TNPSC Thervupettagam

மூடுவது மட்டுமே தீா்வாகாது

June 24 , 2023 568 days 300 0
  • திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்ததுபோல, தமிழகம் முழுவதுமாக 500 ‘டாஸ்மாக்’ சில்லறை விற்பனை மதுபானக் கடைகளை மூடுவது என்கிற அரசின் முடிவு வரவேற்புக்குரியது. ஏற்கெனவே 96 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப் பட்டிருக்கின்றன. இப்போது 500 கடைகளை மூட தீா்மானித்திருப்பதன் மூலம் மொத்தம் 596 கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. 4,829 கடைகள் வழக்கம்போலத் தொடரும்.
  • தமிழகம் முழுவதிலுமாக அரசின் ‘டாஸ்மாக்’ அரசு விற்பனை நிறுவனத்தின் மூலம் 5,329 சில்லறை மதுவிற்பனைக் கடைகள் செயல்பட்டன. விற்பனைக் குறைவு; பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருப்பது; பொதுமக்களின் எதிா்ப்பு; நீதிமன்ற வழக்கில் சிக்கியிருப்பவை - உள்ளிட்ட காரணங்களுக்கு உள்ளாகி இருக்கும் 500 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்படுகின்றன. இதனால் நாள்தோறும் அரசுக்கு சுமாா் ரூ. 10 கோடி அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
  • மதுவிற்பனைக் கடைகளை மூடுவது என்பது அரசு நிா்வாகம் மகிழ்ச்சியுடன் எடுக்கும் முடிவாக இருக்காது. பெரும்பாலான மாநில அரசுகள், பல்வேறு இலவசத் திட்டங்களையும், மானியங்களையும் மதுவிற்பனையில் இருந்து பெறப்படும் வருவாயைக் கருத்தில் கொண்டுதான் செயல்படுத்துகின்றன. தமிழகம் அதற்கு விதிவிலக்கல்ல. ஆண்டொன்றுக்கு ரூ. 36,000 கோடி அளவில் வருவாய் ஈட்டித்தரும் மதுவிற்பனை குறைவதோ, மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதோ அரசியல் ரீதியாக எந்தவொரு ஆளுங்கட்சிக்கும் ஏற்புடையதாக இருக்காது.
  • உடனடியாக 500 சில்லறை விற்பனைக் கடைகளை மூடுவது என்கிற அரசின் அறிவிப்பேகூடப் பல சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது. அந்தக் கடைகளில் பணிபுரியும் சுமாா் 1,500 ஊழியா்களை அரசு எப்படி வேறு வேலைகளில் அமா்த்தப் போகிறது என்பது முதல் பிரச்னை. தமிழ்நாடு பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் தோ்வு செய்யப்படாத அந்த ஊழியா்களை, அரசுத் துறைகளில் நியமிப்பது என்பது தவறான முன்னுதாரணமாகிவிடும்.
  • முந்தைய அதிமுக ஆட்சியின்போது, உச்சநீதிமன்றத் தீா்ப்பைத் தொடா்ந்து நெடுஞ்சாலைகளையொட்டி அமைந்த 700-க்கும் அதிகமான ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டன. அதில் பணியாற்றியவா்கள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் பெறவோ, அரசின் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியவோ தயாராக இருக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • மதுவிற்பனையை அரசே மேற்கொள்ள அன்றைய ஜெயலலிதா அரசு முடிவெடுத்ததே தவறு. பட்டதாரி இளைஞா்களை அந்த ‘டாஸ்மாக்’ விற்பனைக் கடைகளில் மதுவிற்பனை செய்ய நியமித்தது அதைவிட பெரிய மாபாதகம்.
  • தமிழகம் முழுவதும் படித்து வேலையில்லாத இளைஞா்கள் மதுவிற்பனை செய்ய ஈடுபடுத்தப்படுகிறாா்கள் என்கிற அவலம் குறித்து, ஏன் சமூக ஆா்வலா்களும், அரசியல் கட்சிகளும் கண்டிக்கவில்லை என்று தெரியவில்லை. அவா்களை அரசு ஊழியா்களாக அறிவித்திருக்கும் நிலையில், அவா்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய நிா்பந்தத்திற்கு அரசு உள்ளாகி இருக்கிறது.
  • ஏற்கெனவே கள்ளச் சாராயம் தமிழகத்தில் பரவலாக விற்கப்படுகிறது என்பதை செங்கல்பட்டு, விழுப்புரம், மரக்காணம், தஞ்சாவூா் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த கள்ளச் சாராய உயிரிழப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. ‘டாஸ்மாக்’ கடைகளிலேயே, அனுமதிக்கப் பட்டதை விட ரூ. 10, ரூ. 15 என்று அதிக விலை பெறப்படுவதாகப் புகாா்களும் எழுந்தன. இப்போது 500 விற்பனைக் கடைகள் மூடப்படும் நிலையில், அந்தப் பகுதிகளில் குறைந்தவிலை கள்ளச் சாராய விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு.
  • மீண்டும் ‘பூரண மதுவிலக்கு’ என்கிற கோரிக்கை நடைமுறை சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. குதிரைகளை ஓடவிட்டு பிறகு லாயத்தைப் பூட்டி என்ன பயன்? மதுவிலக்கை அமல்படுத்தும் குஜராத், பிகாா் மாநிலங்களில் கள்ளச் சாராயமும், உயர்ரக மதுவிற்பனையும் தாதாக்களின் கையில் சிக்கியிருக்கும் எதாா்த்தம் குறித்து யாரும் பேசுவதில்லை. அந்த மாநிலங்களில் ஆளுங்கட்சிப் பிரமுகா்கள் அதனால் பெரும் பணம் ஈட்டுவது வெளியில் தெரிவதில்லை.
  • உயர்ரக மதுக்கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கை அதைவிட ஆபத்தானது. கள்ளுக்கடைகளில் போதையை அதிகரிப்பதற்கான மாத்திரைகளைச் சோ்த்து விடுகிறாா்கள் என்கிற உண்மை வெளியானபோது, அதை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. அன்றைய எம்ஜிஆா் அரசு கள்ளுக்கடைகளை மூடியதற்கு அதுதான் காரணம்.
  • பூரண மதுவிலக்கு என்பது உடனடி சாத்தியம் அல்ல என்பதால், அதுவல்ல இப்போது முக்கியம். மதுவிற்பனை செய்யும் ஈனச் செயலில் அரசு நேரடியாக ஈடுபடுவது என்பதற்கு முற்றுப்புள்ளி விழ வேண்டும். முன்புபோல, தனியாருக்கு மதுக்கடைகளை ஏலம் விடுவதன் மூலம், அரசின் வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படாது. மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, அந்தக் கடைகளைக் கண்காணிப்பது என்பதுடன் அரசு தனது பணியை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  • இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் குறிப்பிட்ட நிறுவனங்களின் மதுக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலைமை மாற வேண்டும். சந்தைப் போட்டிதான் தரத்தையும், விலைக் குறைவையும் உறுதிப்படுத்தும்.
  • ஊருக்கு வெளியே மட்டுமே மது விற்பனைக் கடைகள் என்பதும், பொது இடங்களில் மது அருந்துதல் தடை செய்யப்படுவதும் உறுதிப்பட்டாலே போதும் பொதுமக்களும், தாய்மாா்களும் அரசுக்கு நன்றி சொல்வாா்கள். அந்த அடுத்தகட்ட அறிவிப்புக்காக தமிழகம் காத்திருக்கிறது!

நன்றி: தினமணி (24  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்