TNPSC Thervupettagam

மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி அவசியம் பற்றிய தலையங்கம்

April 27 , 2022 832 days 401 0
  • சில நாடுகளில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று மீண்டும் புதிய வேகத்துடன் பரவத் தொடங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
  • முந்தைய உருமாற்றங்களைவிட அதிவேகத்தில் பரவும் "எக்ஸ் இ' என்கிற உருமாற்றம் இப்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
  • பல ஐரோப்பிய நாடுகள் நோய்த்தொற்றுப் பரவலால் மீண்டும் பொதுமுடக்கத்துக்குத் தயாராகின்றன.
  • கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்கிற மிதப்பில் இருந்த சீனா, இப்போது திகைத்துப்போய் இருக்கிறது.
  • அந்த நாட்டின் வர்த்தகத் தலைநகரான ஷாங்காய் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது.
  • வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால் சீனாவின் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்கள் வெளியுலகுக்குத் தெரிவதில்லை. மிக அதிகமான பாதிப்பை சீனா எதிர்கொள்கிறது என்பது மட்டும் உறுதி.
  • அதே போன்றுதான் தாய்லாந்து, மலேசியா, வியத்நாம், பிலிப்பின்ஸ் உள்ளிட்ட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளும் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்புப் பரவலை எதிர்கொள்கின்றன.
  • அந்த நாடுகளில் உள்ள ஆட்சியாளர்கள் தங்களது நாட்டில் பாதிப்பு எதுவும் இல்லை என்பதுபோல தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டதும், தடுப்பூசி போடுவதை வலியுறுத்தாமல் விட்டதும் இப்போதைய புதிய அலை நோய்த்தொற்றுக்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது.
  • அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியா ஏனைய உலக நாடுகளைவிட கொள்ளை நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிவிரைவாகவும், சிறப்பாகவும் செயல்பட்டிருக்கிறது என்பதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஆபத்து அகலவில்லை!

  • பல்வேறு எதிர்வினைகளையும், பிரச்னைகளையும், இடர்ப்பாடுகளையும் சந்தித்தோம் என்றாலும் கூட, 185 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்திய அசாத்திய சாதனைக்காக நரேந்திர மோடி அரசை பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
  • சாதனைக்கு இடையில் பல சோதனைகளையும் கடந்திருக்கிறோம். புலம்பெயர்ந்தோரின் அவலம், ஆக்சிஜன் தட்டுப்பாடு, கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளை, உயிரிழப்புகள் என்று பல வேதனைகளை சுமக்க நேரிட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
  •  மத்திய அரசின் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 15 - 18 வயது உட்பட்டவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியும், 12 - 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயாலஜிக்கல் - இ நிறுவனத்தின் தடுப்பூசியும் போடுவது நடைபெற்று வருகிறது.
  • இப்போது 6 - 12 வயது வரையிலான சிறார்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியும், 5 - 12 வயது வரையிலான சிறார்களுக்கு பயாலஜிக்கல் - இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் தடுப்பூசியும் அவசரகால நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்திருக்கிறது.
  • ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியும், சைடஸ் நிறுவனத்தின் சைகோவ் - டி தடுப்பூசியும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டும்கூட இன்னும் தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
  • முனைப்புடன் சிறார்களுக்கு பள்ளிக்கூடங்கள் மூலம் தடுப்பூசி பாதுகாப்பு அளிப்பதில் காட்டப்படும் முனைப்பு மத்திய அரசின் முன்னெச்சரிக்கை உணர்வை வெளிப்படுத்துகிறது.
  • அரசு என்னதான் விரைந்தும், முனைந்தும் செயல்பட்டாலும்கூட இன்னும் பல மாநிலங்களில் தடுப்பூசி திட்டத்தின் செயல்பாடு தேசிய சராசரியை எட்டவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
  • அஸ்ஸாமைத் தவிர ஏனைய வடகிழக்கு மாநிலங்களிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தடுப்பூசி திட்டம் மிகவும் மந்தகதியில் பின்தங்கியிருக்கிறது.
  • தேசிய சராசரியான 82% அளவை பிகார், பஞ்சாப், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் எட்டாமல் பின்தங்கியிருக்கின்றன.
  • மத மூட நம்பிக்கை, சதித்திட்டம் உள்ளிட்ட தவறான பரப்புரைகள் மட்டுமல்லாமல், ஊரகப் புறங்களில் போதுமான விழிப்புணர்வு ஏற்படாமல் இருப்பதும் இதற்குக் காரணங்கள்.
  •  இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 கோடி பேர் இன்னும்கூட இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
  • தற்போது கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் குறைவாக இருப்பதால் முதல் தவணை தடுப்பூசிப் பாதுகாப்பே போதும் என்று பலர் கருதுகிறார்கள்.
  • 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1.23 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என்றால், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11.5 கோடி பேர்தான் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டவர்கள்.
  • ஏற்கெனவே கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக்கொண்டவர்கள் முன்னெச்சரிக்கைத் தவணையை செலுத்திக் கொள்வது அவசியம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய நோய் நுண்ணுயிரியல் (வைராலஜி) நிறுவன விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
  • இரண்டு தவணை கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூன்றாவது முன்னெச்சரிக்கை தவணை கோவிஷீல்ட் போட்டுக்கொள்வதால் உடலின் எதிர்ப்பு சக்தி ஆறு மடங்கு அதிகரிப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
  • பல நோயாளிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வை, மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உறுதிப்படுத்த வேண்டும்.
  • கோவிஷீல்ட் உற்பத்தியை அதிகரித்து அனைவருக்கும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • உலகில் தடுப்பூசி போடப்படாத ஒருவர் இருந்தாலும்கூட, கொவைட் 19 நோய்த்தொற்றின் ஏதாவது ஓர் உருமாற்றம் பரவிக் கொண்டுதான் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

நன்றி: தினமணி (27 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்