- பாரதியார் ‘தமிழ்த்தாய்’ என்னும் தலைப்பில் பாடிய பாடலின் வரிகள் இவை:
- ‘புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
- பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்:
- மெத்த வளருது மேற்கே - அந்த
- மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
- சொல்லவுங் கூடுவதில்லை - அவை
- சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை
- மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
- மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
- என்று அந்தப் பேதை உரைத்தான்-ஆ
- இந்த வகை எனக்கு எய்திடல் ஆமோ’
- இப்பாடலில் வரும் ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்னும் வரியை எல்லோரும் மேற்கொள் காட்டுவது சகஜம். எதிர்காலத்தில் அழியப்போகும் மொழிகளுள் தமிழும் ஒன்று என்று ஐநா கூறியதாகச் சிலர் மேற்கோள் காட்டிச் சொல்வதும் சகஜம். இந்த இரண்டில் ஒன்று கவிஞரின் ஆதங்கம்; இன்னொன்று ஆய்வாளர்களின் ஊகம்.
- தென் மாவட்ட வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் அவரது இளம் வயதில் மேம்போக்காக ‘மெல்லத் தமிழ் இனி அழியலாம்’ என்று சொன்னதன் மீதான கோபத்தை பாரதியார் தன் கவிதையில் வெளிப்படுத்தினார். பாரதி பாண்டிச்சேரியில் இருந்தபோது தமிழைவிட வங்க மொழி உயர்ந்தது என்று அரவிந்தர் உட்படச் சிலர் பேசியது (வ.ரா.கருத்து) பாரதியைப் பாதித்திருக்கலாம்.
- ஒரு மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் அந்த மொழி சார்ந்த பண்பாட்டின் கூறுகளிலும் மக்களின் உணர்விலும்தான் இருக்கும். இன்னொரு வகையில் மொழியின் வளர்ச்சியானது ஆளும் அரசின் நிலையைப் பொறுத்தும் இருக்கும். இந்த விஷயங்களை 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட தமிழுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
உலக மொழிகள்
- உலக மொழிகளின் எண்ணிக்கை அவை பற்றிய சரியான கணிப்பு, அவற்றின் வீழ்ச்சி, அழிவு பற்றிய கணக்கைத் துல்லியமாகக் கூற முடியவில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்து. உலகில் சுமார் 6,800 மொழிகள் உள்ளன என்பது ஒரு கணக்கு. இவற்றில் 43% அழியப்போகும் சூழலில் உள்ளனவாம். உலக மொழிகளில் 40% மக்கள்தான் தாய்மொழியில் படிக்கின்றனர். உலக மொழிகளில் தொழில்நுட்பப் படிப்புக்குரிய கூறுகளுடன் இருக்கும் மொழிகள் நூற்றுக்கும் குறைவு என்கின்றனர் ஆய்வாளர்கள்.
- இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில் உள்ள மொழிகள் பற்றிய கணக்கு துல்லியமாக இல்லை என்று கூறுகின்றனர். 1921-2011 ஆண்டுகளில் 1,599 மொழிகள் இருந்தன. 220 மொழிகள் அழிந்துவிட்டன என்கின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டம் 8-ம் அட்டவணைப்படி இந்தியாவில் 23 மொழிகள் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன.
பழமை, தொடர்ச்சி
- பழமையான உலக மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை மொழியியலர்கள் ஒத்துக்கொள்கின்றனர். ஒரு மொழியின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமல்ல; அதன் பண்பாட்டுத் தொடர்ச்சி, புரிதல் போன்றவற்றிலும் இருக்கிறது. செம்மொழிக்குரிய அந்தஸ்தே இதுதான். தமிழ், கிரேக்கம், மாண்டரின் (சீன மொழி), சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளும் பழமையானவையே. தமிழில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளைப் புரிந்துகொள்வதில் இன்றைய சாதாரண மாணவனுக்குப் பெரிதும் பிரச்சினை இல்லை.
- ஆனால், கிரேக்கம், மாண்டரின் போன்ற மொழிகளில் உள்ள பழைய இலக்கியங்களை அந்த மொழி பேசும் நவீன வாசகர்கள் புரிந்துகொள்வதில் சிரமம் உண்டு. இந்தியச் செம்மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒடியா, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தமிழ் பழமையானது. இவை இலக்கியம் வழியாக மட்டுமல்ல. அகழாய்வுச் சான்றுகள் வழியும் நிறுவப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கவித்துவம் வாய்ந்த கபிலரின் தொடர்ச்சி ஆண்டாள், கம்பன், பாரதி எனத் தொடர்கிறது.
பன்முகத்தன்மை
- தமிழ்ப் பண்பாடு ஒற்றைத் தன்மை கொண்டதல்ல. பன்முகத்தன்மை உடையது. இதற்குச் சமூகவியல்ரீதியான காரணங்கள் நிறையச் சொல்லலாம். முக்கியமாகத் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் நடந்த வணிகம், படையெடுப்பு ஆகியவற்றைக் கூறலாம். இதற்கெல்லாம் தமிழ்நாட்டில் கிடைத்த ரோமானிய, கிரேக்க நாணயங்களும் அயலிடங்களில் கிடைத்த பிராமி பொறிப்புகளும் சான்றுகளாகும்.
பழங்காலத்தில் பன்மொழி அறிவு
- தமிழ்நாட்டில் பல மொழிகள் அறிந்த தமிழ் வணிகர்கள் இருந்தனர். பத்துப்பாட்டில் ஒன்றான பட்டினப்பாலையில்,
- ‘மொழிபல பெருகிய பழிதீர் தேயத்து
- புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
- முட்டாச் சிறப்பின் பட்டினம்”
- என்னும் வரிகளை இதற்கு மேற்கோளாகக் கூறலாம். இதனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் வணிக நகரங்களில் பல மொழிகள் பேசிய வணிகர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், அவர்களின் வழியாக அந்த மொழிகளைத் தமிழர்கள் அறிந்திருக்கலாம் என்றும் ஊகிக்கலாம்.
பலவகைப் பண்பாடுகள்
- இந்திய சுதந்திரம் வரையுள்ள காலகட்டத்துத் தமிழ்நாட்டு வரலாற்றை மேம்போக்காகப் புரட்டுகிறவர்களுக்குப் பல்வேறு மொழிகள் பேசிய பல்வகைப்பட்ட பண்பாடுகள் கொண்டவர்கள் தமிழ்நாட்டை ஆண்டது தெரியும். சங்க காலத்திலேயே சமண, பௌத்த மதங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டன. இவர்களின் வழியாக பிராகிருதம், பாலி, அர்த்தமாகதி போன்ற மொழிகளின் சொற்கள் தமிழில் கலந்தன.
- 1,500 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட களப்பிரர்கள் தமிழர் அல்லர். இவர்களின் தாய்மொழி தமிழ் அல்ல. இவர்கள் காலத்தில் பிராகிருதமும் சம்ஸ்கிருதமும் தமிழுடன் உறவாடின. தமிழ் ஆட்சி மொழியாக, அரசியல் மொழியாக இருக்கவில்லை. இவர்களை அடுத்து வந்த பல்லவர்களும் தமிழரல்லர். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டின் பெரும் பகுதியை ஆண்ட இவர்களின் ஆட்சி மொழி தமிழல்ல. இவர்கள் தங்கள் செப்பேடுகளை சம்ஸ்கிருதம், பிராகிருத மொழிகளில் வெளியிட்டனர்.
- பல்லவர் காலத்தில் படையெடுப்பு, வணிகம் காரணமாக கன்னடம், தெலுங்கு மொழிச் சொற்களும், பண்பாட்டு விஷயங்களும் தமிழுடனும் தமிழ்நாட்டுப் பண்பாட்டுடனும் கலந்தன. தமிழர் பண்பாட்டில் வடஇந்திய சமயக் கூறுகள் பெரிதும் கலந்தது இக்காலத்தில்தான். பல்லவர் காலத்துக்குப் பின் வந்த சோழ அரசர்களில் சிலர் தெலுங்கு வம்சாவழியினாராக இருந்தனர். ஆனால், ஆட்சிமொழி தமிழ்தான். சோழரை அடுத்து வந்த பாண்டியர்களின் ஆட்சிமொழி தமிழ்தான்.
- பாண்டியரின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய விடுதலை வரை தமிழ்நாட்டைத் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவரே ஆண்டனர். தமிழ்நாட்டைத் தெலுங்கு பேசியவர்கள் நீண்ட காலம் ஆண்டிருக்கின்றனர். தஞ்சைப் பகுதியில மராட்டியர் இருந்தனர். அப்போது ஆட்சிமொழி மராட்டியே. மோடி என்ற எழுத்துகளில் நிர்வாக விஷயங்களை எழுதி வைத்தனர்.
- ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் செல்வாக்கடைந்தது. இப்படியாகத் தமிழ்நாட்டில் 2,000 ஆண்டுகளாக சம்ஸ்கிருதம், பிராகிருதம், பால்லி, அர்த்தமாகதி, தெலுங்கு, கன்னடம், மராட்டி, ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீசியம், பாரசீகம் எனப் பல மொழிகள் கலந்திருக்கின்றன. 2,000 ஆண்டுகளின் வரலாற்றில் சோழர்கள், முற்காலப் பாண்டியர்கள், பிற்காலப் பாண்டியர்கள் காலம் தவிர்த்து, உத்தேசமாக 1,500 ஆண்டுகள் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கவில்லை. இப்படியான சூழ்நிலையிலும் தமிழின் கவிதை, இலக்கணம், உரைநடை போன்றவை அழியவில்லை. பல்வேறு மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.
கலை, சடங்கு, மரபு
- ஒரு மொழியின் வளர்ச்சியைத் தொய்வின்றிச் செயல்படுத்துவதில் படைப்பாளிகளுக்குரிய இடம் கலை, சடங்குகள், வாய்மொழி மரபு போன்றவற்றுக்கும் உண்டு. இந்தக் கூறுகளின் தொடர்ச்சி அவற்றின் பன்முகப் பண்பாட்டைப் பாதுகாப்பதில்தான் இருக்கிறது. இப்படியான பாதுகாப்பு எண்ணம் அண்மையில் இளைஞர்களிடம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
- ‘மெல்லத் தமிழினி சாகும்’ என்ற வரிகள் இடம்பெற்ற பாடலை பாரதியார் பாடியதற்குக் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சிதான் காரணம். 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கல்கத்தாவிலிருந்து வந்த ‘மாடர்ன் ரிவ்யூ’ என்னும் இதழில், எல்லா பாடங்களையும் தாய்மொழியில் படிக்க முடியும் என்று யதீந்திர சர்க்கார் எழுதினார்; இதற்கு வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ.நீலகண்டன் மறுப்பு எழுதினார். தமிழுக்கு அந்த வலிமை இல்லை என்றார். இதை விமர்சித்து, பாரதி ஒரு கட்டுரை எழுதினார். பெரியசாமி தூரனின் ‘பாரதித் தமிழ்’ தொகுப்பில் இக்கட்டுரை உள்ளது. இன்று அந்தச் சூழல் மாறிவிட்டது. மெல்ல மட்டுமல்ல, எப்போதும் தமிழ் சாகாது.
நன்றி: தி இந்து (23 – 01 – 2022)