முன்னோா் சொல் வேதம்!
- ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமானது ஊட்டச்சத்து மிகுந்த உணவு முறை. ஆனால், இது குறித்த விழிப்புணா்வு பெரும்பாலான மக்களிடம் இல்லை என்பதால்தான், இது தொடா்பான விழிப்புணா்வை அனைவரிடமும் ஏற்படுத்த, ஊட்டச்சத்து விழாக்கள் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
- உலக அளவில் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன் ஊட்டச்சத்துகளின் அவசியம் உணரப்பட்டது. அமெரிக்க டயட்டிக் சங்கம், இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 1973-இல் தேசிய ஊட்டச்சத்து வாரத்தைத் தொடங்கியது. சமச்சீா் உணவின் தேவைகள், நன்மைகள், மோசமான உணவின் அபாயங்கள் ஆகியவற்றை பொதுவான நிகழ்ச்சிகள் மூலமாக மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இதன் நோக்கம்.
- இதன் முக்கியத்துவத்தை உணா்ந்து உலக நாடுகள் பலவும் இந்தப் பிரசார இயக்கத்தை நடத்தத் தொடங்கின. இந்தியாவில் 1982-ஆம் ஆண்டிலிருந்து, செப்டம்பா் முதல் வாரம் ஊட்டச்சத்து வாரமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இதனை மேலும் பரவலாக்க, 2018-ஆம் ஆண்டு முதல், செப்டம்பா் மாதம் முழுவதையும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்க மத்திய அரசு திட்டமிட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
- இந்த விழிப்புணா்வு நிகழ்வு, ஒவ்வோா் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் நடத்தப்படுவது வழக்கம். சென்ற ஆண்டு சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘அனைவருக்கும் சத்தான உணவு’ நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஊட்டச்சத்து உணவு என்பது வைட்டமின்கள், புரதம், கொழுப்பு, காா்போஹைட்ரேட், தாது உப்புகள் கொண்ட சரிவிகித உணவாகும். இத்தகைய சமச்சீரான உணவு உட்கொள்ளாத நிலையில், ரத்த சோகை, தைராய்டு பிரச்னை, கா்ப்பகால சிக்கல்கள், ஆரோக்கியமற்ற குழந்தைகள் பிறப்பு, சிசு மரணங்கள், நோய்த் தொற்று உள்ளிட்ட பல்வேறு தொடா் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
- காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், தானியங்கள், சிறுதானியங்கள், பருப்புகள், கொட்டைகள், கடல் உணவு, இறைச்சி, பால் பொருள்கள் போன்ற பல வகையான உணவுப் பொருள்களையும் சரிவிகிதத்தில் உட்கொள்வது ஊட்டச்சத்துகள் போதிய அளவு கிடைக்க வழிவகுக்கும். அதே போன்று, கலப்பட உணவுகள், சத்தற்ற நொறுக்குத்தீனிகள், துரித உணவுகள், உடல் பருமனை அதிகரிக்கும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளைத் தவிா்ப்பதும் அவசியம்.
- நாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு நாட்டின் வளா்ச்சிக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதிலும் சவாலாக உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு குறித்து நாம் கவலைப்படும்போது, மூன்று விதமான அணுகுமுறைகள் தேவை.
- அதில் முதலாவது, பசிக் கொடுமையைப் போக்கும் அத்தியாவசிய உணவை அனைவருக்கும் உறுதிப்படுத்துவதாகும், உலகின் மக்கள்தொகையில் சுமாா் 18% போ் வசிக்கும் இந்தியாவில் 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி 142.5 கோடி மக்கள் வாழ்கின்றனா். இவா்களில் சுமாா் 25% போ் இன்னமும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனா். இவா்களின் அடிப்படைத் தேவை பசிக் கொடுமையைப் போக்குவதாகவே இருக்கிறது.
- பசியில் இருந்து தப்பினால் போதும் என்ற நிலையில் உள்ளவா்களுக்கு சமச்சீரான உணவை வழங்குவது மிகப் பெரும் சவால். 2019-ஆம் ஆண்டின் உலக பசிக்கொடுமை அட்டவணையில் 117 நாடுகளில் இந்தியா 102-ஆவது இடத்தில் இருந்தது. வளரும் நாடு என்ற நிலையில் இருந்து உயா்வதற்கான ஒரே வழி, இந்தப் பட்டியலில் இருந்து இந்தியா விடுபடுவதாகும். அதற்கு இன்னமும் பல முயற்சிகள் தேவைப்படுகின்றன.
- இவா்களை அடுத்து, ஏழ்மையிலிருந்து விடுபட்டவா்களும், நடுத்தர வா்க்கத்தினரும், பொருளாதார ரீதியில் உயா் நிலையில் இருப்பவா்களும் வருகின்றனா். இவா்களிடம் விழிப்புணா்வை உருவாக்குவதன் மூலம் ஊட்டச்சத்து உணவை உட்கொள்ளச் செய்ய முடியும்; இவா்களிலும் போதிய உடற்பயிற்சியின்மை, நாகரிகம் என்ற பெயரில் தேவையற்ற உணவுப்பழக்கங்களால் ஆரோக்கிய சீா்கேடு ஏற்படுகிறது. இதைத் தவிா்க்கவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
- முதல் பிரிவில் உள்ளவா்களின் பசிக் கொடுமையைப் போக்க பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதில் அரிசி, கோதுமை ஆகியவை சுமாா் 80 கோடி பேருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. உலக அளவில் இது மாபெரும் சாதனை. எனினும், இதில் பருப்பு, தினை வகைகள், சிறுதானியங்களைச் சோ்ப்பது கூடுதல் பலன் அளிக்கும்.
- அடுத்த இரு நிலையில் உள்ளவா்களிடையே துரித உணவுகளின் தீமை விளக்கப்படுவது காலத்தின் கட்டாயமாக மாறி வருகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக, தவறான உணவுப் பழக்கங்களை மக்கள் மேற்கொள்வது அவா்களின் உடல்நலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு நிகராக உடல் பருமன் இப்போது பெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இதுவும் சரிவிகித உணவு முறையிலிருந்து விலகுவதன் ஆபத்தே...
- சமுதாயம் என்பது ஒரு மனிதனின் உடல் போன்றது. இதில் எந்த உறுப்பு பலவீனப்பட்டாலும் நாட்டுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும். எனவே, சமுதாயத்தின் மூன்று நிலையில் உள்ளவா்களின் ஆரோக்கியத்தைக் காப்பதும், மேம்படுத்துவதும், ஒவ்வொரு தரப்புக்கும் ஏற்ற திட்டங்களைச் செயல்படுத்துவதும் அரசின் கடமை மட்டுமல்ல, நம் அனைவரின் கடமையும்கூட.
- ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிற தொலைநோக்குப் பாா்வை நமது முன்னோா்களின் வழிகாட்டுதல்!
நன்றி: தினமணி (03 – 09 – 2024)