TNPSC Thervupettagam

மேக்கேதாட்டு அணை

March 30 , 2022 860 days 612 0
  • கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • மேக்கேதாட்டு அணை திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கக் கூட மறுத்து வருகிறார் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை.
  • "அணை விவகாரம் குறித்து தமிழக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை' என்று முழக்கம் இடுகிறார்.
  • காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் இவற்றின் உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
  • அண்டை மாநிலங்களின் அனுமதியோ மத்திய அரசின் அனுமதியோ பெறாமல் அணை கட்ட முற்படுவது எந்த வகையில் நியாயம்? கர்நாடக அரசினுடைய இந்தச்செயல்பாடு, தமிழகத்திற்கு இழைக்கப்படுகிற அநீதியாகும்.
  • தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மத்திய அரசு கர்நாடக அரசுக்கு எவ்வித தொழில்நுட்ப அனுமதியோ சுற்றுச்சூழல் அனுமதியோ அளிக்கக் கூடாது என்றும், காவிரிநீர் மேலாண்மை ஆணையம் மேக்கேதாட்டு அணை திட்ட அறிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • காவிரிநீரை தமிழ்நாடு பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், காவிரியில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறி வருவது சர்வாதிகாரப் போக்கு இல்லையா? இதன் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறுகிறது கர்நாடக அரசு.
  • மேக்கேதாட்டில் அணை கட்டி, தமிழகத்திற்கு காவிரிநீர் செல்வதைத் தடுக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்குதான் கர்நாடகத்துக்கு இருக்கிறது.

தமிழகத்திற்கு அநீதி

  • மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டால் காவிரிப் படுகையில் உள்ள 10ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி அழிந்து விடும்.
  • இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மேலும், 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படும். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளவில்லை கர்நாடக அரசு.
  •  "மத்திய அரசில் பத்து ஆண்டு காலம் திமுக அங்கம் வகித்தபோது, காங்கிரஸ் துணையோடு காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கலாம்' என்றும், "அதிமுக, பாஜக அரசின் கூட்டணியில் இருந்தபோது இப்பிரச்னையைத் தீர்த்திருக்கலாம்' என்றும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாநில உரிமைகளை உரசிப் பார்க்கிற செயல்தான் நடந்து கொண்டிருக்கிறது.
  • நடுவர்மன்ற தீர்ப்புக்கும், உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளும் அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டியது தமிழகத்தின் கடமை.
  • சட்டத்தையும், அண்டை மாநில உணர்வுகளையும் மதிக்க மாட்டோம் என்ற முடிவோடு கர்நாடக அரசு செயல்படுவது இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்காதா?
  • கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, "மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை' என்று சொல்வது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருக்கிறது. மேலும், மேக்கேதாட்டு அணை, பெங்களூரு குடிநீர் திட்டம் இவற்றுக்கு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.
  • மேக்கேதாட்டு அணை பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பே, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவது சட்டவிரோத செயல் அல்லவா?

மாயவலை

  • தமிழகத்தின் கடைமடைப் பகுதி வரை பாய்கின்ற காவிரியில் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் கர்நாடகம் அணை கட்ட முயல்வது உச்சநீதிமன்றத்தை மதிக்காத போக்கையே காட்டுகிறது.
  • இன்று நேற்றல்ல, கடந்த பல வருடங்களாகவே கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட முயன்று வருகிறது.1980-ஆம் ஆண்டில் கர்நாடக முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டு ராவ் இருந்தார்.
  • அப்போதுதான் மேக்கேதாட்டில் அணைகட்டும் திட்டத்துக்கு அடித்தளம் போடப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
  • மீண்டும் 2012-இல் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த முனைந்த போது, அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, "கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதை தமிழகம் அனுமதிக்காது. மீறி கட்டினால் சட்டப் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • அந்த மனுவுக்கு பதில் அளித்த கர்நாடக அரசு, "மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டாலும், தமிழகத்திற்கு வழங்கப்படும் காவிரி நீரின் அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது' என்று கூறியது.
  • கர்நாடகத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேறும் நீர், கபினி அணைக்குச் சென்று அங்கிருந்து தமிழக எல்லையான பிலுகுண்டுலு என்ற இடத்திற்கு வருகிறது.
  • பிலுகுண்டுலுவில்தான் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவிடப்படுகிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டினால், தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடைபடாதா?
  • காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும், உரிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு எப்போதுமே திறந்து விட்டதில்லை.
  • கர்நாடகத்தில் அதிக அளவு மழை பொழிந்து அணை நிரம்பி வழிந்தால் மட்டுமே, வேறு வழியின்றி உபரிநீரை தமிழகத்திற்கு திறந்து விடுகிறது.
  • காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் 11 மாவட்டங்கள், குடிநீருக்கும், விவசாயம் சார்ந்த பணிகளுக்கும் காவிரி நீரையே நம்பியிருக்கின்றன.
  • தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்குமான காவிரிநீர் பிரச்னை அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
  • காவிரி நீரில் தமிழகத்திற்கும் உரிமை உண்டு என்று ஒப்பந்தம் இருந்தாலும், கர்நாடக அரசு அதனை ஏற்காமல், "எங்களுக்கு வேண்டிய தண்ணீரே கிடைக்கவில்லை.
  • பின்பு நாங்கள் எப்படி தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியும்? தமிழகத்திற்கு உரிமை உண்டு என்கிற ஒப்பந்தம் எல்லாம் முடிந்து விட்டது' என்று சொல்கிறது. இது எந்த வகையில் நியாயம்?
  • காவிரி பிரச்னையைப் பொறுத்தவரை, கர்நாடகத்தில் குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, சித்தராமையா அனைவரும் ஒரே அணியில் நிற்கிறார்கள்.
  •  தமிழகத்திற்கான தண்ணீரைத் தந்து விடக்கூடாது என்பதற்காக கர்நாடக அரசு பின்னும் ஒரு மாயவலைதான் இந்த மேக்கேதாட்டு அணை பிரச்னை.

வேருக்கு வெந்நீரையும், விவசாயிக்கு கண்ணீரையும்

  • கர்நாடக உள்துறை அமைச்சர் "தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேக்கேதாட்டில் அணை கட்ட தடை விதிக்கவில்லை.
  • ஆகவே, அணை கட்டியே தீருவோம். அணை கட்டும் பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. அணை கட்டுவது குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டோம்' என்கிறார்.
  • நதி ஒரு தேசிய சொத்து. அது உற்பத்தியாகிற இடத்தை விட போய்ச் சேருகிற இடத்திற்குத்தான் அதிக உரிமை இருக்கிறது என்கிறது நதிநீர் தாவா ஷரத்து.
  • நடுவர் மன்ற தீர்ப்பிலும் இது குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், எங்கள் மாநிலத்தில் அணை கட்டுவதற்கு நாங்கள் யாரைக் கேட்க வேண்டும் என்கிறார் பசவராஜ் பொம்மை. ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய போக்கு நல்லதா?
  • கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை 49 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.
  • ஆனால், மேக்கேதாட்டு அணையில் 67.16 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசால் தேக்கி வைக்க முடியும்.
  • இதனால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காத நிலை ஏற்படும். இந்த அடிப்படை உண்மையைக் கூட கர்நாடக அரசு ஏற்க மறுக்கிறது.
  • காவிரிநீர் பிரச்னையில், சென்னை மகாணம் - மைசூர் சமஸ்தான ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு -கர்நாடக அரசு பேச்சுவார்த்தைகள், நடுவர் மன்றத் தீர்ப்புகள், உச்சநீதிமன்ற உத்தரவுகள் என்று பல கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறோம்.
  • நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 192 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
  • அதன்படி கர்நாடக அரசு நடந்து கொண்டிருக்கிறதா? தமிழ்நாட்டிற்கு 174.75 டிஎம்சி தண்ணீர் தானே கிடைக்கிறது?
  • கடந்த ஆண்டுகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருகி வந்தாலும், அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கி விட்டது.
  • துயரத்தை சுமந்து கொண்டிருக்கின்ற விவசாயிகள், தங்கள் கண்ணீரைத் துடைப்பதற்கு ஒரு கரம் நீளுமா, ஆறுதல் வார்த்தை கேட்குமா என்று தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  • இந்த நிலையில் மேக்கேதாட்டு அணை என்கிற இன்னொரு பூதம் வந்து விவசாயிகளை அச்சுறுத்துகிறது.
  • 1970-ஆம் ஆண்டு கணக்கின்படி காவிரியில் கர்நாடகத்தின் நீர்ப்பாசனப் பரப்பு சுமார் 7 லட்சம் ஏக்கர், தமிழ்நாட்டின் நீர்ப்பாசனம் சுமார் 30 லட்சம் ஏக்கர். இன்று கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 25 லட்சம் ஏக்கருக்கும் மேலாக கூடி விட்டது.
  • நீர்த்தேக்கங்கள் மூலமாக 20 லட்சம் ஏக்கர், ஏரிகள், குட்டைகள் மூலமாக 2 லட்சம் ஏக்கர், அணைக்கட்டுகள் மூலமாக 2.67 ஏக்கர் என்று பாசனப் பரப்பை விரிவுபடுத்தியிருக்கிறது கர்நாடகம்.
  • தமிழ்நாட்டின் தற்போதைய காவிரிப் பாசனப் பரப்பு 20 லட்சம் ஏக்கராகக் குறைந்து விட்டது.
  • தமிழ்நாட்டிலிருந்து புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீர், நந்தலாறு, நட்டாறு, வஞ்சியாறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரிவிடையான் ஆறு ஆகிய ஏழு ஆறுகளின் மூலம் கிடைக்கிறது.
  • இதனால் காரைக்கால் பகுதிகளில் விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட புதுச்சேரிக்கு கிடைக்காது.
  • இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கூறுகிறோம்.
  • காவிரி ஆறு கர்நாடகத்தில் 320 கி.மீ. தொலைவும், தமிழகத்தில் 416 கி.மீ. தொலைவும் பயணிக்கிறது என்பதையும், சங்க காலம் முதலே காவிரிக்கு தமிழகத்தோடு தொடர்பு உண்டு என்பதையும் கர்நாடக அரசு புரிந்து கொண்டு, இந்த தொப்புள் கொடி உறவை அறுத்து விடக் கூடாது. வேருக்கு வெந்நீரையும், விவசாயிக்கு கண்ணீரையும் தந்து விடக்கூடாது.

நன்றி: தினமணி (30 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்