TNPSC Thervupettagam

மெய்நிகர் நாணய வர்த்தகம்

June 16 , 2021 1141 days 532 0
  • கிரிப்டோ கரன்சி என்று அழைக்கப்படும் மெய்நிகர் நாணயங்களில் மிகவும் பிரபலமான ‘பிட் காயின்’, உலகிலேயே முதல் முறையாக எல் சால்வடோர் நாட்டில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது, இத்தகைய புதிய பணப் பரிமாற்றங்களை இனிமேலும் கட்டுப் படுத்தி வைக்க முடியாது என்பதைத் தெரிவிக்கிறது.
  • எல் சால்வடோர் அதிபர் நயீப் புக்கேலே எடுத்திருக்கும் இத்தகு துணிச்சலான முடிவு, அந்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளையும் சுற்றுலாவையும் வளர்த்தெடுக்கும் எனவும், அதன் பொருளாதாரப் பயன்கள் அனைத்து சால்வடோரியர்களையும் சென்றுசேரும் எனவும் நம்பப்படுகிறது.
  • பொருளாதாரத்தில் முன்னணி வகிக்கும் மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளும் மெய்நிகர் பணத்தின் மீதான கட்டுப்பாடுகளை அடுத்தடுத்துத் தளர்த்தலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • உள்நாட்டு நாணய மதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தமக்குள்ள அதிகாரத்தை இழக்க நேரும் என்ற நியாயமான அச்சமே மத்திய வங்கிகள் அந்த முடிவைத் தள்ளிவைப்பதற்குக் காரணம்.
  • மெய்நிகர் நாணயங்களுக்குத் தடைவிதித்து ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையைச் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததையடுத்து இந்தியாவிலும் மெய்நிகர் நாணயங்களுக்கான வாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
  • சட்டரீதியாக மெய்நிகர் நாணயங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்ற அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் சுற்றறிக்கையை ரத்துசெய்தது.
  • அதையடுத்து, ரிசர்வ் வங்கி இந்த நாணயப் பரிமாற்றங்களுக்குச் சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்க முன்வராதபோதும் அவற்றைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என்று வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
  • விரைவில் இந்தப் பரிமாற்றங்கள் செபி போன்ற அமைப்புகளின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படலாம் என்றும் பேசப்படுகிறது.
  • மெய்நிகர் நாணய வர்த்தகத்தை வரிச் சட்டங்களின் கீழ் கொண்டுவரும் பட்சத்தில் அதிலிருந்து அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
  • இந்தியாவில் ஒன்றரைக் கோடிப் பேர் மெய்நிகர் நாணயத்தில் முதலீடு செய்திருக்கலாம் என்றும், முதலீடுகளின் மொத்த மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்கள் வரையில் இருக்கலாம் என்றும் உத்தேச மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
  • மெய்நிகர் நாணயங்கள் குறித்த உலகளாவிய தயக்கம் ஒரே நாளில் முடிவுக்கு வந்து விட வில்லை.
  • கூகுள், ஃபேஸ்புக் முதலான பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மெய்நிகர் நாணயங்களுக்கான விளம்பரங்களுக்கு விதித்திருந்த தடையை நீக்கிக்கொண்டது அதன் முக்கியமானதொரு கட்டம். ஃபேஸ்புக் நிறுவனமே அமெரிக்க டாலர் நாணய மதிப்புடன் இணைக்கப்பட்ட ‘டீயம்’ என்ற மெய்நிகர் நாணயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
  • உலகளாவிய பெருநிறுவனங்களின் இந்த முடிவுகள் இந்தியாவின் அணுகுமுறையிலும் நிச்சயம் தாக்கத்தை விளைவிக்கும்.
  • இந்தியாவில் மெய்நிகர் நாணயங்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே, அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், பரிமாற்றம் செய்யப்படும் பணமதிப்பும் பெருமளவில் அதிகரித்துவிட்டன.
  • மெய்நிகர் நாணயங்களின் மதிப்பு மிக வேகமாக அதிகரித்துவரும் நிலையில் அதைச் சட்டபூர்வமாக அங்கீகரித்து, தெளிவான ஒழுங்குமுறைகளை உருவாக்குவதே ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 - 06 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்