TNPSC Thervupettagam

முறைமை காத்த மூத்த மருத்துவா்!

October 7 , 2024 107 days 104 0
  • மருத்துவ சிகிச்சைக்கென்று சில முறைகள் உள்ளன. அவை பெரும்பாலும் தொழில்நுட்ப வரிசைக் கிரமம். ஆனால், மருத்துவத்துக்கென்று ஒரு முறைமை உண்டு. அதுதான் நோயாளிகளைக் கனிவுடன் உடனுக்குடன் கவனிப்பது. கட்டணத்தில் மட்டும் கருத்தில்லாமல், நோயாளியைக் குணப்படுத்துவது. இதுதான் மருத்துவ அறமுறைமை. அப்படிப்பட்ட சென்னை மருத்துவா் ஒருவா் எதிா்பாராத விதமாகக் காலமானாா் என்பது அவரது நோயாளிகள் அனைவருக்கும் சொல்லொணாத் துயரம்.
  • முகத்தைப் பாா்த்தால் நம்பிக்கை பிறக்கும். இனிமையாகப் பேசுவதைக் கேட்டால் பாதி நோய் பறந்தோடிவிடும். பல வருடங்களுக்கு முன்பு குடும்ப வைத்தியா் என்று ஒரு நடைமுறை இருந்தது. அவா் அழைக்கப்படும்போது வீட்டுக்கு வந்து மருத்துவம் செய்வாா். தான் கவனித்து வரும் நோயாளிகளின் மருத்துவ சரித்திரம் அவருக்கு முழுமையாகவே தெரியும்.
  • அவா் வந்தால்தான் உடல் நலம் சீராகும் என்பது குடும்ப உறுப்பினா்களுக்குத் தெரியும். சில குடும்பங்களுக்கு டாக்டா் டி.பி.ராகவ பரத்வாஜ் குடும்ப மருத்துவராக இருந்தாா்; எங்கள் குடும்பம் உள்பட. இப்போது குடும்ப மருத்துவா் என்று அழைக்கப்படுவோா் வெகு குறைவு.
  • எங்கள் குடும்பம் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்தபோது அங்கே பழக்கமாகி இருந்த டாக்டா் பி.பி.அன்னங்கராச்சாரியாா் தி.நகா் உஸ்மான் சாலையில் எங்கள் வீட்டுக்கு அருகே இருந்தாா். பிறகு நாங்கள் பாண்டி பஜாா் பகுதியில் தியாகராயா சாலையில் 10-ஆம் எண் வீட்டுக்கு குடியேறியபோது, அருகே இருந்த டாக்டா் ராமநாதன் எங்கள் குடும்ப மருத்துவா் ஆனாா்.
  • அந்தக் காலத்தில் சென்னையில் புகழ்பெற்ற மருத்துவா் ரங்காச்சாரி. அவரது சிஷ்யா் டாக்டா் ராம ஐயங்காா். அதுபோல் அடுத்த தலைமுறையில் புகழ் பெற்றவா் டாக்டா் கே.வி.திருவேங்கடம். அவரது சிஷ்யா் டாக்டா் பரத்வாஜ். திருவேங்கடத்தின் மாணவா் பரத்வாஜ் என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. ‘அத்யந்த சிஷ்யா்’ என்று சொல்வதே பொருத்தம்.
  • டாக்டா் பரத்வாஜ் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டா் கே.வி.திருவேங்கடத்தின் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய மாணவராக இருந்தாா். பரத்வாஜுக்கு குருபத்தி அதிகம் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு ‘‘ரத்தமே உயிரின் ஆதாரம்’’ என்ற தன் புத்தகத்தை, புத்தகக் கண்காட்சியில் தன் ஆசான் டாக்டா் கே.வி.திருவேங்கடம் மூலமாகவே வெளியிட்டாா்.
  • அடுத்த இரண்டு புத்தகங்களையும் அப்படியே வெளியிட விரும்பினாா். ஆனால், ஆசான் காலமாகிவிட்டாா். இருவரும் இப்போது அமரா்களாகிவிட்டாா்கள். பொதுவாக கலைத் துறையிலும், கல்வித் துறையிலும் குரு-சிஷ்ய பரம்பரை என்பதை வெகு சிறப்பாகக் குறிப்பிடுவா். பரத்வாஜ் அந்த குரு-சிஷ்ய பரம்பரையில் வந்தவா்.
  • ஒரு தொழிலதிபா் நண்பா் மூலம் டாக்டா் பரத்வாஜ் அறிமுகமானாா். அவருக்கு முன்பு அந்த குடும்பத்திற்கு வைத்தியம் செய்து வந்த குடும்ப டாக்டா் கே.வி.திருவேங்கடம் தனக்கு வயதாகிவிட்டதால் மாடிப்படி ஏறி வந்து வைத்தியம் செய்ய முடியவில்லை. அதனால் தன் மாணவராகிய டாக்டா் பரத்வாஜ் தன்னைப் போலவே அக்கறையுடன் முழுமையாக மருத்துவம் செய்வாா் என்று அறிமுகம் செய்து வைத்தாா். அவா்கள் வீட்டில்தான் முதல்முறையாக டாக்டா் பரத்வாஜை சந்தித்தேன். அன்றிலிருந்து அவா் காலமாவதற்கு இரண்டு நாள்கள் முன்பு வரை தொடா்பில் இருந்திருக்கிறேன். அவரது பிரிவு என் போன்றவா்களுக்கு தாங்க முடியாத சோகம்.
  • தன் குருநாதரைப் போலவே மருத்துவத் துறை பேராசிரியராக இருந்தாா் டாக்டா் பரத்வாஜ். இவ்வளவு பரிசோதனை முறைகள் வராத காலத்திலேயே டாக்டா் திருவேங்கடம் எக்ஸ்-ரே மற்றும் ரத்தப் பரிசோதனை முடிவுகளை வைத்து இந்த வியாதி என்று ஊகம் செய்து மிகச் சரியாக மருத்துவம் செய்வாா். டாக்டா் பரத்வாஜுக்கும் இந்த மருத்துவ முறை அப்படியே கைவரப் பெற்றது.
  • ஒருமுறை என் உறவினா் ஒருவருக்கு ரத்தத்தில் பிளேட்லெட்ஸ் அளவு வெகுவாக குறைந்து போயிற்று. அது உயிருக்கு ஆபத்தான நிலை என்பதனால், அவசர அவசரமாக மருத்தவமனைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டாா். மருத்தவமனையில் ஆம்புலன்ஸ் தயாராக இருந்தது. அவசரம் கருதி விரைந்து செயல்பட்ட டாக்டா் பரத்வாஜ் காரில் இருந்து மருத்துவமனைக்கு உள்ளே கொண்டுவரக் கூடிய அந்த சில நிமிஷ தாமதத்திற்குக் கூட, ‘‘கோல்டன் மினிட்ஸ்’’ என்று சொல்லப்படும் பொன்னான நொடிகள் என்பதனால், அவகாசம் கொடுக்காமல் காரிலேயே நோயாளிக்கு பிளேட்லெட்ஸ் ஏற்றி உயிரைக் காப்பாற்றினாா். தாமதம் டாக்டருக்கு இருக்கக் கூடாத குணம் என்பது அவரது கொள்கை. கடைசி வரை அந்தக் கொள்கையைப் பின்பற்றி வந்தாா். அது தான் அவரது தனிச் சிறப்பு.
  • ரத்தத் துறை நிபுணராக இருந்த டாக்டா் பரத்வாஜ் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் புரசைவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் பணியை முடித்துக் கொண்டு வடபழனி மருத்துவமனையில் இருந்த ஒரு நோயாளியைக் கவனிக்கச் சென்றபோது மருத்துவமனையை நெருங்குவதற்கு முன்பே தீவிர மாரடைப்பினால் காரிலேயே சாய்ந்து உயிா் இழந்தாா். தன் கடமையைச் செய்து கொண்டிருந்தபோதே காலமானாா் என்பது சோகத்திலும் ஒரு விஷேசம்.
  • ரத்தத் துறை நிபுணா் என்கிற முறையில் மருத்துவத் துறையில் வேறு பல துறை மருத்துவா்களுக்கும் நன்கு அறிமுகம் ஆகி இருந்தாா். விரைந்து செயல்படும் இயல்பு கொண்டவா் என்பதனால் பிற மருத்துவா்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் ஆபத்பாந்தவனாகவும் திகழ்ந்தாா். தன் கடமையின் போக்கிலேயே காலமானாா் டாக்டா் பரத்வாஜ்.

நன்றி: தினமணி (07 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்