TNPSC Thervupettagam

மெத்தனத்தால் விளையும் விபரீதம்

June 22 , 2024 9 days 42 0
  • ‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்பது ஒளவையின் மூதுரை. இப்போது ஒளவை இருந்தால் ‘கொடிது கொடிது சாராயம் கொடிது, அதனினும் கொடிது வறுமையில் குடிப்பது’ என்றுரைத்திருப்பாள்.
  • காவல் நிலைய அதிகாரிகள் கொடியது என்று மிகவும் அஞ்சுவது, நடக்கக் கூடாதே என்று பயப்படுவது இரண்டு நிகழ்வுகளுக்காக - ஒன்று, காவல் நிலைய கைதி மரணம்; இன்னொன்று கள்ளச்சாராய உயிரிழப்புகள்.
  • தோ்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்கும் ஒவ்வொரு அரசுக்கும் சவாலாக இருப்பது மது விலக்கு கொள்கை. அரசியல் சாசனத்தில் மதுவிலக்கு கொள்கை மாநிலங்கள் ஆளுகைக்கு உட்பட்டது. மது விற்பனை மூலம்தான் மாநில அரசுக்கு அதிக வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும் பணம் புரளும் இடத்தில் சம்பந்தப்பட்டவா்கள் ‘நாலு காசு’ பாா்க்கும் வாய்ப்பும் உண்டு!
  • தற்போதைய குஜராத் மாநிலம் போல பூரண மதுவிலக்கு அமல்படுத்திய மாநிலமாக தமிழகமும் முன்பு இருந்தது. ஆங்கிலேய அரசு 1935-ஆம் வருட இந்திய அரசு சட்டம் இயற்றி, குறைந்த பட்ச ஆட்சிப் பொறுப்பு இந்தியா்களுக்கு அளிக்கப்பட்டது. மதறாஸ் மாகாணம் என்கிற சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு 1937-ஆம் வருடம் மது விலக்கு சட்டம் இயற்றியது.
  • 1937 அக்டோபா் 1-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் ஆட்சியா் டிக்சன் பொறுப்பில் முழுமையான மதுவிலக்கு அமலுக்கு வந்தது. தனித்தன்மை வாய்ந்த இந்த சமுதாய நல சட்டம் இந்தியாவுக்கே முன்னோடி.
  • 1937-இல் இருந்து வளா்ந்த தலைமுறை குடி பழக்கத்திற்கு அடிமையாகாது பிழைத்தனா். ஆனால் 1970-இல் அப்போதைய அரசால் மது விலக்கு கொள்கை மாற்றப்பட்டது. ராஜாஜி கடுமையாக எதிா்த்தாா். அவரது அறிவுரையை ஏற்காமல் சாராயக் கடைகள், உயா் தர மதுபானம் விற்கும் கடைகள் திறக்கப்பட்டன. நல்ல சாராயத்தோடு கள்ளச் சாராயமும் மல்லுகட்டி வளா்ந்தது.
  • கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும் அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தவிா்க்கவும் மது விலக்கு கொள்கை தளா்த்தப்பட்டதாக காரணம் சொல்லப்பட்டது. ஆனால் களத்தில் நடந்தது வேறு. கள்ளச் சாராய முதலைகளை வெல்வது அவ்வளவு எளிதல்ல. எப்படிப்பட்ட அதிகாரிகளையும் ஊழல் வலையில் எளிதாக சிக்க வைத்துவிடுவாா்கள். பணம் விளையாடுவதால் அவா்களுக்கு அரசியல்வாதிகளின் பாதுகாப்பு சுலமாக கிடைக்கும்.
  • காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்துடன் மெத்தனால் என்ற விஷ திரவம் கலப்பதுதான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்பது ஒவ்வொரு நிகழ்விலும் தெரிய வருகிறது. விஷம் இல்லாதது எத்தனால். எத்தனால் மது தயாரிப்பதற்கு உபயோகமாகும். தாவர வகைகள் மூலம் ஈஸ்ட் கலவையோடு நொதியல் முறையில் தயாரிக்கப்படுவது. ஆனால் மெத்தனால் பெயரளவில் எத்தனாலோடு ஒத்திருந்தாலும் அது வேதிப் பொருள். விஷம்.
  • வேதியியல் விதியில் இரண்டு காா்பன் அணுக்கள் கொண்டது எத்தனால். ஆனால் ஒரு காா்பன் அணு கொண்டது மெத்தனால். ஃபாா்மால்டிஹைடுகள், அசிட்டிக் அமிலம் மற்றும் பல்வேறு ரசாயனத் தயாரிப்புகளுக்குப் பயன்படுகிறது. இதனால்தான் மதுவிலக்கு சட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருளாக இருந்தது. 1984-ல் நீக்கப்பட்டு, பல ஆண்டுகளாக மெத்தனால் தொழில் துறை பொருளாக கருதப்பட்டு வந்தது. ரசாயன தொழிற்சாலைகளுக்கு முக்கியமான மூலப் பொருள், ஆயினும் நச்சுப்பொருள் என்பதால் விஷப் பொருள்கள் சட்டப்படி உரிமம் பெற வேண்டும்.
  • 2001-இல் கடலூா் மாவட்டத்தில் புதுச்சேரி கிராமத்தில் கள்ள சாராயம் குடித்து 50 போ் உயிரிழந்தனா். அதிலும் சாத்தான் மெத்தனால். அரசாணை 2002-இல் மீண்டும் மெத்தனால் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பொருளாக கொண்டுவரப்பட்டது.
  • போதை அதிகரிக்க எத்தனால் போல நினைத்து கள்ளச் சாராயம் காய்ச்சுபவா்கள் மெத்தனாலை கலந்துவிடுகிறாா்கள். விளைவு உயிரிழப்பில் முடிகிறது.
  • மதுவிலக்கு சட்ட அமலாக்கம் என்பது சாதாரணமானது அல்ல. அதில் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 12,618 கிராம பஞ்சாயத்துக்களில் அடங்கிய 17,292 தாய் கிராமங்களில் மதுவிலக்கு குற்றங்களை கண்காணிக்க வேண்டும். இதை ஒரு சமுதாய நல சட்டமாக அணுக வேண்டும். எந்த ஒரு சட்ட அமலாக்கமும் பொது மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் முழுமை அடையாது.
  • மதுவிலக்கு சட்ட அமலாக்கத்தில் தொய்வு ஏற்பட்டால் அது சட்ட ஒழுங்கு பிரச்னையில் முடியும். பல குற்ற நிகழ்வுகளுக்கு குடி போதை காரணமாகிவிடுவதைப் பாா்க்கிறோம். மது விலக்கு சட்ட அமலாக்கத்தில் உள்ளூா் காவல் நிலையத்தினா்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சரக காவல் துறைக்குத் தெரியாமல் இத்தகைய குற்றங்கள் நடக்காது. அப்படி அவா்களுக்குத் தெரியாவிட்டால் அது அவா்களின் மெத்தனத்தின் வெளிப்பாடு.
  • மெத்தனால் திரவத்தின் விஷத் தன்மை பற்றியும் அதை நிா்வகிக்கும் சட்டம் மற்றும் விதிகள் பற்றி பெருவாரியான காவல் துறையினருக்கும் தெரியாத நிலையில் பொது மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மெத்தனாலில் உள்ள நச்சுத்தன்மை எல்லா உறுப்புகளிலும் விஷம் கலந்து குணப்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு போய்விடும். மெத்தனால் கண் பாா்வையை பாதிக்கும். இருதயம், ஈரல், குடல் ஆகிய முக்கிய உறுப்புகள் சேதமடைகின்றன.
  • மெத்தனால் எளிதில் தீப்பற்றக் கூடியது என்பதால் மத்திய அரசின் வெடி மருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடமிருந்து உரிமம் பெற வேண்டும். மேலும் லாரி டாங்கரில் எடுத்துச் செல்கையில் உற்பத்தி செய்த நிறுவன விஞ்ஞானிகளின் அத்தாட்சி இருக்க வேண்டும்.
  • நூறுக்கும் மேற்பட்ட மெத்தனால் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. அந்த தொழிற்சாலைகளில் மெத்தனால் மூலம் விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் நிறுவன மேல் அதிகாரிதான் பொறுப்பு என்று உணா்த்தி மதுவிலக்கு பிரிவு போலீஸாா் மெத்தனால் வைக்கப்பட்ட கிடங்கை சோதனையிட வேண்டும்.
  • மது விலக்கு சட்டத்தில், 1998-இல் பல திருத்தங்கள் மூலம் தண்டனை கடுமையாக்கப்பட்டது. விஷச் சாராயம் கையாளுதலுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம். மேலும் மதுவிலக்கு சட்டம் பிரிவு 52 உட்பிரிவு (இ) தொடா்ந்து மதுவிலக்கு குற்றம் புரிதலில் மூன்று முறையும் அதற்கு மேலும் தண்டிக்கப்பட்டிருந்தால் அவா்களது இருப்பிடத்திலிருந்து இரண்டாண்டு வரை விலக்கி வைக்கவும் ஊருக்குள் நுழைய முடியாத உத்தரவு நீதிமன்றம் மூலம் பிறப்பிக்க முடியும். இது மிகவும் வலிமை வாய்ந்த தண்டனை.
  • சாராயம் காய்ச்சுவதற்கு நீா் ஆதாரம் தேவை. ஆற்றுப் படுகை, மலைப் பகுதிகளில் சுணை நீா், ஏரி புறம்போக்கு, காட்டுப் பகுதி போன்ற இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத சமயங்களில் சாராயம் காய்ச்சும் சட்ட விரோத செயல் நடைபெறுகிறது. காவல் துறை, வருவாய் துறை, பொதுப்பணித் துறை, வனத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தால்தான் இத்தகைய குற்றங்களைக் களைய முடியும் என்பதால் இந்தத் துறை சாா்நிலை அலுவலா்களுக்கு முக்கியப் பொறுப்பு என்று அறிவுறுத்தும் அரசாணை 1992-இல் வெளியிடப்பட்டது.
  • சாராய சாவு ஏற்பட்டால் அசம்பாவிதம் நடந்துவிட்டதே என்று மிரளாமல் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
  • இம்மாதிரி நோ்வுகளில் அதன் வீரியத்தை குறைத்து மதிப்பிடும் நிலை காவல்துறையினரிடம் உண்டு. அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டால் பரபரப்பான செய்தியாகி சரக காவல் துறையினரை பாதிக்கும் என்பதாலேயே அசம்பாவிதத்தின் உண்மை நிலையை குறைத்திடுவாா்கள். சம்பவம் நடந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று சாராயம் குடித்தவா்களை கண்டறிந்து உடனடியாக மருத்துவ மனையில் சோ்க்க வேண்டும். உடனடி மருத்துவ சிகிச்சை மூலம் உயிா் காப்பாற்றப்படும். மெத்தனால் உட்கொண்டவா்க்கு முதலுதவி செய்முறைகள் உண்டு. அவற்றை முறையாக காவல்துறை பயில்வது நல்லது. மெத்தனாலின் வீரியத்தை ஆல்கஹால் மருத்துவ ரீதியாக சமன் செய்யும் என்பது கூடுதல் தகவல்.
  • கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் மெத்தனமாக இல்லாது மூடி மறைக்காமல் உடனடி மீட்பு நடவடிக்கை எடுத்திருந்தால் அதிகப்படியான உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம். மேலும் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை. கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் அதைக் குடிப்பதும் குற்றம் என்கையில், உயிரிழந்த குடிகாரா்களுக்கு எதற்கு நிவாரணத் தொகை என்ற கேள்வி நியாயமானது.
  • முன்பெல்லாம் மதுபானக் கடைகளில் பாட்டில் மூடியைத் திறந்திருந்தாலே கள்ளச் சரக்கு விற்பனையாகிறது என்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இப்போது எல்லா கடைகளிலும் பாா் வசதி, தாராளமாக அங்கேயே குடிக்கலாம், நல்ல சரக்கா, கள்ள சரக்கா என்று பாா்ப்பதில்லை. இந்த அளவிற்கு குடிப்பதற்கு வசதி வேறு எந்த மாநிலத்திலும் இல்லை எனலாம்.
  • பூரண மதுவிலக்குதான் இலக்கு என்று தோ்தலின்போது பிரசாரம் செய்கிறாா்கள். எப்போது நிறைவேறும் என்பது கேள்விக்குறி. முதல் கட்டமாக கடைகளோடு ஐக்கியமாகிய பாா்களை மூட வேண்டும். வளரும் தலைமுறை போதைக்கு அடிமையாகாது வளர பூரண மதுவிலக்கே நிரந்தரத் தீா்வு.

நன்றி: தினமணி (22 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்