TNPSC Thervupettagam

முருகன் அல்லது அழகு

August 23 , 2024 97 days 143 0

முருகன் அல்லது அழகு

  • முருகன் எவன்? முருகை​யுடையவன் முருகன். முருகு என்றால் என்ன? முருகு என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல். அப் பல பொருளுள் சிறப்​பாகக் குறிக்​கத்​‌தக்கன நான்கு. அவை மணம், இளமை, கடவுள்​தன்மை, அழகு என்பன. இந்நான்கு பொருளடங்கிய ஒரு சொல்‌லால் பண்டைத் தமிழ் மக்கள் முழு முதற்​பொருளை அழைத்தது வியக்​கத்​தக்கது.
  • இயற்கை மணமும், மாறா இளமையும் எல்லாப் பொருளையும் கடந்து ஒளிருந்​‌தன்​மை​யும், அழியா அழகும் இறைவனிடத்தில் இலங்‌குவது கண்டு, அப்பொருள்கள் முறையே உறைதற்கு இடம்‌பெற்றுள்ள முருகன் என்னுஞ் சொல்லை, அவ்விறைவனுக்குப் பழந்தமிழ் மக்கள் சூட்டியதன் திறமையை நோக்கும்போது அவர்களது கூர்ந்த மதி புலனாகிறது.
  • உலகத்தின் நானா பக்கங்​களிலும் வாழ்ந்து வரும் மக்கள் தங்கள் தங்கள் அறிவாற்​றலுக்கேற்றவாறு, தங்கள் தங்கள் மொழியில் கடவுளுக்குப் பலதிறப் பெயர்கள் சூட்டி​யிருக்​கிறார்கள். அப்பெயர்கள் ஒவ்வொன்​‌றினும் ஒவ்வொரு சிறப்புப் பொருள் விளங்​கு​கிறது, சிலவற்றில் பொருத்​தமில்லாப் பொருள்​களும் உண்டு. முருகன் என்னுஞ் சொல்லிலோ அறிஞர் போற்றும் பொருள்களே மிளிர்​கின்றன; ஆதலால், அறிஞர் போற்றற்​‌குரியதும், மகழ்ச்​சி​யூட்​டக்​கூடியதும், பொருத்​த​முடையதுமாக இருப்பது முருகன் என்னும் திருப்​‌பெயர்.
  • முருகன் ஒரு கூட்டத்​தவர்க்​குரிய கடவுள் என்று கருதுவது அறிவுடைமை​யா​காது. எக்கூட்​டத்தவர் எம்‌மொழியால் போற்றும் எப்பொருளா​யினும், அப்பொருட்கண் இறை இயல்புகள் காணப்​பெறின், அதைக் கோடலே அறிவுடைமை​யாகும். இயற்கை மணமும், மாறா இளமையும், கடவுள்​தன்​மை​யும், அழியா அழகும் அறிவிற் சிறந்த எச்சமயத்​தவருங்​கொள்ளும் ஆண்டவனுக்குரிய இயல்பு​களாம்.
  • இவ்வியல்​புகள் அமைந்த ஒன்றைத் தமிழ் மக்கள் முருகன் என்று வாழ்த்து​கிறார்கள். ஏனைய மொழியினரும் அவ்வியல்​பு​களின் பொருள் நல்க வல்ல தமது மொழியால், தாம் வழிபடும் இறைவனுக்குப் பல பெயரிட்​டழைக்​‌கலாம். அப்பெயர்ப் பொருளை ஆராய்ந்து, தமிழில் பெயர்த்​தெழு​தினால் அது முருகாக விளங்​குதல் வேண்டும்.
  • தமிழ்ப் பெயராகிய முருகு எனுஞ் சொல் தனக்குரிய பொருண்மை அழியப் பெறாது, எம்‌மொழியில் வழங்கப்​பட்டால் என்ன? கடவுளை மணமுடைய​தாக​வும், இளமையுடைய​தாக​வும், இறைமை​உடைய​தாக​வும், அழகுடைய​தாகவும் எவர் எம்மொழிப் பெயரால் தொழினும், ஆண்டு எம்பெருமான் முருகன் எழுந்​தருள்வான் என்க. மணமும் இளமையும் கடவுள்​தன்​மையும் அழகும் எவருடைமை? இவை எல்லார்க்கும் உரிய உடைமையல்லவோ?
  • ஆதலால் மணமுடைமை, இளமையுடைமை, கடவுள்​தன்​மை​யுடைமை, அழகுடைமை ஆகிய இவைகளைப் போற்ற மறுப்போர் முருகனைப் போற்ற மறுப்​போராவர். மணமுடைமை முதலிய நான்கினையும் போற்ற மறுப்போர் இரும்பு நெஞ்சமும் வன்கண்​மையும் உடைய முரடராய் இருப்பர். அன்னார் நெஞ்சில் முருகு அலர்‌தலும் அரிது.

இயற்கையும் முருகனும்:

  • புராண முருகன் என்றும் இயற்கை முருகன் என்றும் முருகனைப் பலபடக் கூறினால், முருகனை எப்படி எங்கே எம்முறையில் வழிபடுவது எனும் ஐயம்‌ சிலர்க்கு நிகழலாம். புராணத்திற் சொல்லப்​படும் முருகன், இயற்கை முருகனின் இயல்புகளை வடிவ மாத்திரையான் அறிவிக்கும் முருகன்.
  • புராணத்திற் சொல்லப்​படும் முருகனின் உருவினை முறையாக வழிபட வழிபட இயற்கை வடிவா​யுள்ள முருகன் காட்சி​யளிப்பன். ஓர் எல்லைக்கு உட்பட்ட உருவமே முருகன் என்னும் உணர்வோடு வழிபாடு செய்வோர் இயற்கையின் அழகு தெரியாதவ​ராய், முருகன் இயல்பை உணராதவராய் வாழ்‌வாராவர்.
  • ‘எங்கும் நிறைந்த அழகுப்​பொருளை இவ்வுருவாக வழிபடுகிறேன்’ என்னும் எண்ணம் வழிபடுவோன் உள்ளத்தில் பதிந்து கடத்தல் வேண்டும். ‘எங்கும் நிறைந்த அழகுப் பொருளே முருகன்’ என்று அறிவு கூறினாலும், வடிவத்தை நினைந்து நினைந்து பழகியுள்ள நெஞ்சில் அப்பொருள் அடங்கு​வ​தில்லை.
  • ஒன்றையும் பற்றி நில்லாது அலையும் நெஞ்சை ஒன்றில் பொருத்தி நிறுத்தும் ஆற்றல் உருவ வழிபாட்​டிற்கு உண்டு; உருவம் முருக​னியல்பை உணர்த்து​வ​தா​யிருத்தல் வேண்டு​மென்பதை மட்டும் மறத்தலா​காது.
  • பொறாமை, பூசல், சீற்றம் முதலிய திரைகளை​யெழுப்பி, இடர்ப்​படும் மனத்தை ஒன்று​படுத்​துதற்கு உருவவழிபாடு உறுகரு​வியாய் நிற்பது. ஆனால், ஓர் எல்லைக்கு உட்பட்ட உருவமே எல்லாம் என்று கொள்வார் குறுகிய அறிவுடையோரே ஆவர். அன்னார் அவ்வுருவ​மில்லா மற்ற இடங்களில் பழிபாவங்​களைச் செய்யினும் செய்வர். என்னை? அவர்க்கு ஏனைய இடங்களில் முருகன் இல்லை என்னும் உணர்‌வுண்​மையான் என்க.
  • ‘முருகன் இயற்கை வடிவாய் யாண்டுமிருப்​பவன்’ என்னும் உணர்வோடு செய்யப்​படும் உருவ வழிபாடு நாளடைவில் மனக்கோட்டை அழித்து, இயற்கை​யிலுள்ள முருகைப் புலப்​படுத்​தாமற் போகாது.
  • இப்பு​லப்பாடு அகப்புற வேற்றுமையைக் களைவதாகும். இந்நிலை கைவரப் பெற்றோர் இயற்கை மணமுடையராய், மாறா இளமையுடையராய், கடவுள் தன்மை​யுடையராய், அழியா அழகுடையராய்ப் பிறப்பு இறப்புத் துன்பமின்றி இன்பவாழ்வில் திளைத்​திருப்​பார்.
  • இயற்கை வழி முருகனை வழிபடு​வோர், கையால் கட்டப்​படுங் கட்டடங்கள் எவ்வளவு பெரியன ஆயினும், அவை கண்ணைக் கவரத்​தக்கன ஆயினும், அவற்றில் வாழ்தலா​காது. ஒருவேளை அவற்றில் வாழநேரின், பெரும்​பொழுது ஆண்டுக் கழியாதவாறு காத்துக்​கொள்ளல் வேண்டும்.
  • மீனுக்கு நீர் எத்தன்​மைத்தோ அத்தன்​மைத்து மக்களுக்குக் காற்று. காற்று மாசு கலவாத​தா​யிருத்தல் வேண்டும். தூயநறுங் காற்றை நகரங்​களில் பெறுதல் அரிது. நஞ்சு கலந்த காற்று உள்ளே நுழைந்​தால், மக்கள் வாழ்நாள் சுருங்​குமென்பது திண்ணம். தூயநறுங் காற்றை விரும்​புநர் காடு அடர்ந்த மலைவாழ்வை நாடிச் செல்வது நலம். மலைவாழ்வு மக்களை எவ்வாறு ஓம்பி வரும் என்பதைப் பற்றி ஈண்டு விரித்துக் கூற வேண்டு​வ​தில்லை.
  • மலைக்கண் வாழ்ந்து, மலைநிலக் கடவுளென்று சொல்லப்​படும் இயற்கை முருகனை வழிபடுதல், இயற்கையோடு இயைந்து வாழ்வு நடாத்து​வ​தாகும். மலையில் முறைப்படி வாழ்வு நடாத்துவோன் முருகைக் காணும் பேறு பெறுவன் என்பது உறுதி, மலையில் ஓடும் அருவி நீராடி, காலையில் செங்கதிர் பரப்பி எழும் இளஞாயிற்று ஒளியில் மூழ்கி, தூயநறுங் காற்றில் படிந்து, உதிர் சருகு கனிகள் உண்டு, மயில், குயில், மான், ஆன் (மாட்டு) இனங்களைக் கண்டு மகிழ்ந்து, ஒருத்​தியோடு வாழ்ந்து, முருகனை வழிபட்டு​வரும் ஒருவன்​மாட்டு எம்பெரு​மானது இயற்கை மணமும், மாறா இளமையும், கடவுள்​தன்​மை​யும், அழியா அழகும் மலர்ந்து, அவனுக்குப் பெருவாழ்வு நல்கும்.
  • இயற்கை வாழ்வை நேர்பட நடாத்துவோன் கடவுள் ஆணையெனும் நியதிக்கு மாறுபடாது வாழும் இயற்கை மகன் ஆகிறான். இயற்கை வடிவாய முருகனை இயற்கைவழி வழிபடும் ஒருவன் எவ்வியற்கை வடிவிற்கும் தீங்கு செய்ய நெஞ்சிலும் நினையான். இயற்கையழகின் நுட்பம் உணர்ந்த அன்னான், அழகுவடிவம் தாங்கித் துள்ளியோடும் மான் கன்றின்மீது அம்பு எய்ய ஒருப்​படுவனோ? பசிய மரத்தில் முருகன் அழகை மலராகப் புலப்​படுத்தும் பூக்களைக் கூரிய நகத்தால் கிள்ளத் துணிவனோ? இயற்கை இசைப்​பாட்டைக் கூறுபடுத்த அவன் உள்ளம் இசையுமோ?
  • இயற்கை, இறைவன் வடிவாதலால், அதைத் தெய்வப் புலவர் பாடிப்பாடி மகிழ்வர். இவ்வுண்மை தெரியாதார் வெறும் பாழை வெற்றுரையால் கூறுவர். இறைவன் வடிவாய இயற்கையைச் சிதைப்பது இறைவனைச் சிதைப்​‌ப​தாகும். ஆதலால், ‘இயற்​கைவழி முருகனை வழிபடல்’ என்பதனை, எவ்வு​யிர்க்கும் எக்காரணம் பற்றியும் தீங்கு செய்யாமை என்று சுருங்கக் கூறலாம்.
  • இயற்கை வனப்‌பை​யும், அதனால் விளையும் இன்பத்​தையும் முறையே உணர்ந்து நுகர்​வோர், எவ்வியற்கை வடிவிற்குத் தீங்கு செய்ய உடன்படுவர்? தீங்கு நினைவு தோன்றும் உள்ளத்தில் இயற்கை வனப்பு உணர்வாதல், இயற்கை இன்ப நுகர்ச்​சி​யாதல் உறுதல் அரிது. இயற்கை வனப்பு உணர்வும், அதனால் இயற்கை இன்ப நுகர்ச்​சியும் ஊறும் உள்ளத்​தில், என்றும் அன்பு அலர்ந்து அருள்தேன் சுரந்​து​கொண்​டே​யிருக்​கும். இவ்வுள்​ளத்தார் என்றும் இளையராய், அழகுடையராய் வாழ்வர்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்