- உத்தரகண்ட் நிலச்சரிவால் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாள் நீண்டுநின்ற மீட்புப் போராட்டத்துக்குப் பிறகு, பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது வரலாற்று நிகழ்வு. ஒட்டுமொத்த இந்தியாவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டது என்பதைவிட, அவர்கள் மீட்கப்பட்டபோது 140 கோடி இந்தியர்களும் மட்டிலா மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர் என்றுதான் கூற வேண்டும்.
- மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிலான குழுவினர்களாகட்டும், உதவிக்கு வந்த சர்வதேச வல்லுநர்களாகட்டும், கடைசி நேரத்தில் உதவிக்கு வந்த "எலி வளை' சுரங்கத் தொழிலாளர்களாகட்டும், மீட்கப்படுவோம் என்கிற தன்னம்பிக்கையுடன் 17 நாள் காத்திருந்த தொழிலாளர்களாகட்டும் அனைவருமே நம்மை அண்ணாந்து பார்த்து வியக்க வைத்துவிட்டனர். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும், ஒருங்கிணைப்பும் இருந்தால் விதியையும் வெல்ல முடியும் என்று சாதித்துக் காட்டி இருக்கிறார்கள் அவர்கள்.
- 1989 நவம்பர் மாதம் மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச் நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கிய 220 பேர் மீட்கப்பட்ட நிகழ்வு; 2010 ஆகஸ்ட் மாதம் சிலி நாட்டில் கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் சிக்கிய 33 தொழிலாளர்களை 69 நாள்களுக்குப் பிறகு "நாஸா'வின் உதவியுடன் மீட்டது (14.10.2010 "தினமணி' ஆசிரியர் உரை); 2018 ஜூன் மாதம் வடக்கு தாய்லாந்தின் தாம் லுமாங் குகையில் மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 12 சிறுவர்கள் அடங்கிய கால்பந்தாட்டக் குழுவையும் பயிற்சியாளரையும் 17 நாள்களுக்குப் பிறகு மீட்டது (12.7.2018 "தினமணி' ஆசிரியர் உரை); கொலம்பியாவில் அமேசான் காடுகளில் விமான விபத்தில் சிக்கிய நான்கு குழந்தைகளை 40 நாள்களுக்குப் பிறகு தேடிப்பிடித்து மீட்டது ஆகியவற்றின் வரிசையில் இணைகிறது இப்போதைய உத்தரகண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு.
- தங்களுக்குப் பாதுகாப்பான மீட்பு நிகழும்வரை சற்றும் மனம் தளராமல் இருந்த அந்தத் தொழிலாளர்களுக்கும், அவர்களை மீட்பதை மட்டுமே குறிக்கோளாக செயல்பட்ட மீட்புக் குழுவினருக்கும் இருந்த முனைப்பும், உறுதியும், புரிதலும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. மத்திய - மாநில அரசுகள் போதுமான அளவில் முனைப்புக் காட்டவில்லை; தேவையான உபகரணங்கள் தரப்படவில்லை என்பன போன்ற பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மீட்புப் பணியின் தாமதத்துக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. விமர்சனங்கள் குறித்து சட்டை செய்யாமல், மீட்புப் பணியில் மட்டுமே குறியாக இருந்ததால்தான் இறுதி வெற்றியை அடைய முடிந்திருக்கிறது.
- ஒவ்வொரு முறை மத்திய - மாநில அமைச்சர்கள் மீட்புப் பணியை மேற்பார்வையிடச் சென்றபோதும், பணிகள் நிறுத்தப்பட்டன என்றும், சுரங்கத்துக்குள் அவர்கள் பார்வையிடச் சென்றபோது வெல்டிங் உள்ளிட்ட வேலைகள் தடைப்பட்டன என்றும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. ஒருவேளை, அதுபோல கவனச் சிதறலும், நாடு தழுவிய அளவில் பதற்றமும் ஏற்பட்டுவிடலாகாது என்பதால்தான் பிரதமர் நரேந்திர மோடி, சுரங்க மீட்புப் பணி நடக்கும்போது அங்கே செல்வதைத் தவிர்த்தார் என்று கருத இடமிருக்கிறது. அவரது அந்த முடிவு சரியானது என்று இப்போது தோன்றுகிறது.
- உத்தரகாசியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்த சில்க்யாரா சுரங்கப்பாதை குறித்து பல விமர்சனங்கள் ஆரம்பம் முதலே எழுந்தன. 2018 பிப்ரவரி மாதம் சில்க்யாரா வளைவு - பர்கோட் சுரங்கப்பாதைத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளில் இந்தச் சுரங்கப்பாதை முடிவடையும்போது யமுனோத்ரிக்கும், தராசு என்ற இடத்துக்குமான தூரம் 20 கி.மீ. குறையும். 8.5 மீட்டர் உயரமும், 4.5 கி.மீ. நீளமும் கொண்ட இந்த சுரங்கப்பாதை, ஆபத்தான முயற்சி என்பதில் ஐயமில்லை. ஏற்கெனவே இந்தப் பகுதியில் 2019-இல் இன்னொரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததால் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.
- இதையெல்லாம் தெரிந்தும், "கங்கோத்ரி - யமுனோத்ரி - பத்ரிநாத் - கேதார்நாத்' உள்ளடக்கிய "சார்தாம்' திட்டத்தை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவா மத்திய அரசு முன்னெடுக்கிறது என்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கேள்வி நியாயமானது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும், சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் சாதுர்யமாக எதிர்கொண்டு இந்தத் திட்டத்தில் முனைப்பு காட்டுவதற்கு உண்மையான காரணம் அதுவல்ல என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியாத தர்மசங்கடம் மத்திய அரசுக்கு இருக்கிறது.
- எப்போது வேண்டுமானாலும் சீனப் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் இருக்கிறது. பதற்றம் தொடரும் நிலையில், உடனடியாக நமது படைகளையும், தளவாடங்களையும் எல்லைக்கு எடுத்துச் செல்ல இத்தனை ஆண்டுகளாக நெடுஞ்சாலை அமைக்கப்படவில்லை. சீனா அமைத்திருக்கிறது. இந்தத் திட்டத்திற்கான அவசியம் அதுதான்.
- இதேபோல எத்தனை சுரங்க விபத்துக்களை சீனா எதிர்கொண்டது என்பது, கம்யூனிஸ சர்வாதிகார நாடாக இருப்பதால் வெளியில் தெரியாது. ஜனநாயக நாடு என்பதால் இந்தியாவில் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால், திட்டத்தை ஒரேயடியாக நிராகரிப்பது தவறு.
- அதே நேரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யாமல் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பது தவறு என்பதை அரசு உணர வேண்டும். "எலி வளை' தொழிலாளர்களின் தயவில் 41 உயிர்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற விபத்து மீண்டும் ஏற்படலாகாது!
நன்றி: தினமணி (01 – 12 – 2023)