- தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக் காலம் போராடிப் பெறப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், இந்தியாவிலேயே அமைக்கப்பட்டுள்ள மற்ற ஆணையங்களைவிட சட்ட அதிகாரம் மிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகவும், உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் அமைப்புக்கு இணையானதாகவும் செயல்பட்டுவருகிறது. இதைப் பெற்றுக்கொடுத்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த உரிமை பறிபோகும் பேராபத்து இப்போது ஏற்பட்டுள்ளது.
மாறிப்போன சூழல்
- காவிரி மேலாண்மை ஆணையத்தின் கடைசிக் கூட்டம் பிப்ரவரி 1 அன்று டெல்லியில் நடந்தது. அக்கூட்டத்தில் கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதற்கான வரைவுத் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கருத்தை மட்டுமே தெரிவித்தது.
- தமிழ்நாடு அரசின் பிரதிநிதியும் பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான சந்தீப் சக்சேனா, இது குறித்தான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, வரைவுத் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கக் கூடாது என மறுப்பைப் பதிவுசெய்துள்ளார். இதன் பிறகுதான் தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகம் மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச் சதியாக அரங்கேறத் தொடங்கியிருக்கிறது.
- குறிப்பாக, மத்திய அரசின் சார்பில் ஆணையத்தில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகள் வரைவுத் திட்ட அறிக்கையை விவாதிப்பதற்கு அனுமதி இல்லை என்றால், மத்திய அரசின் நீர்வள ஆணையத்துக்கு அனுப்பி, அணை கட்டுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து கருத்துக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.
- இக்கருத்தைக் கேரளமும் ஏற்றுக்கொண்டதால் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆதரவான பெரும்பான்மைக் கருத்து அடிப்படையில் முடிவெடுத்ததாகக் கூறி, ஆணையம் மத்திய அரசுக்கு வரைவுத் திட்ட அறிக்கையைத் திருப்பி அனுப்பியுள்ளது.
- ஏற்கெனவே, கர்நாடகத்தில் முதலமைச்சராகப் பதவிவகித்த பசவராஜ் பொம்மை மேகேதாட்டு அணை குறித்து மத்திய நீர்வள ஆணையத்துக்கு 2021இல் அளித்த வரைவுத் திட்ட அறிக்கையை விவாதிப்பதற்கோ அது குறித்துக் கருத்துச் சொல்வதற்கோ அதிகாரம் இல்லை எனக் கூறி, அறிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.
- மேலும், மேகேதாட்டு அணை பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைத் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 2021இல் நேரில் சந்தித்து வலியுறுத்தியதன் அடிப்படையில், அணை கட்டுமான வரைவுத் திட்ட அறிக்கை குறித்து விவாதிப்பதை ஏற்க மாட்டோம் என கேரள முதலமைச்சர் சார்பில் கடிதம் மூலமே ஆணையக் கூட்டத்தில் மறுப்பைப் பதிவுசெய்தது நினைவிருக்கும்.
- இதன் தொடர்ச்சியாக, இம்முறை கேரளமும் கர்நாடகத்துக்கு ஆதரவளித்தது ஏன் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு இசைவு தெரிவித்து, ஆணையத்துக்குத் தடையில்லாச் சான்று வழங்கினால் என்னவாகும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
பறிபோகும் உரிமை
- நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே கிடைக்கும் தண்ணீரைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரம் மட்டுமே ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
- மேலும், ஆணையம் செயல்பாட்டுக்கு வந்த நாள் முதல் 15 ஆண்டுகளுக்கு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில், தீர்ப்புக்கு எதிராகப் புதிய மாற்றங்கள் எதையும் செய்ய இயலாது. மேலும், புதிய அணை கட்டுவது குறித்து விவாதிக்கவோ, கருத்துக் கேட்கவோ, முடிவெடுக்கவோ, ஆணையத்துக்கு அனுமதி இல்லை.
- கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் ஓடும் ஆறுகளும் கட்டப்பட்டுள்ள அணைகளும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பராமரிப்பில் மட்டுமே உள்ளன. ஆனால், அவற்றில் வரக்கூடிய நீர், நிர்வாகம் முழுவதும் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
- இதைக் கருத்தில் கொண்டுதான் ஆணையத்தின் பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மான நகலைத் தீயிட்டுக் கொளுத்தி விவசாய அமைப்புகள் போராடி வருகின்றன. இதற்கிடையே சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆணையத்தின் முடிவு குறித்துக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார்.
- அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட ஆணையத்தின் முடிவைத் தமிழ்நாடு சட்டமன்றம் சட்டவிரோதமானது என அறிவித்து, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் கருத்தாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். மத்திய அரசுக்கும் அரசியல் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
- 2007இல் காவிரி நடுவர் மன்றத்துக்கான இறுதித் தீர்ப்பு வெளியிட்டும் 2013 வரையிலும் அதனை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு காலம் கடத்தியது. அன்று மத்தியில் கூட்டாட்சியிலும், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்திலும் இருந்த திமுக தலைமையிலான அரசு ஆணையத்தை அமைப்பதற்கும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தியது.
- 2011இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக அவசர வழக்குகளைத் தொடுத்ததன் அடிப்படையில், மத்திய அரசு அரசிதழில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கு எதிராகக் கர்நாடகத்துக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி தலைமையிலான அரசும் செயல்பட்டது.
- இதைச் சுட்டிக்காட்டி, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் 2015இல் வழக்கு தொடுக்கப்பட்டு, மத்திய அரசு கர்நாடகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதால் உச்ச நீதிமன்றமே தன் நேரடிப் பார்வையில் ஆணையத்தை அமைக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார்.
- இதன் அடிப்படையில், 2018இல் உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், புதிய அணை கட்டவோ, அது குறித்து விவாதிக்கவோ ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. தண்ணீரைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
- மேலும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் மாற்றங்கள் கொண்டுவருவது, மறுபரிசீலனை செய்வது, முறையிடுவது, புதிய அணைகள் கட்டுவது அல்லது தண்ணீர் பகிர்ந்தளிப்பதற்கான அளவீட்டில் மாற்றங்களைச் செய்வது என எதையும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்குச் செய்ய முடியாது.
- இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கடந்த கூட்ட நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது.
அரசு செய்ய வேண்டியது
- காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரி, காவிரி டெல்டா விவசாயிகள் சார்பில் காவிரி ரெங்கநாதன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் உரிய சட்ட அதிகாரம் வழங்கி, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
- அதன் அடிப்படையிலேயே நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஆணையம் அமைக்கப்பட்டுச் செயல்பாட்டில் உள்ளது. எனவே, இதற்கு முழுப் பொறுப்பும் விவசாயிகளுக்குத்தான் உள்ளது. இந்தச் சூழலிலும் தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் கருதிச் சட்ட நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு அவசரமாக மேற்கொள்ளாதது தமிழ்நாடு விவசாயிகளுக்கு மிகுந்த அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
- விவசாயம் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள், 12 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோவதைத் தடுத்து நிறுத்தத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதுவே, தமிழ்நாட்டின் வளர்ச்சியாகவும், அரசியல் அதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாகவும் இருக்க முடியும்!
நன்றி: இந்து தமிழ் திசை (15 – 03 – 2024)