TNPSC Thervupettagam

முன்களப் பணியாளரைக் காப்போம்

May 23 , 2021 1165 days 437 0
  • நம் நாட்டில் கரோனா தீநுண்மி இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கமும், சில மாநிலங்களில் இரவு நேர பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
  • இதுவரை நம் நாட்டில் 2,91,331 பேரின் உயிரைப் பறித்த கரோனா எனும் தீநுண்மிக்கு எதிராக மருத்துவ உலகம் அயராது போராடி வருகிறது.
  • கரோனாவுக்கு எதிரான போரில், மருத்துவத்துறையினரின் சேவை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதற்கு சற்றும் சளைத்ததல்ல காவல்துறையினரின் பங்களிப்பு.
  • கடந்த ஆண்டில் கரோனா முதல் அலையின்போது தேசிய அளவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதை சற்றும் பிசகாமல் நடைமுறைப்படுத்தியவர்கள் காவல்துறையினர்.
  • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பொது முடக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நின்றபோது அவர்களுக்கான உணவுப் பொருள்கள், போக்குவரத்து வசதி, மாநிலங்களுக்கு இடையிலான இ-பாஸ் உள்ளிட்ட சேவைகளை நிறைவேற்றிக் கொடுத்ததில் காவல்துறையினரின் பங்களிப்பு இன்றியமையாதது.
  • கரோனா காலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது மட்டுன்றி, சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்களையும் போலீஸார் கையாள நேர்ந்தது.
  • ஏனெனில், உலகமே நோய்த்தொற்று காலத்தில் இணையத்தில் முடங்கிய சூழலில், அதைப் பயன்படுத்தி ஒருசாரார் இணையவழி வர்த்தகம் என்ற பெயரில் பணமோசடியில் ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களையும் கண்டறிந்து கட்டுப்படுத்தியது காவல்துறை.
  • மேலும், சிறைச்சாலையிலும் கரோனா தீநுண்மி பரவியதால், உடனடியாக குற்றவாளிகளையும், விசாரணைக் கைதிகளையும் (அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றத்தின்கீழ் கைதானவர்கள்) பரோல் அல்லது விடுமுறையில் விடுவித்து, சிறைகளில் நெருக்கடியைக் குறைக்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவையும் காவல்துறையினர் திறம்பட செயல்படுத்தினர்.
  • கடந்த ஆண்டின் கரோனா சூழல் இவ்வாறு இருந்ததென்றால், நிகழாண்டில் நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்கிறது.
  • கடந்த வாரம் வரை நாட்டில் அன்றாடம் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்புக்குள்ளாகி, மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை என கடும் இன்னல்களை தேசம் சந்தித்து வருகிறது.
  • நிலைமையை சமாளிக்க, மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னமும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை.
  • வட மாநிலங்களில் கரோனா தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் உடலை முறைப்படி தகனம் செய்வதற்கு கூட இயலவில்லை. அந்த அளவுக்கு மயானங்களில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன. இவ்வாறான சூழலில் போலீஸார் மக்களின் ஆபத்பாந்தவனாக சேவையாற்றி வருகின்றனர்.
  • இன்றைக்கு கரோனாவுக்கான ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்கிவைத்து, சந்தையில் விலையேற்றத்துக்கு வழிவகுப்பவர்களை போலீஸார் கைது செய்வது அன்றாட நிகழ்வாகி விட்டது.
  • இதுபோன்ற சூழலில், பதுக்கல்காரர்களை கைது செய்யும் அதேவேளையில், போலீஸார் கண்ணுக்கு தெரியாமல் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
  • அதாவது கைது செய்யப்படும் நபருக்கு கரோனா தொற்று இருந்தால், அது போலீஸாருக்கும் எளிதில் பரவி பல்வேறு இடர்களுக்கு வழிகோலும். இதனால், போலீஸாரின் குடும்பத்தினரும் கரோனா தொற்றுக்குள்ளாக நேரிடுகிறது.
  • இதுமட்டுமின்றி மாஜிஸ்திரேட் முன் விசாரணை கைதியை ஆஜர்படுத்துவதற்கு முன்பாக அவரை தனிமைப்படுத்துவதும் அவசியம்.
  • இதற்காக போலீஸார் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
  • மேலும் கொலை, பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகளின்கீழ் தேடப்படும் குற்றவாளி அகப்படும்பட்சத்தில், அவரை கைது செய்வதைத் தள்ளிப்போட முடியாது.
  • தற்போது நடைமுறையில் உள்ள சிறை நெறிமுறைப்படி, குற்றவாளி "கரோனா இல்லை' சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அவருக்கு சிறைக்குள் அனுமதியளிக்கப்படுகிறது. இவ்வாறான சூழலில் போலீஸார் கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகிறது.
  • இந்தியாவில் மே 11-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 2,79,071 போலீஸார் கரோனா தொற்றுக்குள்ளானதாகவும், மத்திய ஆயுதப்படை போலீஸார் உள்பட 1,745 போலீஸார் கரோனாவுக்கு பலியானதாகவும் "இண்டியன் போலீஸ் பவுண்டேஷன்' தெரிவித்திருக்கிறது.
  • மேலும், கடந்த பிப்ரவரியில் தேசம் ஒரு கோடி கரோனா பாதிப்பை எதிர்கொண்டபோது, அதில் போலீஸாரின் எண்ணிக்கை 2,02,466 ஆக இருந்ததாகவும், 1,200 போலீஸார் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருந்ததாகவும் போலீஸ் பவுண்டேஷன் தகவல் தெரிவித்திருந்தது.

விரிவுபடுத்த வேண்டிய திட்டம்

  • நாட்டில் ரூ.1.70 லட்சம் கோடி கரோனா பொது நிவாரண நிதியின்கீழ், சுகாதாரப் பணியாளர்களின் நலன் கருதி, கரோனாவுக்கு எதிரான போரில் அவர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வகை செய்யும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டம் மூன்று மாத காலவரையறையுடன் கடந்த ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • பின்னர், கரோனா தொற்றுப் பரவல் தொடர்ந்ததன் காரணமாக இத்திட்டம் படிப்படியாக நீட்டிக்கப்பட்டு நிகழாண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி காலாவதியானது.
  • அதன்பின்னர், சுகாதாரப் பணியாளர்களுக்கு என பிரத்யேகமாக எந்தவித பாதுகாப்பும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
  • மேலும், நாட்டில் கரோனா பாதிப்பால் உயிர்நீத்த 736 மருத்துவர்களில் இதுவரை 287 பேரின் குடும்பத்தினருக்கு மட்டுமே இத்திட்டத்தின்கீழ், ரூ.50 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிதி சென்றடையவில்லை.
  • எனவே, இந்தக் காப்பீட்டு திட்டத்துக்கு மத்திய அரசு உடனடியாக புத்துயிரூட்டுவதோடு, சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி கரோனா போரில் முன்வரிசையில் நிற்கும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.

நன்றி: தினமணி  (23 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்