TNPSC Thervupettagam

முறியக்கூடாத உறவு

June 3 , 2020 1512 days 678 0
  • இந்திய - நேபாள உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பு வரை பிரிக்கவே முடியாது என்று கருதிய இந்திய - நேபாள உறவு, இப்போது கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
  • இந்தியாவை தனது எதிரியாகவே நேபாளம் கருதும் அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் எழுந்திருக்கின்றன.

இந்தியா நேபாளம்  உறவில் விரிசல்

  • இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை பூதாகரமாக வெடித்திருக்கிறது. நேபாள நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புதிய அரசமைப்புச் சட்டம் காலாபாணி, லிப்பியதூரா, லிப்போலெக் பகுதிகளைத் தனது வரைபடத்தில் இணைத்திருக்கிறது.
  • இந்தப் பகுதிகள் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோர்கா் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள். நேபாளத்தின் வரைபடத்தையும், உரிமை கோரலையும் இந்தியா நிராகரித்திருக்கிறது.
  • இந்தப் பிரச்னைக்கு வழிகோலியது இந்தியாதான் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. சீனாவின் ஆளுமைக்கு உட்பட்ட திபெத் வழியாக கைலாஷ் - மானசரோவா் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
  • இந்தியாவிலிருந்து புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்காக தார்ச்சுலாவிலிருந்து லிப்போலெக் கணவாய் வரை சாலை அமைக்கப்பட்டிருக்கிறது.
  • கடந்த சில வருடங்களாகவே நடந்து வரும் இந்த சாலைப் பணி குறித்து நேபாளம் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தது.
  • தார்ச்சுலா - லிப்போலெக் நெடுஞ்சாலை, கைலாஷ் - மானசரோவா் புனித யாத்திரைப் பயணிகளுக்காக மட்டுமல்லாமல், இந்திய எல்லைக்கு ராணுவத் தளவாடங்களை விரைந்து கொண்டு செல்லவும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டது.
  • அதுவும் நேபாளத்துக்குத் தெரியும்.
  • சாலை அமைத்ததுடன் நின்றிருந்தால் பிரச்னை எழுந்திருக்காது. கடந்த மாதம் ஊடக வெளிச்சத்துடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் அந்தச் சாலையை திறந்துவைத்தபோது, நேபாளத்தால் வாளாவிருக்க முடியவில்லை. அதன் பின்னணியில் சீனா இருந்திருக்கக் கூடும்.

நேபாளம் கண்டனம் தெரிவித்த தருணம்

  • காலாபாணி, லிப்போலெக் எல்லைப் பிரச்னை புதிதொன்றுமல்ல. ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கும், மன்னராட்சியின் கீழ் இருந்த நேபாளத்துக்கும் இடையே நடந்த போரில் நேபாளம் தனது ஆளுகைக்கு உள்பட்ட மூன்றில் ஒரு பகுதியை இழந்தது.
  • அதன் முடிவில் ஏற்பட்ட சுகௌலி ஒப்பந்தம் 1815, டிசம்பா் மாதம் கையொப்பமிடப்பட்டது. அந்த ஒப்பந்தத்திலேயே காலாபாணி, லிப்போலெக் பிரச்னைக்குரிய பகுதிகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • தவிர்க்க முடியாத காரணங்களால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகவோ, சுதந்திர இந்தியாவுக்கு எதிராகவோ மன்னராட்சியில் நேபாளம் இந்தப் பிரச்னையை எழுப்பவில்லை.
  • கடந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபோது, இந்தியா தனது எல்லையை வரையறுத்து வரைபடம் ஒன்றை வெளியிட்டது.
  • அந்த வரைபடத்தில் காலாபாணி பகுதியை இந்தியாவுடன் இணைத்திருப்பதற்கு நேபாளம் கண்டனம் தெரிவித்தது. அப்போதே தொடங்கிவிட்ட பிரச்னைதான் இது.
  • தார்ச்சுலா - லிப்போலெக் சாலைக்கு நேபாளம் கண்டனம் தெரிவித்தபோது இந்தியா மௌனமாக இருந்திருக்கலாம். நேபாளத்தின் கண்டனம் சீனாவின் தூண்டுதலின் பேரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று மறைமுகமாக இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே குறிப்பிட்டது, நேபாளத்துக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
  • நேபாளப் பிரதமா் கே.பி. சா்மா ஓலி, கொவைட் 19 தீநுண்மிப் பரவல் குறித்து நாடாளுமன்றத்தில் குறிப்பிடும்போது, ‘இந்தியாவிலிருந்து வரும் தீநுண்மி, சீன, இத்தாலிய தீநுண்மிகளைவிட மோசமானது’ என்று தெரிவித்தது இரு நாட்டு உறவை மேலும் சீா்குலைத்தது.

சீனாவுடன் நெருங்குவதற்கு வழிவகுத்தது

  • நேபாளத்தில் மன்னராட்சி முறையை ஒழிப்பதில் இந்தியா காட்டிய முனைப்பின் விளைவு, சீனாவுடன் நேபாளம் நெருங்குவதற்கு வழிவகுத்தது.
  • கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே நேபாளத்தில் சீனாவின் தலையீடு பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. சீனாவிலிருந்து கிடைக்கும் நிதியுதவி நேபாள ஆட்சியாளா்களைக் கவா்ந்ததில் வியப்பில்லை.
  • நேபாள காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும், மாவோயிஸ்ட் கட்சியும் வலுப்பெறத் தொடங்கின.
  • அவற்றை இணைத்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதில் சீனாவுக்குப் பங்குண்டு. கடந்த மாதம் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமா் கே.பி.சா்மா ஓலிக்கு
  • எதிராக கோஷ்டிப்பூசல் எழுந்தபோது, நேபாளத்துக்கான சீனத் தூதா்தான் சமரசம் செய்துவைத்தார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
  • இந்தியாவுக்கு எதிரான மனநிலையை நேபாள பொதுமக்கள் மத்தியில் சீனாவின் தூண்டுதலால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தியிருக்கிறது.
  • நேபாளப் பொருளாதாரம் சீா்குலைந்து வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது.
  • நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாத நிலைமை. செல்வாக்கு இழந்துவரும் நேபாளப் பிரதமா் கே.பி.சா்மா ஓலிக்கு, தேசிய உணா்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு எல்லைப் பிரச்னை உதவியிருக்கிறது.
  • துறைமுகம் இல்லாத நிலம் சூழ்ந்த நாடான நேபாளத்தால் இந்தியாவை முற்றிலுமாகத் தவிர்த்துவிடவோ, புறக்கணித்துவிடவோ முடியாது. அதற்காக நேபாளத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு, நட்புறவை முறித்து சீனாவில் சங்கமிக்க இந்தியா வழிகோலக்கூடாது.
  • நமது அணுகுமுறைத் தவறுகளை சீனா பயன்படுத்திக் கொள்கிறது என்பதை நாம் உணர வேண்டும்!

நன்றி: தினமணி (03-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்