- உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் புல்ராய் கிராமத்தின் திறந்தவெளி மைதானத்தில் நடந்த ஆன்மிக நிகழ்வில் 121 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான "போலே பாபா' என்கிற ஆன்மிக குருவின் அருளுரை நிகழ்வில் நடந்திருக்கும் இந்த சம்பவம், ஒட்டுமொத்த தேசத்தையும் திடுக்கிட வைத்திருக்கிறது.
- லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் போலே பாபா. அவரது தரிசனத்துக்காகவும், அவரது ஆன்மிக உரையைக் கேட்பதற்காகவும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள். சூரஜ்பால் எனப்படும் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவுக்குக் கூடுபவர்கள் பெரும்பாலும் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பினர். இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுவது இது முதல்முறை அல்ல.
- மாலையில் சொற்பொழிவு நிகழ்ச்சி முடிந்த பிறகு பக்தர்கள் போலே பாபாவின் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணைச் சேகரிக்கவும் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலால் ஒருவர்மீது மற்றொருவர் விழுந்தனர். இதுதான் விபத்தின் பின்னணி.
- மத வழிபாட்டுத் தலங்களில், மத நிகழ்ச்சிகளில் இதுபோன்ற விபத்துகள் இந்தியாவில் நிகழ்வது புதிதல்ல. 2005-இல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மந்தர்தேவி கோயில் யாத்திரை (340 பேர்); 2008-இல் ஹிமாசல பிரதேசம் நைனா தேவி கோயில் நெரிசல் (162 பேர்); 2008-இல் ராஜஸ்தான் ஜோத்பூர் நகரிலுள்ள சாமுண்டா தேவி கோயில் வதந்தி நெரிசல் (250 பேர்); 2011-இல் கேரள மாநிலம் இடுக்கி சபரிமலை பக்தர்கள் ஜீப் மோதியதால் ஏற்பட்ட நெரிசல் (104 பேர்); மத்திய பிரதேசம் ரத்தன்கர் கோயில் நவராத்திரி விழா நெரிசல் (115 பேர்) என்று நீளமான பட்டியலே இருக்கிறது.
- இந்தியாவில் என்றில்லை உலக அளவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் ஆன்மிகத் தலங்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழத்தான் செய்கின்றன. மெக்கா - மதீனா புனித யாத்திரையின்போது ஹஜ் பயணிகள் பலமுறை நெரிசலைச் சந்தித்திருக்கிறார்கள். பல உயிரிழப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன. 1990 மெக்கா சுரங்க விபத்து (1,426 பேர்), மினா நெரிசல் விபத்து (2,400 பேர்) இரண்டும் மறக்கக் கூடியதா என்ன?
- புனிதத் தலங்களில் கூட்ட நெரிசலில் நடக்கும் விபத்துகளும் சரி, தனியார் நிகழ்ச்சிகளில் ஏற்படும் விபத்துகளும் சரி இரண்டுமே தவிர்த்திருக்கப்படக் கூடியவை. தொலைநோக்குப் பார்வையும் முறையான திட்டமிடலும், சரியான ஏற்பாடுகளும் இருந்திருந்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பில்லை.
- உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் விபத்து நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகத்தான் நடந்திருக்கிறது என்பதைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. எந்தவொரு நிகழ்ச்சியையும் காவல் துறையின் முன் அனுமதி பெறாமல் நடத்த முடியாது. எந்த அளவுக்குக் கூட்டம் கூடும் என்பதை நிகழ்ச்சி நடத்துபவர்கள் மட்டுமல்லாமல், அனுமதி வழங்கும் நிர்வாகமும் முன்கூட்டியே மதிப்பிடுவது அவசியம். கூட்டத்திற்குத் தகுந்த அளவில் நிகழ்ச்சி நடக்கும் அரங்கமோ, மைதானமோ இருக்கிறதா? உள்ளே நுழைவதற்கும் வெளியே செல்வதற்கும் போதுமான வாயில்கள் உள்ளனவா?
- என்பதை உறுதிப்படுத்துவது காவல் துறையின் கடமையும்கூட. ஹாத்ரஸ் நிகழ்ச்சியில் நிர்வாகம் அனுமதித்ததைவிட பலமடங்கு அதிகமாக பக்தர்கள் கூடிவிட்டனர் என்று இப்போது கூறப்படுகிறது. எந்தவொரு நிகழ்ச்சியிலும் எதிர்பார்ப்பைவிட கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கடமை, மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல் துறைக்கும் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
- உள்ளே நுழைவதற்கும், வெளியே போவதற்கும் போதுமான ஏற்பாடுகள் இருப்பது மட்டுமல்லாமல், அவசரகால சிகிச்சைக்கான மருத்துவப் பணியாளர்கள்; முதலுதவி முன்னேற்பாடுகள்; ஆம்புலன்ஸ்கள்; தீயணைப்புத் துறையினர் போன்றவற்றை உறுதிப்படுத்துவதும் நிர்வாகத்தின் கடமை. ஹாத்ரஸில் இவையெல்லாம் முறையாகச் செய்யப்பட்டிருந்தால், உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் கணிசமாக குறைத்திருக்க முடியும்.
- நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று ஆக்ரா சரகத்தின் கூடுதல் காவல் துறை இயக்குநர் தெரிவித்திருக்கிறார். உத்தர பிரதேச அரசு இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறது. விசாரணை ஆணையம் நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீதான தவறுகளையும், குறைபாடுகளையும் மட்டுமே விசாரிக்காமல், மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை ஆகியவற்றின் கவனக் குறைவுகளையும் ஆராயும் என்று எதிர்பார்ப்போம்.
- அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு காவல் துறை வழங்கும் முன்னுரிமையும், முக்கியத்துவமும் ஏனைய நிகழ்ச்சிகளுக்குத் தரப்படுவதில்லை. கோயில்களில் முக்கியமான பண்டிகைகளின்போது ஓரளவுக்கு முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. தனியார் நிகழ்ச்சிகள் என்று வரும்போது அரசு நிர்வாகம் அதில் போதிய கவனமும், ஆர்வமும் காட்டாமல் இருப்பது புதிதொன்றுமல்ல. ஹாத்ரஸில் நடந்திருப்பது இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.
- கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் நடந்திருக்கும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்த பட்டியலைப் பார்த்து ஆதங்கப்படுவதிலும், உயிரிழப்புக்களுக்காக வேதனைப்படுவதிலும் அர்த்தமில்லை. பொது இடங்களின் பாதுகாப்பு என்பதும், கூட்டத்தை முறைப்படுத்தும் மேலாண்மையும் இந்தியாவில் பேணப்படுவதில்லை.
- விபத்துகள் நிகழும்போது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், காவல் துறையினரும் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதும், மற்றவர்கள் மீது பழிபோடுவதும் வழக்கமாகிவிட்டன. இது மாறாதவரை, ஹாத்ரஸ் போன்ற நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி விழாது!
நன்றி: தினமணி (04 – 07 – 2024)