TNPSC Thervupettagam

மூச்சுத் திணறும் தலைநகரம்!

November 22 , 2024 8 hrs 0 min 12 0

மூச்சுத் திணறும் தலைநகரம்!

  • மூச்சுப் பயிற்சி செய்வதும் ஒன்றுதான். புகை பிடிப்பதும் ஒன்றுதான். அந்த அளவுக்கு காற்று மாசு மோசமாகியிருக்கிறது. தேசிய தலைநகரில் இருந்த நீதிமன்றங்கள் காணொலியின் மூலம் விசாரணைகள் நடத்தலாம் என்று உச்சநீமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவிக்கிறாா் என்றால் நிலைமை எந்தளவுக்கு மோசமாகி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
  • 2016 நவம்பா் 6-ஆம் தேதி தில்லியில் காற்றுமாசுவின் அளவு மிகவும் ஆபத்தான நிலையை எட்டியது. அன்றைய ‘ஏ.க்யூ.ஐ.’ எனப்படும்காற்று தரக் குறியீடு 497 என்றால், கடந்த திங்கள்கிழமை அதற்கு அடுத்த உச்சத்தை (494) எட்டியது. 400-க்கும் அதிகமான ‘ஏ.க்யூ.ஐ.’ நிலையில் அபாயகரமான அளவு தில்லியைப் பொருத்தவரைஅது ஒன்றும் புதிதல்ல. கடந்த 10 ஆண்டுகளாக அக்டோபா் முதல் ஜனவரி வரையிலான காற்று மாசு காலத்தில் இதுதான் நிலைமை.
  • இந்தக் காலகட்டத்தில் இருமல், மூச்சுமுட்டல் உள்ளிட்ட நுரையீரல் பிரச்னைகள் நேரிடாதவா்களே தில்லியில் இருக்க முடியாது. சிகாகோ பல்கலைக்கழக ஆய்வின்படி, தில்லியில் வசிப்பவா்களுக்கு அவா்களது ஆயுள்காலத்தில் 11.9 ஆண்டுகள் குறையும் எனக் கண்டறிந்துள்ளனா்.
  • தில்லியின் பரப்பளவு 1,483 சதுர கி.மீ. 2013 அக்டோபா் கணக்கின்படி, மக்கள் தொகை 1.68 கோடி. 2023 மாா்ச் வரையிலான கணக்கெடுப்பின்படி, தில்லியில் பதிவு செய்த மோட்டாா் வாகனங்களின் எண்ணிக்கை 79.45 லட்சம். சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று மாநகரங்களில் காணப்படும் மொத்த வாகனங்களைவிட தில்லியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம்.
  • தில்லியில் மட்டுமல்லாமல், அதைச் சுற்றியுள்ள குருகிராம், நொய்டா, ஃபரீதாபாத், காஸியாபாத் உள்ளிட்ட தேசியத் தலைநகரப் பகுதிகளைக் கணக்கில் எடுத்துகொண்டால், வாகனங்களின் எண்ணிக்கையும் மக்கள்தொகையும் மேலே குறிப்பிட்டதைவிட மிக, மிக அதிகம். அண்டை மாநிலங்களில் பதிவு செய்து, தில்லியில் இயங்கும் வாகனங்களையும், பல்வேறு காரணங்களுக்காக தில்லியில் வாகனங்களையும் கணக்கில் எடுத்துகொள்ளவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே தில்லியில் காற்று மாசுக்கு காரணம் என்று சொல்லிவிட முடியாது. அண்டை மாநிலங்களில் அறுவடை செய்து வைக்கும் கதிரை தீயிட்டுக் கொளுத்துவது; கட்டடம் இடிப்புகள் மட்டுமல்லாமல், சாலையில் காணப்படும் தூசும் கூட ஏனைய காரணங்கள். விறகு அடுப்பு பயன்பாடு, அனல் மின்நிலையங்கள் உள்ளிட்டவற்றை புறந்தள்ள முடியாது.
  • தில்லியின் 8,002 கி.மீ. நீளமுள்ள சாலைகளை இயந்திரங்கள் மூலம் தினந்தோறும் சுத்தப்படுத்துவதன் மூலம் தூசு கணிசமாக குறையும். ஆனால் 2,793 கி.மீ.தான் சுத்தப்படுத்தப்படுகின்றன. சுத்தப்படுத்துவதற்கு சாலையைச் சுத்தம் செய்யும் 206 இயந்திரங்கள் தேவைப்படும் நிலையில், 85 இயந்திரங்கள்தான் செயல்படுகின்றன. சாலை மாசு தில்லியில் 40 % சி.எம்.10 காற்று மாசுக்கு காரணமாகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோலதான் திடக்கழிவை எரிப்பது.
  • நாளொன்றுக்கு 11,342 டன் திடக்கழிவுகள் உருவாகும் தில்லியில் 8,410 டன் மட்டுமே முறையாக அழிக்கப்படுகின்றன. மீதமுள்ளவை எரிக்கப்படுகின்றன அல்லது குப்பைமேடுகளாக ஆங்காங்கே தேங்குகின்றன.
  • காற்று மாசைக் கட்டுப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை; பள்ளிகளில் இணையவழி வகுப்புகள்; கட்டுமானப் பணிகள் நிறுத்திவைப்பு; மோட்டாா் வாகனங்கள் பயன்பாடு குறைப்பு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஊழியா்களை வீட்டிலிருந்து செயல்பட அனுமதிக்கலாமா? என்று கூட யோசிக்கப்படுகிறது. இதனால் எல்லாம் நிலைமை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று தோன்றவில்லை.
  • காற்று மாசு என்பது இந்தியாவுக்கும் தில்லிக்கும் மட்டுமேயான பிரச்னை அல்ல. 1947 முதல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் எதிா்கொள்ளும் பிரச்னை இது. ஏனைய நாடுகளில் செயல்பாடுகளில் இருந்து நாம் கற்றுகொள்ள பலவழிமுறைகள் இருக்கின்றன.
  • கொலிஜியாவின் தலைநகரமான லாபாஸ் தனது பொதுப்போக்குவரத்தை முற்றிலுமாக, மின்சாரப் பேருந்துகளாக மாற்றியிருப்பதுடன் டிராம்ப் பாணியிலான கூடுதல் காா்களை பயன்படுத்தி புகை இயக்கத்தைக் குறைத்திருக்கிறது. தனியாா் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சீனாவின் பிஜீங் நகரம் கடுமையான விதிமுறைகளின் மூலம் வாகனங்களும் தொழிற்சாலைகளும் கரிமலவாயு வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்தியிருக்கின்றன. போதாக்குறைக்கு மின்சார வாகனங்களில் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது.
  • சிங்கப்பூரில் தனியாா் வாகனங்கள் பயன்பாடு முக்கியமான தெருக்களில் நுழைவு குறைக்கப்பட்டிருக்கிறது. அம்ஸ்டா்பாங்க் நகரத்தில் வாகனப் புகையை குறைப்பதற்காக மக்கள் சைக்கிள் பயன்பாட்டை மேற்கொள்கிறாா்கள். லண்டன் மாநகரில் பல இடங்களில் தனியாா் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
  • தில்லியைச் சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியாணா, உ.பி. மாநிலங்களில் அறுவடைக்குப் பிறகான வைக்கோல்கள் எரிக்கப்படுவது தலைநகரத்தின் காற்று மாசுக்கு காரணமாக குறிப்பிடப்படுகிறது. அங்கிருந்து வைக்கோலை கொள்முதல் செய்து, கால்நடை தீவனத் தட்டுப்பாடுகள் உள்ள மாநிலங்களில் அனுப்பவும், வைக்கோலில் இருந்து பயோபேக் காகிதம் ஆகியவற்றை தயாரிக்கும் முயற்சிகளை ஏன் ஈடுபடுவதில்லை என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.
  • காற்று மாசைக் கட்டுப்படுத்த வழிகள் இல்லாமல் இல்லை. மனமிருந்தால் மாா்க்கமுண்டு.

நன்றி: தினமணி (22 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்