவ தளவாட ஏற்றுமதி மையமாக இந்தியா மாறுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகுமேயானால் அந்த வாய்ப்பை நாம் தவறவிட வேண்டிய அவசியமும் இல்லை.
  • பாதுகாப்பு அமைச்சரின் முனைப்பு வரவேற்புக்குரியது. அதேநேரத்தில், அதுமட்டுமே முனைப்பாக மாறினால் இந்தியாவும் இன்னொரு சோவியத் யூனியனாக மாறிவிடக்கூடும்.

நன்றி: தினமணி  (02 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்