TNPSC Thervupettagam

மூத்த குடிமக்களுக்குப் பிரதமரின் பேருதவி

November 6 , 2024 18 days 78 0

மூத்த குடிமக்களுக்குப் பிரதமரின் பேருதவி

  • மூத்த குடிமக்களின் மருத்துவக் காப்பீட்டுக்கான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்துக்கான வரம்புகளை உயர்த்துவதாக அண்மையில் அறிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. வருவாய், சேமிப்பு, காப்பீட்டுத் திட்டம் ஆகியவை இல்லாததால், கடுமையான உடல்நலச் சிக்கல்களின்போது மருத்துவச் சிகிச்சைகளுக்கு வாய்ப்பின்றி முதுமைப் பருவத்தை உடல்நலக் குறைபாடுகளுடனேயே கழிக்க நேரும் முதியோருக்கு இது பெருமளவில் கைகொடுக்கும் நடவடிக்கையாகும்.
  • இந்திய மக்கள்தொகையான 144 கோடியில், ஏறக்குறைய 5.3 கோடி பேர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களில் 70 சதவீதம் பேர், அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தங்களது குடும்பத்தினரைப் பொருளாதார அடிப்படையில் சார்ந்திருக்கின்றனர்.
  • மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றவர்களும் இவர்களில் அடக்கம். தீவிர உடல்நலச் சிக்கல்களால் பாதிக்கப்படும்போது, முறையான சிகிச்சை பெறுவது தடைபடும் அபாயத்தில் இம்முதியோர் இருக்கின்றனர்.
  • இந்நிலையில், வயது வரம்பை நீட்டித்து மத்திய அரசு அமல்படுத்தவுள்ள புதிய காப்பீட்டுத் திட்டம், இந்தப் பிரிவினருக்குக் கிடைக்கவிருக்கும் பேருதவி ஆகும். மூத்த குடிமக்கள் எதிர்கொண்டுவரும் முதன்மையான சிக்கலை உணர்ந்து, நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசைப் பாராட்ட வேண்டும்.
  • 2018இல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் என்கிற பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டம், அதுவரை இந்தியா பார்த்திராத மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக இருந்தது. அது வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரைக்கும் மருத்துவக் காப்பீட்டு வசதியை உறுதிசெய்தது. எனினும் குறிப்பிட்ட வயது வரம்புக்கு உட்பட்டே இத்திட்டத்தால் முதியோர் பலன்பெற முடிந்தது.
  • இந்நிலையில்தான், 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களும் இந்தக் காப்பீட்டைப் பெறும்வகையில் மாற்றங்களைச் செய்து பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். திட்டத்தில் சேர்வோரின் பொருளாதார அந்தஸ்து, வருமானம் ஆகியவை காப்பீட்டைப் பெறுவதற்குத் தடையில்லை. உறுப்பினர் ஆண்டுக்கு ரூ.1,112 பிரீமியம் செலுத்த வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட நபருடன், மத்திய அரசும் மாநில அரசும் குறிப்பிட்ட பகுதியைப் பகிர்ந்துகொள்கின்றன.
  • வழக்கமாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள், இந்த விரிவாக்கத் திட்டத்தில் களையப்படுவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். வீட்டிலிருந்து மருத்துவமனைக்கான போக்குவரத்துச் செலவு, பரிசோதனைகளுக்கான கட்டணம் போன்ற துணைச் செலவுகள், மருத்துவக் காப்பீடுகளில் சேர்க்கப்படுவதில்லை என்கிற விமர்சனம் உள்ளது.
  • எனினும் இவற்றுக்கான செலவுகளும் ஒருவரது சிகிச்சை நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாதவையாக உள்ளன. புற்றுநோய் உள்ளிட்ட சிக்கல்களுக்கான காப்பீடு தவிர்க்கப்படுவதே நடைமுறையாக உள்ளது. சம்பந்தப்பட்ட நபரது ஏதேனும் ஒரு குறையைச் சுட்டிக்காட்டி, இறுதியில் காப்பீடு மறுக்கப்படுவது அல்லது காப்பீட்டுத் தொகை குறைக்கப்படுவது நிகழ்கிறது. இதுபோன்ற பிரச்சினைகள் புதிய நடவடிக்கையிலும் தொடரக் கூடாது.
  • ஏறக்குறைய 7.5 லட்சம் பேர் ஒரே அலைபேசி எண்ணைப் பதிவுசெய்து திட்டத்தில் இணைந்திருந்தது, ஒரே குடும்பத்தில் 100 பேர்கூட இருப்பதாகத் தவறாகத் தகவல் அளித்திருந்தது, இறந்தவர்கள் பெயர்கள்கூடச் சேர்க்கப்பட்டிருந்தது உள்படப் பல குளறுபடிகள் முந்தைய ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இருந்ததாக 2023இல் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிவித்தார்.
  • இத்தகைய குளறுபடிகள் இந்த முறை நிகழாதபடி மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்; மக்களும் பொறுப்புணர்ந்து இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், பாதிப்பை எதிர்கொள்வோர் மூத்த குடிமக்களாகவே இருப்பார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்