TNPSC Thervupettagam

முனைவர் பட்ட ஆய்வுகள்: முற்றுப்புள்ளியை நோக்கிய பயணமா?

October 22 , 2024 34 days 86 0

முனைவர் பட்ட ஆய்வுகள்: முற்றுப்புள்ளியை நோக்கிய பயணமா?

  • மத்திய அரசின் நிதி உதவி (Junior Research Fellowships) பெறுகின்ற உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கான தகுதித் தேர்வாக மட்டுமே இருந்த யூஜிசி நெட், சிஎஸ்ஐஆர் நெட் ஆகியவை தற்போது நாடு முழுவதும் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்​வதற்கான அடிப்​படைத் தகுதி நுழைவுத் தேர்வுகளாக அறிவிக்​கப்​பட்டு​விட்டன. இதன் மூலம், விளிம்பு நிலைச் சமூகங்​களைச் சேர்ந்த மாணவர்​களுக்கு பிஹெச்டி என்பது எட்டாக்​க​னியாக ஆக்கப்​பட்​டுள்ளது.
  • முனைவர் பட்டம் என்பது பொதுவாக ஒருவர் தேர்வுசெய்த துறையின் மிக உயர்ந்த அளவிலான கல்விச் சாதனையைக் குறிக்கிறது. தன் வாழ்நாளில் ஒருவர் சிறு வயதில் எழுப்​பிக்​கொண்ட ஒரு கேள்வியை அல்லது ஒரு யோசனையை மனதில் தக்கவைத்​துக்​கொண்டு, தேடுதலில் ஈடுபட்டு நிகழ்த்து​கின்ற முக்கியக் கண்டு​பிடிப்புகளை அங்கீகரிக்​கின்ற ஆராய்ச்சிப் பட்டமாக இது விளங்​கு​கிறது. மகத்தான இந்த இலக்கை நோக்கிய பயணத்தின் பொது வழிகளை மத்திய அரசு தற்போது மூடியிருக்​கிறது.

உலகிலேயே இல்லாத நடைமுறை:

  • ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்​வதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் தேவை. முதலாவது, தான் தேர்வுசெய்திருக்​கின்ற துறை சார்ந்து ஏற்கெனவே இருக்​கக்​கூடிய அறிவின் மீது காத்திரமான விமர்​சனத்தை வைக்க வேண்டும். அதற்கு விமர்​சனபூர்​வமான, காரண-​காரிய அடிப்​படையிலான அணுகு​முறை​யும், எதையும் கேள்விக்கு உள்படுத்து​கின்ற அறிவியல் மனப்பான்​மையும் அவசியம். இரண்டாவது, படைப்​பாக்கம். அதாவது - ஏற்கெனவே இருக்​கின்ற விஷயங்​களைக் கடந்து சென்று புதிதாக ஒன்றைக் கண்டு​பிடிக்​கின்ற படைப்​பாற்றல் என்கிற அசலான தன்மை. மூன்றாவது, இவற்றை மிகத் தெளிவாக ஒன்றிணைக்​கக்​கூடிய கட்டமைப்பு மனநிலை.
  • ஆனால், மத்திய அரசு இவற்றைப் பற்றி எந்த விதத்​திலும் கவலைப்​பட​வில்லை என்று தெரிகிறது. அரசு வைத்திருக்​கின்ற இந்த நுழைவுத் தேர்வு என்பது நான்கில் ஒன்றைத் தேர்ந்​தெடுத்து எழுது என்னும் எம்.சி.க்யு. வகையைச் சேர்ந்த ஒருவருடைய மனப்பாட அறிவைப் பரிசோ​திக்கும் கேள்வித்​தாளாக உள்ளது. மிகவும் கீழ் நிலையிலான புரிதல் சார்ந்த தகுதித் தேர்வாக இது அமைந்​துள்ளது. இந்தத் தேர்வைப் பயன்படுத்தி, முனைவர் பட்ட ஆய்வுக்கு ஒருவரைத் தேர்வுசெய்வது உலகிலேயே இல்லாத நடைமுறை ஆகும்.
  • இந்த நுழைவுத்​தேர்வு மூலம் ஏற்படும் இன்னொரு கெடுதல், உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் சுயத்தை இழப்பது. கண்டு​பிடிப்பு உரிமங்​களைப் பெறுவதற்​கும், உலக அளவில் தங்களுடைய முனைவர் பட்ட ஆய்வு அறிக்கைகளைப் புகழ்​பெற்ற ஆய்விதழ்​களில் வெளியிடு​வதற்கும் இந்தியா​வினுடைய பிரம்​மாண்ட கல்வி நிறுவனங்கள் ஐஐடி-க்கள் இடையே ஓர் ஆரோக்​கியமான போட்டி நிலவு​கிறது. ஒரு குறிப்​பிட்ட பல்கலைக்​கழகத்தில் இயற்பியல் துறையினுடைய முனைவர் பட்ட ஆய்வுகள் தலைசிறந்தவை என்றால், வேதியியல் முனைவர் பட்ட ஆய்வு​களுக்​காகப் பெயர்​பெற்ற பல்கலைக்​கழகங்கள் உண்டு.
  • ‘நானோ’ தொழில்​நுட்பம் உள்பட ஒவ்வொரு துறைக்கும் என்று தனித்​திறன் வாய்ந்த பெயர்​பெற்ற ஆராய்ச்​சிக்​கூடங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. இந்தப் பல்கலைக்​கழகங்கள் / ஆராய்ச்​சிக்​கூடங்​களின் தனித்துவம் தற்போது தகர்க்​கப்​பட்​டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள விரும்பும் ஒருவர், முதுகலைப் பட்டம் முடித்த கையோடு பயிற்சி வகுப்பு​களுக்குச் சென்று, லட்சக்​கணக்கில் செலவு செய்தாக வேண்டும் என்கிற அவலநிலையும் உருவாகி​யிருக்​கிறது.
  • முனைவர் பட்ட ஆய்வு​களில் டென்மார்க் தலைசிறந்தது. இந்த நாடுதான் சமீபகாலமாக ஏராளமான நோபல் பரிசுகளை வாங்கிக் குவித்​துக்​கொண்​டிருக்​கிறது. இங்கு ஒருவர் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றால், கோபன்​ஹேகன் பல்கலைக்​கழகம் 3 5 என்னுமொரு கல்வித் திட்டத்தை வைத்துள்ளது. சாதாரண பட்டப்​படிப்பு முடித்த கையோடு, முதுகலைப் பட்டத்தோடு முனைவர் பட்டமும் இணைந்து கற்கின்ற எளிய முறைகளை டென்மார்க் பல்கலைக்​கழகங்கள் அறிமுகம் செய்துள்ளன.
  • நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வுக்கு விண்ணப்​பிக்க வேண்டும் என்றால், அவர் ஒரு தலைப்பின் கீழ் தேடுதலை மேற்கொண்டு அதைப் பற்றிய ஆய்வறிக்கையைச் சமர்ப்​பிக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக இருக்​கப்​போவதாக ஒரு பல்கலைக்​கழகப் பேராசிரியர் கடிதம் கொடுத்தால் போதுமானது. ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரை போதும். உலகத்தின் எந்த மூலையில் உள்ள ஆய்வகத்​திலும் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொள்ள அவருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கப்​படு​கிறது.
  • அமெரிக்​கா​விலும் இங்கிலாந்​திலும் பல்கலைக்​கழகங்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கான தேர்வுக் குழுக்​களைத் தனித்​தனியே கொண்டுள்ளன. நேர்காணல் முறையிலும், துறைசார் வல்லுநர்​களுடனான கலந்துரை​யாடல் மூலமும் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்​படு​கிறார்கள். மேற்குறிப்​பிட்ட அனைத்து நாடுகளிலுமே ஒருவர் முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்​வதற்கு முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.
  • ஃபின்​லாந்து, சுவிட்​சர்​லாந்து ஆகிய நாடுகளில் முதலில் ஆராய்ச்சி மாணவராக இணைந்​து​கொண்டு, ஓரளவு ஆராய்ச்சியை முடித்து முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் முதுகலைப் பட்டம் படித்​துக்​கொள்ள வசதிகள் உண்டு; முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள எந்தக் கட்டணமும் கிடையாது.

பகுதி நேர ஆய்வுக்கு முற்றுப்புள்ளி:

  • ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்​பித்​தலில் பிற நாடுகளைவிட இந்தியா பின்தங்கி​யிருக்​கிறது. உலக அளவிலான ஆய்விதழ்​களில் நம் இன்றைய ஆராய்ச்​சி​யாளர்​களின் கட்டுரைகள் இடம்பெறுவது மிகவும் அபூர்​வ​மாகி​விட்டது. இன்றைய சூழலில், இந்தியாவில் பட்டப்​படிப்பை முடிக்கும் 100 மாணவர்​களில் 40 பேர்தான் முதுகலைப் பட்டம் படிக்கச் செல்கிறார்கள்.
  • அவர்களில் ஏழு பேர் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்து அதில் மூன்று பேர் மட்டுமே இறுதி​யாகப் பட்டம் பெறுகிறார்கள். கடந்த மூன்று ஆண்டு​களில், ஐஐடி-யில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் 50 சதவீதத்​துக்கும் அதிகமான மாணவர்கள் அதிகார வர்க்கம், துறை சார்ந்த அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக அதிலிருந்து வெளியேறிவரு​கிறார்கள். இந்த நிலையில், ஒருவர் பணி செய்து​கொண்டே பகுதி நேரமாக முனைவர் பட்டம் பெற முடியும் என்பதற்கான வழியையும் மத்திய அரசு தற்போது அடைத்து​விட்டது.
  • இதன் பின்விளைவுகள் மிக மோசமானவை. இந்தியாவைச் சேர்ந்த அறிவுசால் மாணவர் கூட்டம் முனைவர் பட்டம் மேற்கொள்​வதற்கு ஏற்கெனவே அயல் நாடுகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி​விட்டது. விளிம்பு நிலையில் உள்ள - ஆனால் அறிவில் சிறந்த மாணவர்களோ நுழைவுத்​தேர்​வுக்​காகச் செலவு செய்து பயிற்சி வகுப்பு​களுக்குப் போக முடியாது என்பதால் முனைவர் பட்டம் மேற்கொள்​வ​திலிருந்து பின்வாங்கத் தொடங்கி​விட்​டனர்.

அறிவுக்கு இல்லை எல்லை!

  • சி.வி.ராமன் கடல் கடந்து பயணம் செய்து​கொண்​டிருந்த​போது, கடல் ஏன் நீல நிறமாக உள்ளது என்கிற கேள்வி அவருக்குள் எழுந்தது. இந்தக் கேள்வியின் அடிப்​படையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, ராமன் விளைவைக் கண்டு​பிடித்து நோபல் பரிசு பெற்றார். ஒவ்வொரு வேதிப்​பொருளும் ஒரு நட்சத்​திரத்தில் எந்த அளவுக்கு இருக்க முடியும் என்கிற கேள்வியை அறிஞர் மேக்நாட் சாஹா எழுப்​பிக்​கொண்​டார்.
  • அதற்கான விடை தேடுகின்ற முனைப்பில் இறங்கி, அயனியாக்கச் சமன்பாட்டை வெளியிட்டு உலகின் கவனத்தைப் பெற்றார். இந்தியாவில் உற்பத்​தி​யாகும் கரும்பு ரகங்களில் இனிப்பு​மிக்கது எது என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்து புகழ்​பெற்றார் தாவரவியல் அறிஞர் ஜானகி அம்மாள். முனைவர் பட்ட ஆய்வு என்பது படித்து வாங்கும் பட்டமல்ல; புதிய கண்டு​பிடிப்பை நோக்கிய அர்ப்​பணிப்பு​மிக்க படைப்​பாக்கம் ஆகும். அறிவியல் வளர்ச்சியை நேசிக்கும் ஓர் அரசு, அறிவியல் ஆய்வு​களில் தேவையின்றித் தலையிடாது.
  • மக்கள்​தொகையில் 50%க்கும் அதிகமான இளைஞர்​களைக் கொண்ட நாடு இந்தியா. இப்படி ஓர் இளைய சக்தியை நம் நாடு கொண்டிருக்கும் சூழலில், அனைவரையும் கல்வியை நோக்கி ஈர்க்​கின்ற ஒன்றாக நம்முடைய செயல்​திட்​டங்கள் அமைய வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருப்​பவர்கள் இதை ஒருபோதும் மறந்து​விடக் கூடாது!

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்