மூன்றாம் பாலினத்துக்கு தடைவிதிப்பது சரியா?
- அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும், ‘‘அமெரிக்காவில் இனி ஆண், பெண் என்ற இரண்டு பாலினம் தான். மூன்றாம் பாலினம் எதுவும் கிடையாது’’ என்று அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மூன்றாம் பாலினத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துவந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இத்தகைய அறிவிப்பு வெளியானது அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யப்பட வைத்தது.
- அமெரிக்காவில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 16 லட்சம் பேர் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஓட்டு வங்கியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இத்தகைய அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்குள், ‘‘பெண்கள் பங்கேற்கும் விளையாட்டுகளில் திருநங்கைகளுக்கு அனுமதியில்லை’’ என்ற அடுத்த அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
- இதற்கு ஒருதரப்பினரிடம் இருந்து அமோக ஆதரவும் கிடைத்துள்ளது. மற்றொரு தரப்பிலிருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பெண்கள் விளையாட்டில் திருநங்கைகள் பங்கேற்பது சமீபகாலமாகவே சர்ச்சைக்குரியதாக மாறி வருகிறது.
- கடந்த ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் பெண்ணே அல்ல; அவர் ஒரு ஆண் என்று கூறி எதிர்தரப்பில் தோல்வியடைந்த வீராங்கனை குற்றம் சுமத்தியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டது. தைவானைச் சேர்ந்த லின் யுடிங் மீதும் இதேபோன்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இத்தகைய குற்றச்சாட்டு மூன்றாம் பாலினத்தை ஏற்றுக் கொள்ளாத பிற்போக்குத்தனமான செயல் என்றும் எதிர்தரப்பினர் விமர்சனங்களை எடுத்து வைக்கின்றனர்.
- மூன்றாம் பாலினத்தவர் என்பவர்கள் உலகம் முழுக்க பரவியுள்ளனர். சீனாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூன்றாம் பாலினத்தவர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கிரேக்க, ரோமானிய, சுமேரிய நாகரிகங்களில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த சில கடவுள் வழிபாடுகள் இருந்ததற்கும் சான்றுகள் உண்டு.
- மகாபாரதத்தில் சிகண்டி என்பவர் பெண்ணாகப் பிறந்து ஆண் ஒருவரைப் போல் போர்க்களத்தில் சண்டையிட்டதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உலோக காலத்தின் போதே மூன்றாம் பாலினத்தவர் இருந்த குறிப்புகள் வரலாற்றில் இடம்பெறுகின்றன. தற்போது உலகம் முழுக்க மொத்த மக்கள்தொகையில் 1 சதவீதம் பேர் மூன்றாம் பாலினத்தவராக உள்ளனர். இந்தியாவில் 5 லட்சம் பேர் வரை மூன்றாம் பாலினத்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
- இயற்கையில் உலகம் முழுக்க பரவியுள்ள ஒரு பிரிவினரை புறக்கணிப்பது நியாயமில்லை என்றாலும், விளையாட்டுத் துறையில் பெண்கள் பிரிவில் அவர்களை அனுமதிப்பது விவாதத்திற்குரியதே. பெண்களுக்கும் மூன்றாம் பாலினத்தவருக்கும் உடல்ரீதியான பலம், பலவீனத்தில் வேறுபாடு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. சமமானவர்களிடையே நடப்பது தான் போட்டி. அதில் சற்று கூடுதல் பலம் இருந்தால்கூட, அது போட்டியின் முடிவையே மாற்றிவிடும்.
- எனவே, மூன்றாம் பாலினத்தவர் பெண்கள் பிரிவில் பங்கேற்பதற்கு தடை விதிப்பதில் தவறில்லை. மூன்றாம் பாலினத்தவருக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தி போட்டிகள் நடத்துவதன் மூலம் அவர்களும் சமூகத்தில் புறக்கணிப்புக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்யலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 02 – 2025)