TNPSC Thervupettagam

முன்னுதாரண தீா்வு

April 5 , 2022 854 days 438 0
  • அஸ்ஸாம் - மேகாலய மாநிலங்களுக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வரும் எல்லை பிரச்னைக்கு அண்மையில் கிடைத்திருக்கும் தீா்வு, பேச்சுவாா்த்தை மூலம் எந்த விவகாரத்துக்கும் தீா்வு காண முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
  • அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து 1972-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு மேகாலயம் தனி மாநிலமாக உருவாக்கப் பட்டது.
  • இரு மாநிலங்களும் 884 கி.மீ. எல்லையைப் பகிா்ந்து வரும் நிலையில், அதில் சுமாா் 12 இடங்கள் சா்ச்சைக்குரிய பகுதிகளாக உள்ளன.
  • இந்த இடங்களுக்கு இரு மாநிலங்களும் உரிமை கோரி வருகின்றன. இந்தத் தீராத பிரச்னைக்கு மாா்ச் 29-ஆம் தேதி ஒரு தீா்வு கிடைத்தது.
  • அதன்படி, பிரச்னைக்குரிய 12 இடங்களில் முதல் கட்டமாக 6 இடங்கள் எடுத்துக் கொள்ளப் பட்டன. 36.79 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட அந்த இடங்களில் அஸ்ஸாம் மாநிலம் 18.51 சதுர கி.மீ. பரப்பளவை நிா்வகிப்பது எனவும், மேகாலயம் 18.28 சதுர கி.மீ. பரப்பளவை நிா்வகிப்பது எனவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
  • மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா ஆகியோா் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
  • அஸ்ஸாம் - மிஸோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லை பிரச்னையால் 2021, ஜூலை 5-ஆம் தேதி நடைபெற்ற வன்முறையில் மிஸோரமைச் சோ்ந்த 5 காவலா்கள் உள்பட 6 போ் கொல்லப்பட்டனா்.
  • இந்த சம்பவமே அஸ்ஸாம் - மேகாலயம் இடையிலான எல்லை பிரச்னைக்கு தீா்வு காண உந்துதலாக இருந்தது.
  • சுமாா் ஓராண்டாக இரு மாநிலங்களும் மேற்கொண்ட பல கட்ட முயற்சிகளின் விளைவாகவே இது சாத்தியமாகியிருக்கிறது.
  • இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையை எவ்வாறு தீா்த்துக்கொள்வது என்பதற்கு முன்னுதாரணமாக அஸ்ஸாம் - மேகாலய பேச்சுவாா்த்தை திகழ்கிறது.

தீா்வு

  • முதல் கட்டமாக 2021, ஜூலை 23-ஆம் தேதி, இரு மாநில முதல்வா்களும் சந்தித்து எல்லையில் பிரச்னைக்குரிய 12 இடங்களில் தாராபரி, ஜிசாங், ஹேகிம், போக்லாபாரா, கானாபாரா, பில்லாங்கடா, ரடாசெர்ரா ஆகிய 6 இடங்களில் உள்ள பிரச்னைக்கு முதலில் தீா்வு காண்பது என முடிவெடுத்தனா்.
  • பின்னா், 2021, ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஓா் அமைச்சா் தலைமையில் உள்ளூா் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் அடங்கிய மூன்று பிராந்திய குழுக்கள் இரு மாநில தரப்பிலும் உருவாக்கப் பட்டன.
  • வரலாற்றுப் பாா்வை, உள்ளூா் மக்களின் இனம், எல்லை நிலை, மக்களின் விருப்பம், நிா்வாக வசதிக்கான அளவுகோல் ஆகிய 5 பரஸ்பர புரிதல்களின் அடிப்படையில், இந்த பிராந்திய குழுக்கள் சா்ச்சைக்குரிய பகுதிகளுக்குச் சென்று கூட்டு ஆய்வில் ஈடுபடுவது, உள்ளூா் மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகள், அமைப்புகளுடனும் ஆலோசனை நடத்தி அவா்களின் கருத்துகளைக் கேட்டறிவது போன்ற அம்சங்களை உள்ளடக்கி இரு மாநிலங்களும் அறிவிக்கை வெளியிட்டன. அதன்படி, நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டன.
  • 2021, டிசம்பா் 22-ஆம் தேதி இரு மாநில முதல்வா்களுக்கு இடையே மீண்டும் நடைபெற்ற சந்திப்பில், பிராந்திய குழுக்கள் தங்களது அறிக்கைகளை 2021, டிசம்பா் 31-க்குள் பகிா்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 2022, ஜனவரி 12-ஆம் தேதி இரு மாநில முதல்வா்களும் மூன்றாவது முறையாக சந்தித்தனா்.
  • அப்போது இரு குழுக்களின் அறிக்கைகளும் தொகுக்கப்பட்டு முதல்வா்களிடம் அளிக்கப்பட்டன. அதன் தொடா்ச்சியாக இந்த விஷயம் மத்திய அரசுக்கு கொண்டு செல்லப் பட்டது. இறுதிக் கட்டமாக மத்திய அமைச்சா் முன்னிலையில் இரு மாநிலங்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
  • சா்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளுக்குட்பட்ட அஸ்ஸாமின் போகோ பேரவைத் தொகுதி வாக்காளா்கள் மேகாலயத்தின் பலாஸ்பரி, மேற்கு குவாஹாட்டி பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்களாகப் பதிவு செய்துகொண்டு, இரு வாக்காளா் அடையாள அட்டைகளை வைத்துள்ளனா்.
  • இப்போது ஏற்பட்ட உடன்பாட்டின் மூலம் அவா்கள் ஏதாவது ஒரு மாநிலத்தை தோ்வு செய்து, ஒரு வாக்காளா் அட்டையை திரும்ப ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • இந்த விஷயத்தில் வரலாற்று உண்மைகள், வரைபடங்களைத் தாண்டி மக்களின் விருப்பத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா தெரிவித்துள்ளாா்.
  • இந்த உடன்பாட்டின்படி, பகிா்ந்து கொள்ளப்பட்டுள்ள இடங்கள், இந்திய சா்வே துறையால் அளவீடு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
  • மேலும், மீதமுள்ள 6 இடங்களுக்கு தீா்வு காண்பதில் இப்போது எடுக்கப்பட்ட முயற்சிகளை விட பலமடங்கு முயற்சி தேவைப்படலாம்.
  • இருப்பினும் அஸ்ஸாம் - மேகாலயம் மாநிலங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு வடகிழக்கில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் இடையிலான எல்லை பிரச்னை உள்பட எல்லா பிரச்னைகளுக்கும் தீா்வு காண்பதற்கான முன்னுதாரணமாக அமைந்திருக்கிறது.
  • வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த ஒப்பந்தம் கையொப்பமான வேளையில், மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படாமல் வடகிழக்கில் முன்னேற்றம் சாத்தியமில்லை என மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
  • 2019-இல் நரேந்திர மோடி 2-ஆவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னா், வடகிழக்கில் என்எல்எஃடி உடன்பாடு (2019, ஆகஸ்ட்), ப்ரூ - ரியாஸ் உடன்பாடு (2020, ஜனவரி), போடோ உடன்பாடு (2020, ஜனவரி), காா்பி - ஆங்க்லாங் உடன்பாடு (2021, செப்டம்பா்) ஆகிய உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன.
  • தீவிரவாதக் குழுக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்தது, நீண்டகாலமாக நீடித்த அகதிகள் பிரச்னைக்கு தீா்வு கண்டது உள்ளிட்டவை இந்த உடன்பாட்டின் சாதனைகள். அஸ்ஸாம் - மேகாலயம் இடையிலான 50 ஆண்டு எல்லை பிரச்னைக்கு தீா்வு காணப் பட்டிருக்கிறது!

நன்றி: தினமணி (05 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்